ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மக்கள்
வாழ்வோடு பின்னிப்பிணைந்த 200 ஆண்டுகள் பழமையான நெற்களஞ்சியம் அழியும் நிலையில் உள்ளது. அதை
பாரம்பரியச் சின்னமாக பாதுகாக்க ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரிக்கை
விடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் இருந்து ராமேஸ்வரம்
வருபவர்களுக்காக சேதுபதி மன்னர்கள் பல சத்திரங்களைக் கட்டியுள்ளனர். இத்தகைய
சத்திரங்களுக்கு உணவுக்குரிய நெல் வழங்குவதற்காக ஆங்காங்கே நெற்களஞ்சியங்களையும் அமைத்துள்ளனர்.
நெற்களஞ்சியங்கள்
நெற்களஞ்சியத்தை 'இரையாயிரம் கொண்டான்' எனவும்
அழைப்பர். ராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் இரையாயிரம் கொண்டான் என்ற ஒரு
பெரிய நெற்களஞ்சியம் இருந்துள்ளது. ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், அழகர்கோயில், திருப்பாலைத்துறை உள்ளிட்ட சில கோயில்களில்
பழமையான நெற்களஞ்சியங்கள் தற்போதும் உள்ளன.
சேதுநாட்டில் அதிகமான நெல் விளைச்சல்
இருக்கும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும், பாம்பன், ராமேஸ்வரத்திலும்
சிறிய நெற்களஞ்சியங்கள் இருந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை
அழிந்துவிட்டன. இந்நிலையில், மண்டபத்தில் மக்கள் வாழ்வோடு பின்னிப்பிணைந்த
200
ஆண்டுகாலம் பழமையான, அழியும் நிலையில் உள்ள ஒரு
நெற்களஞ்சியம் இன்றும் மக்கள் வழிபாட்டில் உள்ளது என்பது ஆச்சரியமானது.
இதை ஆய்வு செய்த ராமநாதபுரம்
தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இதுபற்றிக் கூறியதாவது,
மண்டபம்
நெற்களஞ்சியம்
தனுஷ்கோடி
செல்லும் யாத்திரிகர்களுக்காக மண்டபத்தில் 2 சத்திரங்கள்
அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. இந்த சத்திரத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில், ராமேஸ்வரம் செல்லும் வழியில்,
சாலை மற்றும் ரயில் பாதையின் இடையில் இந்த நெற்களஞ்சியம் அமைந்துள்ளது.
இதன் அருகில் பிராமணர்கள் குடியிருப்பும் இருந்திருக்கிறது.
மண்டபத்தில்
இருந்து தனுஷ்கோடி வரையிலான பகுதிகளில் அதிக அளவில் சத்திரங்கள் இருந்துள்ளன. இப்பகுதியில் நெல் விளைச்சல் இல்லை. எனவே சேது
நாட்டின் பிற பகுதிகளில் விளைந்த நெல்லை, சேமித்து வைத்து இப்பகுதிகளில்
உள்ள சத்திரங்களுக்கு வழங்குவதற்காக இங்கு நெற்களஞ்சியம் அமைத்திருக்கலாம்.
அமைப்பு
இது
சுமார்
15 அடி உயரமும் 50 அடி சுற்றளவும் கொண்டுள்ளது.
வெயில், மழை, கடல் காற்றால் பாதிக்காத வகையில் வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது கீழே அகன்றும் மேலே குறுகியும் ஒரு குதிர் போன்ற அமைப்பில் உள்ளது.
இதன் சுவர் 3 அடி அகலத்தில் உள்ளது. கடற்கரைப் பாறைக் கற்கள், சுண்ணாம்புச் சாந்து
கொண்டு கட்டப்பட்டுள்ளது.
இதன்
நடுவில் ஒரு சுவர் கட்டி இரு பகுதியாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு
பகுதியிலும் ஒரு ஜன்னல் உள்ளது. இதன்
வடக்குப்பகுதியில் உள்ளே செல்ல 3 அடி உயரம் 2 அடி அகலத்தில் ஒரு வாசல் உள்ளது. இதே அளவிலான வாசல்
நடுவில் உள்ள சுவரிலும் உள்ளது.
கூம்பு
வடிவிலான இதன் மேற்கூரை இடிந்து விழுந்துவிட்டது. இதன்
உள்ளே மரங்கள் வளர்ந்துள்ளன. மழைநீர் சுவரில் படாமல் வழிந்தோடும் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாசல் பகுதியின்
முன்னால் வளைவான சுற்றுச்சுவர் கடற்கரைப் பாறைக் கற்களால் கட்டப்பட்டுள்ளது.
இதன் வெளிப்பகுதியில் விளக்கேற்ற ஒரு மாடக்குழி உள்ளது.
பிரம்மச்சாரிகள்
மன்னர்கள்
காலத்தில் இக்களஞ்சியத்தைப் பாதுகாக்க பிரம்மச்சாரி இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு காவலர்களாக
இருந்த முனியசாமி சன்னியாசி, பிச்சை, கருப்பையா, தொட்டிச்சி ஆகியோரின் சமாதிகள் களஞ்சியத்தின் அருகில் உள்ளன. இவை
களஞ்சியம் கோயிலாக இப்போதும் மக்களால் வழிபடப்படுகின்றன.
இதன் நினைவாக இப்பகுதி மக்களிடம் களஞ்சியம், களஞ்சியராஜா,
களஞ்சியராணி என பெயர் வைக்கும்
வழக்கமும் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாளிதழ் செய்திகள்
மக்கள் தொலைக்காட்சி
No comments:
Post a Comment