Pages

Tuesday 20 July 2021

எருமைப்பட்டி கோவிந்தன் கோவில் வரலாறு

 

மதுரை அழகர் கோவிலிலிருந்து ஒரு தம்பட்டம் மாட்டை (கோவில் மாடு) ஓட்டிக்கொண்டு ஊர் ஊராகப் பயணம் செய்து வந்தார் அந்த முதியவர். அவர் ஓட்டிவந்த வெள்ளை நிற மாட்டிற்கு மேலாடை அணிவிக்கப்பட்டிருந்தது. வளைந்த வாள்போன்ற அதன் கொம்பு வண்ணத் துணிகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அதன் நெற்றியில் நாமம் பூசப்பட்டிருந்தது. அது பார்ப்பதற்கு தேவலோகப் பசுவைப் போன்று அழகாக இருந்தது.

ஒவ்வொரு வீட்டின் முன்பும் அழகர் கோயிலில் குடிகொண்டிருக்கும்  கோவிந்தனின் பெருமையைச் சொல்லி அருள்வாக்கும் கூறிக்கொண்டு வந்தார். சிறு பறையைக் கொட்டி அழகர்மலையான் புகழை பாடலாகப் பாடும்போது தம்பட்ட மாடு இசைக்கேற்ப தலையாட்டும். ஒவ்வொரு வீட்டிலும் அவருக்கு கொடுக்க சொலகில் கொண்டுவரும் நெல்லை தன் நாவால் தடவும். மீதி உள்ள நெல்லை தன் தோளில் கிடக்கும் தானியப் பையில் முதியவர் போட்டுக் கொள்வார்.

இப்படியாக பல ஊர்கள் பயணம் செய்து வந்த அவர் ஒருநாள் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகிலுள்ள எருமைப்பட்டி எனும் ஊருக்கு வந்தார். இது உழுகுடி மக்கள் வாழும் சிறிய ஊர். இங்கு சில வீடுகள் மட்டுமே இருந்தன. இவ்வூரிலும் தம்பட்ட மாட்டுடன் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அருள்வாக்கு கூறி வந்தார்.

அவர் கையில் பெரிய பிரம்பு ஒன்று வைத்திருந்தார். அதன் ஒரு புறம் அவர் உடமைகளை கட்டித் தொங்க விட்டிருந்தார். மறுபுறத்தை தரையில் ஊன்றி அதில் மாட்டின் கயிற்றை கட்டியிருந்தார். தானிய பையில் தலை வைத்து இரவு அவ்வூரில் படுத்திருந்தார்  அவர்.

இரவு முடிந்து காலையில் வேறு ஊருக்குப் புறப்படும் நோக்கில், கையில் பையையும், மாட்டின் கயிற்றையும் எடுத்துக்கொண்டு, தரையில் ஊன்றிய பிரம்பை பிடுங்க, எவ்வளவோ முயன்றும் அவரால் அதை அசைக்கக் கூட முடியவில்லை. இறைவனை வேண்டினார். அருள் வந்து ஆடினார். இவ்வூர் மக்களைக் காக்க கோவிந்தன் வந்து இருப்பதாகவும், சித்திரைமாதம்  திரியாட்டு எடுத்து அழகர் மலைக்கு வரவேண்டும் என அவ்வூர் மக்களுக்கு அருள்வாக்கு கூறிவிட்டு வர் திடீரென காணாமல் போனார்.   

இதை நேரில் பார்த்த அவ்வூரைச் சேர்ந்த மாயழகன் என்பவருக்கு  கோவிந்தனின் அருள் கிடைத்தது. அவர் அப்பகுதி மக்களுக்கு அருள் வாக்கு சொல்லும் கோடாங்கியானார்.

