இராமநாதபுரம்
தொல்லியல் ஆய்வு நிறுவனம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை மாணவர்கள்,
பொதுமக்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் மரபு நடை நிகழ்வை ஒவ்வொரு
மாதமும் நடத்தி வருகிறது. ஒன்பதாம் மரபுநடை நிகழ்வு திருவாடானையில்
27.10.2018 அன்று நடந்தது. மரபு நடை ஒருங்கிணைப்பாளர் நிவாஸ்சங்கர் வரவேற்றார்.
இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்து
ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பேசியதாவது, “ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமான
திருவாடானை ஒன்றியத்தில் மட்டும் கோட்டை என முடியும்
28 ஊர்கள் உள்ளன. இவை நெல் விளையும் கோட்டை என்பதால் இப்பெயர் பெற்றுள்ளன.
வணிகர்
தொடர்பால் இப்பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான சிவன் கோயில்கள் உள்ளன.
இங்கு திருஞானசம்பந்தர் பாடல்பெற்ற ஆடானை நாயகர் கோயில் உள்ளது.
தேவாரப்பாடல்களிலும், கல்வெட்டுக்களிலும் இவ்வூர், ஆடானை என்றே குறிக்கப்படுகிறது. களப்பிரர்,
பாண்டியர் ஆட்சிக்காலத்தில் முத்தூற்றுக்கூற்றம் எனும் நாட்டுப்பகுதியில் இவ்வூர் இருந்துள்ளது. மத்திய
தொல்லியல் துறை படி எடுத்த நான்கு கல்வெட்டுகளில் இரண்டு பிற்காலப் பாண்டியர் காலத்தையும்,
இரண்டு சேதுபதிகள் காலத்தையும் சேர்ந்தவை. முதலாம்
மாறவர்மன் சுந்தரபாண்டியன் கோவிலுக்கு நிலக்கொடை வழங்கியதையும், நெல் தானமாக வழங்கப்பட்டதையும் இவை தெரிவிக்கிறது.
தளவாய் சேதுபதியின் பிரதிநிதியான
திருமலையன் இக்கோவில் பூஜைக்காக ஒவ்வொரு கிராமமும் வரி கொடுக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார். இந்த
வரி கொடுக்காமல் இருக்க கைக்கூலி வாங்கியவர்களை கடுமையாக எச்சரிக்கிறது. முத்து வைரவநாத சேதுபதி காலத்தில் இக்கோவில் எதிரில் சூர்ய புஷ்கரணி எனும்
குளம் வெட்டிய தகவலை தெரிவிக்கிறது. மத்திய தொல்லியல் துறை பதிவு செய்த கல்வெட்டுகள்
எதுவும் தற்போது அங்கு இல்லை. சேதுபதிகள் கால ஓவியங்கள் இங்கு
உள்ளன.
சிவன் சந்நதியின் தெற்கே
தரையில் ஒன்றும், அம்மன் சந்நதியின் வடக்கே தரையில் ஒன்றுமாக
இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. இவை ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாண்டியர்
காலக் கல்வெட்டின் துண்டுக் கல்வெட்டுக்களாக இருக்கலாம். இதில்
தேவன் பொன்னாண்டான், போரிலழகியாள் ஆகிய எழுதப்படிக்கத் தெரியாத
இரு தற்குறிகள் குறிப்பிடப்படுகிறார்கள். நாட்டுக்கணக்கு கூத்தாடுவான்,
சேனாவரையன், களப்பாளராயன், திருவாடானைத் தாரகண், முதலியார் சிஷ்யர்களும்
சிஷ்யர்களின் சிஷ்யர்களும் ஆகிய பெயர்கள் இதில் உள்ளன. இவை நிலக்கொடை
வழங்கிய கல்வெட்டுகளாக இருக்கலாம். மாஞ்சூரில் கி.பி.1296 ஆண்டைச் சேர்ந்த மாறவர்மன்
விக்கிரபாண்டியனின் கல்வெட்டில் களப்பாளராயன் என்பவர்
பெயர் காணப்படுகிறது. ஆடானை என்பதை ஆடா + னை
எனப்பிரித்து ஆடா தொடை செடி அதிகமாகக் காணப்பட்ட பகுதி என்ற பொருளில் இவ்வூர்ப்
பெயர் அமைந்துள்ளதாகக் கொள்ளலாம். மருத மரங்கள் நிறைந்த ஊர் மருதனை எனவும்,
உஞ்சமரங்கள் நிறைந்த பகுதி உஞ்சனை எனவும் அழைக்கப்படுவதை இதற்கு ஆதாரமாகக்
கொள்ளலாம்” இவ்வாறு அவர் பேசினார். திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
உடற்கல்வி இயக்குநர் ரியாஸ்கான் நன்றி கூறினார்.
பின்பு புல்லுகுடி சிவன்கோவிலில் உள்ள
முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் 105 வரிகள்
கொண்ட கல்வெட்டுகளை மாணவர்கள் வாசித்து அறிந்தனர். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி,
திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்
கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment