Pages

Showing posts with label சூலக்கல். Show all posts
Showing posts with label சூலக்கல். Show all posts

Saturday, 1 July 2017

அரசுப்பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த திருவாழிக்கல்



 
திருவாழிக்கல்
எல்லைக்கற்கள்

மன்னர்கள் காலத்தில் கோயில்களின் தினசரி வழிபாட்டுக்காக நிலங்களை தானமாக வழங்குவார்கள்.  இவ்வாறு தானமாக வழங்கும் நிலங்களின் நான்கு எல்லைகளிலும் எல்லைக்கற்கள் நடுவது வழக்கம். சிவன் கோயிலுக்குரிய நிலங்களில் திரிசூலம் பொறிக்கப்பட்ட சூலக்கல்லையும், திருமால் கோயிலுக்குரிய  நிலங்களில் சங்கு சக்கரம் பொறிக்கப்பட்ட திருவாழிக்கல்லையும் எல்லைக்கற்களாக நடுவர்.  திருவாழிக்கல்லை சக்கரக்கல் என்றும் கூறுவர்.

அரைவட்ட வடிவில் உள்ள மதகு

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இராஜ்கண்ணா, விசாலி, விஜய், அபர்ணா ஆகியோர் கள ஆய்வின்போது திருப்புல்லாணியில் உள்ள மதகு குட்டத்தின் அருகில் திருவாழிக்கல், சூரிய சந்திர சின்னங்கள், மகரமீன் சிற்பங்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். 

இம்மன்றப் பொறுப்பாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு இதுபற்றிக் கூறியதாவது, 

திருவாழிக்கல்

திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் தெப்பக்குளத்துக்கு அருகில் ஒரு பெரிய குளம் உள்ளது. இதை மதகுகுட்டம் என்கிறார்கள் (குட்டம் என்பது பெரிய அளவிலான குளம் ஆகும்). மழைநீர் மற்றும் பொன்னங்கழிகானல் நீரோடையிலிருந்து இக்குட்டத்துக்கு தண்ணீர் வரும் வரத்துக் கால்வாயில் ஒரு மதகு உள்ளது. அரைவட்ட வடிவில் உள்ள இதன் வலப்பக்கம் பிறையும், இடப்பக்கம் சூரியனும் பொறிக்கப்பட்டுள்ளது.  மதகின் வெளிப்பகுதி கால்வாயில் சங்கு, சக்கரம், நாமம் பொறிக்கப்பட்ட ஒரு திருவாழிக்கல் நடப்பட்டு உள்ளது. நான்கு அடி உயரம் உள்ள இக்கல்லின் மேல் பகுதி வளைந்து சிகர அமைப்பில் உள்ளது. இதில் உள்ள சக்கரத்தில்  எட்டு ஆரங்கள்  உள்ளன. 
திருவாழிக்கல்லைக் காட்டும் மாணவர்கள் விஜய், ராஜ்கண்ணா, அபர்ணா, விசாலி

  மதகு, கால்வாய், குட்டம் ஆகியவை திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதால் இந்த திருவாழிக்கல் நடப்பட்டுள்ளது. சூரிய சந்திரர் இருக்கும் வரை இத்தான தர்மம் நிலைத்திருக்கும் என்ற பொருளில் மதகின் இருபுறமும் சூரியன் மற்றும் பிறைச் சின்னங்கள் உள்ளன. 

மகரமீன்கள்

கால்வாயில் இருந்து வரும் தண்ணீர் குட்டத்தின் உள்ளே செல்ல மதகின் நடுவில் தூம்பு உள்ளது.  இத்தூம்பின் மேல்பகுதியில் இரு மீன்கள் எதிர் எதிரே இருக்கும் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இம்மீன்களை மகரமீன்கள் என்கிறார்கள். இதனால் இக்குட்டம் மகரக்குட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. சுறாமீன்களையே மகரமீன்கள் என்பார்கள். பகவத்கீதையில் கிருஷ்ணர் மீன்களில் நான் மகரமீனாக இருக்கிறேன் என்கிறார். இங்குள்ள சிற்பத்தில் உள்ள மீன்களின் பற்கள் மட்டும் சுறாமீன்களைப் போல உள்ளன.
தூம்பின் மேல்பகுதியில் மகரமீன்கள் புடைப்புச் சிற்பம்
 தானம்

சேதுபதி மன்னர்களில் கி.பி.1646 முதல் கி.பி.1676 வரை போகலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட திருமலை ரெகுநாத சேதுபதி திருப்புல்லாணி கோயில் தெப்பக்குளம் உள்ளிட்ட கட்டுமானங்களைச் செய்ததாக தளசிங்கமாலை என்ற நூல் கூறுவதால் இந்த குட்டம், மதகு, கால்வாய் ஆகியவையும் அவரது காலத்திலேயே  அமைக்கப்பட்டிருக்கலாம். 
இந்த மதகின் அருகே கல்வெட்டு ஒன்று இருந்து தற்போது அது காணாமல் போயுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மதகுகுட்டம் நிரம்பியபின் மீதமுள்ள தண்ணீர் கோயில் தெப்பக்குளத்துக்குச் செல்லும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.  
மதகு, தூம்பு, திருவாழிக்கல் பின்னணியில் தெரிவது திருப்புல்லாணி கோயில் கோபுரம்

நாளிதழ் செய்திகள்