அவ்வூர் கோயிலில் சிலையாய் நிற்கும் மாயழகன் கோடாங்கி பற்றி நம்மிடம் சொல்லத் துவங்கினார் அவ்வூரைச் சேர்ந்த முதுகலை தமிழாசிரியர் சண்முகநாதன்,

ராமநாதபுரம் சேதுபதி ராஜா சேதுநாட்டிலுள்ள கோடாங்கிகளை எல்லாம் அரண்மனைக்கு அழைத்திருந்தார். நீண்ட தலைமுடி, நெற்றியில் விபூதி பட்டை, சந்தன பொட்டின் மீது குங்குமம், கழுத்தில் நிறைய ருத்ராட்ச கொட்டை அடுக்கிய மாலை, இடுப்பில் காவி வேட்டி, வேட்டி நழுவாமல் இருக்க இருக்கிக் கட்டிய துண்டு, பூஜைக்குரிய பொருட்கள் அடங்கிய சிறு பை கலமாய் அமர்ந்திருந்தனர் பல கோடாங்கிகள். அரண்மனையின் அமைச்சர் வந்தார். நம்ம ராஜா வீட்டில் ஒரு சில நாட்களாக துன்பமாக இருக்கிறது. அது என்ன எதனால் நிகழ்ந்தது தெய்வ குத்தம் ஏதேனும் உண்டா வேறு என்ன இதனை நீக்குவதற்கு என்ன பரிகாரம் இருக்கு என்பதை நீங்க சொல்லணும்என்றார்.

யாருக்கும் இதை சரியாக கணிக்கத் தெரியவில்லை. அவர்கள் சொன்ன தீர்வு ராஜாவுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டார். அரண்மனை வெறிச்சோடியது. ராஜாவின் முகம் மட்டும் சோகம் படர்ந்திருந்தது. ராணியின் உடல்நிலை ரொம்ப மோசமாக இருப்பதை கண்ட அரண்மனை மருத்துவன்சாமி... முதுகுளத்தூர் பக்கத்துல எருமைப்பட்டியில மாயழகன் என்கிற ஒரு கோடாங்கி இருக்கானாம்... அவன கூட்டிட்டு வந்தா எல்லாம் சரியாயிடும்னு எனக்குப்படுது” என்று ராஜாவுக்கு கோரிக்கை வைக்க, அடுத்த நிமிடம் ராஜாவின் குதிரை வண்டி எருமைப்பட்டி வந்து சேர்ந்தது.

ராமநாதபுரம் ராஜாவின் கட்டளை. உடனே அரண்மனைக்கு வாங்க என்று குதிரை வண்டியில் வந்து இறங்கிய காவலாளி சொன்னான். ராஜாவின் கட்டளையை ஏற்ற கோடாங்கி மாயழகன் நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு கையில் பைகளையும் எடுத்துக் கொண்டு குதிரை வண்டியில் அமர, புயல் வேகத்தில் அரண்மனை வாயிலை அடைந்தது குதிரைவண்டி.

அரண்மனையே கோடாங்கி மாயழகன் வருகையை எதிர்பார்த்து இருந்தது. ராஜாவின் முகத்தில் சோக ரேகைகள் படர்ந்து கிடந்த. கோடாங்கிக்கு அரண்மனையின் ஆசனம் போடப்பட்டது. ஆனால் அவர் ஆசனத்தில் அமரவில்லை. தான் கொண்டுவந்த கோணிப்பையை எடுத்து தரையில் விரித்தார். மதுரை அழகர்மலையானை நோக்கி உட்கார்ந்து கையில் சோவிகளை இறுக்கிப் பிடித்து தரையில் உருட்டினார். இரண்டு மூன்று தடவை சோவி தரையில் உருண்டு செய்தி சொன்னது கோடாங்கிக்கு. பின்பு அரண்மனையை சுற்றி வந்தார்.

அரண்மனையைச் சுற்றிப் பார்த்தேன் கோளாறு இல்ல. ஆனால் ராணிக்கு சேதாரம் வந்திருக்கு. உடலில் கோளாறு. நோயைச் சொல்லி நோய்க்கு மருந்தும் சொல்லி குறியும் சொல்லி முடித்து திருநீறை அள்ளிக் கொடுத்து ராணிக்குப் பூசுங்க ராஜா என்றார் கோடாங்கி மாயழகன்.

திருநீறைப் பூசிய சில நொடிகளில் ராணி எழுந்து நடந்தாள். அரண்மனையே இன்பத்தில் திளைத்தது. ராஜாவுக்கு ஒரே மகிழ்ச்சி. கோடாங்கி மாயழகனிடம்  ங்களுக்கு என்ன வேணும் கேளுங்க சாமி. என் நாட்டில் ஒரு பகுதியையே தருகிறேன் என்றார் சேதுபதி ராஜா கோடாங்கியிடம்.

எனக்கு எதுவும் வேண்டாம் ராஜா. நீங்க நல்லா இருந்தா போதும். கோவிந்தன் அருளால் நாடு வளம் பெருகும் என்று ஆசி கூறிவிட்டு, கோணிப்பையை எடுத்து சுருட்டிக்கொண்டு தன் பையை தோளில் மாட்டிக் கொண்டு அரண்மனை வாயிலைக் கடந்து குதிரை வண்டியில் ஏறி அமர்ந்தார் கோடாங்கி.

          சில நாட்களுக்குப் பிறகு எருமைப்பட்டிக்கு திடீரென விஜயம் செய்தார் சேதுபதி ராஜா. அங்கு கோவிந்தனுக்கு ஒரு சிறிய கோயில் எடுத்தார். குதிரையில் அமர்ந்த நிலையில் மரத்தால் செய்யப்பட்ட கோவிந்தன் சிலையை கோயிலில் அமைத்து வழிபட்டார். கோடாங்கி மாயழகன் காலத்துக்குப் பின் அவருக்கு கருங்கல்லால் சிலை வைத்து தன் நன்றிக்கடனை செய்துமுடித்தார் சேதுபதி ராஜா.

இடிந்த நிலையில் இருக்கும் இக்கோயிலை நேரில் ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இதுபற்றிக்  கூறியதாவது,

தேக்கு மரத்தாலான கோவிந்தன் சிற்பம் 2 அடி உயரமும், ¾ அடி அகலமும் உள்ளது. காலைத் தூக்கிய நிலையில் உள்ள குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் கோவிந்தன் சிற்பம் இருபுறமும் நம்மைப் பார்ப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. இதன் மேல் கிளி சிற்பம் உள்ளது. கருங்கலக்குறிச்சி என்ற ஊருக்கு அருகில் இருந்த எருமைப்பட்டி தற்போது பேச்சில்லா கிராமமாக உள்ளது. இவ்வூரில் சொல்லப்படும் வரலாற்றுக்குச் சான்றாக இங்குள்ள கோயில், கோவிந்தன், கோடாங்கி மாயழகன் ஆகியோர் சிற்பங்கள் 300 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இதேபோன்ற கோவிந்தன் கோயில் திருப்புல்லாணி அருகில் பள்ளபச்சேரியில் உள்ளது. இக்கோயிலில் ஐந்து கழுமரங்கள் மக்கள் வழிபாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு  அவர் கூறினார்.

கோவிந்தன் மரச்சிற்பமாய் 300 ஆண்டுகளுக்கு மேல் எருமைப்பட்டியில் இருந்து எல்லா மக்களையும் காத்து நிற்கின்றார். காலவோட்டத்தில் கோயில் இடிந்துவிட்ட நிலையிலும், வெயிலிலும் மழையிலும் நனைந்தபடி மக்களுக்கு அருள் தருகிறார் கோவிந்தன். கொண்டையிட்ட தலையுடனும் கும்பிட்ட கைகளுடனும் கோடாங்கி மாயழகன், அழகர்மலையில் வாழும் கோவிந்தனை வடமேற்கு திசை நோக்கி வணங்கியபடி காட்சி தருகிறார் கற்சிற்பமாய். இடிந்துவிட்ட கோயிலும், அழியாத மரச்சிற்பமும், கைகள் கூப்பி வணங்கும் கோடாங்கி மாயழகனின் கற்சிற்பமும் இன்றும் சேதுபதி ராஜாவையும் வரலாற்று நிகழ்வையும் நினைவு படுத்தும் ஆதாரமாக விளங்குகின்றன.

நாளிதழ் செய்திகள்





No comments:

Post a Comment