Pages

Friday 2 September 2016

தாதனேந்தல் வரலாற்றுச் சிறப்புகளும் கிராமத்துப் பாடல்களும் - கு.சினேகா



(இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் 23.08.2016 அன்று ‘நம்ம ஊரு வரலாறு’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாணவர் ஆய்வரங்கத்தில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை)

இக்கட்டுரை ஆசிரியரைப் பற்றி............



இக்கட்டுரை ஆசிரியரான கு.சினேகா, இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி.  இப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் 23.08.2016 அன்று ‘நம்ம ஊரு வரலாறு’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாணவர் ஆய்வரங்கத்தில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை இது. வாய்மொழித் தகவல்கள், களஆய்வு, நேர்காணல், நாணயங்கள், ஊர் பெயராய்வு ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டு மாதங்களாக ஆய்வு செய்து இக்கட்டுரையை எழுதியுள்ளார். இவ்வூரைச் சேர்ந்த சுந்தர்ராஜன், உலகம்மாள், வள்ளி போன்றோரிடம் நேரில் விசாரித்து பல தகவல்களை திரட்டியுள்ளார். இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி மு.பிரேமா, இப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற  பொறுப்பாசிரியர் திரு வே.இராஜகுரு ஆகியோரின் வழிகாட்டுதல்கள் இவரது ஆய்வுக்குத் துணை புரிந்துள்ளன. 


அறிமுகம் 

      இராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது தாதனேந்தல் என்ற ஊர். இவ்வூரில் பூரணி, பொற்கலை இல்லாமல் தனியாக அருள்தரும் பழமையான ஐயனார் கோவில், மருத்துவ சிறப்புமிக்க உகாய் மரம் ஆகியவை காணப்படுகின்றன. பனையும், அரசும் இணைந்து காணப்படும் பல மரங்கள், செம்மண் நிறைந்த மேட்டுப்பகுதி ஆகியவை இவ்வூரின் சிறப்புகள்.   


ஊர் பெயர்க்காரணம்

      தாதனேந்தல் என்னும் இவ்வூரில் பல வருடத்திற்கு முன் தாதர்கள், அதாவது அழகர்கள் என்பவர்கள் வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் தமது தேவைக்காக அக்காலத்தில் ஒரு ஊரணி தோண்டினார்கள் அந்த ஊரணியின் பெயர் காலாங்கரை. அவர்கள் வழிபடுவதற்காக இரு கோவில்கள் அமைத்தார்கள். அக்கோவிலின் பெயர்கள் பெருமாள் கோவில், ஐயனார் கோவில். இவர்கள் இந்த ஊரில் வாழ்ந்ததற்கான அடையாளமாக இவ்விரு கோவில்களும், காலாங்கரையும் உள்ளன. காலாங்கரையை இவர்கள் ஏந்தல் என்றும் அழைத்தனர். ஏந்தல் என்றால் நீர்நிலை. அதனால் தான்  இவ்வூர் தாதரேந்தல் என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் தாதனேந்தலாக மாறிவிட்டது. பிறகு மேலச்செல்வனூரில் இருந்து வந்த மக்கள் மோட்டுப்பனை என்னும் இடத்தில் வாழ்ந்தனர். தாதர்களில் ஒருவர் இதைப் பார்த்துவிட்டு அனைவரையும் இப்போது ஊர் உள்ள இடத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் தாதர்கள் இவ்வூரிலிருந்து வேறு ஊருக்குக் குடி பெயர்ந்து சென்றுவிட்டனர்.

மோட்டுப்பனை 

இந்த இடம் இந்தப் பகுதியிலேயே மிக உயரமானதாக இருக்கிறது. இது  ஆதிமனிதர்கள் வாழ்ந்த பகுதியாக இருக்கலாம். அவர்கள் மிருகங்களை வேட்டையாடுவதற்காகவும் எதிரிகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் இப்பகுதியில் வாழ்ந்து இருந்திருப்பார்கள். மேலும் புயல், வெள்ளத்தில் இருந்து தங்களைப் பாதுகாக்கவும்  இவ்விடத்திற்குச் சென்று இருப்பார்கள் இது அவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இருந்திருக்கும். மேடான பனைகள் நிறைந்த பகுதி என்பதால் இவ்விடம் மோட்டுபனை என அழைக்கப்பட்டிருக்கலாம்.  
 

உகாய் மரம்
மிஸ்வாக் என்ற பெயரில் வரும் பற்பசை இம்மரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதன் பெயர் மிஸ்வாக். இது சிறுநீரக கல்லுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இதன் வேரிலிருந்து எடுக்கப்படும் குச்சிகள் பல் துலக்கப் பயன்படுகின்றன.
இதன் விதை மிளகு போல் காரமுடையது. சங்க இலக்கியமான நற்றிணையின் 66- வது பாடலில் இம்மரம் குறிக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் salvadora persica . இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மரம் இவ்வூர் நொண்டிக் கருப்பணசாமி கோவில் அருகில் காணப்படுகிறது. இம்மரம் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கிறது




சவுக்கு மூங்கில் மரக்காடுகள்

இந்த ஊரில் அக்காலத்தில் சவுக்குமரமும் மூங்கில்மரமும் நிறைய காணப்பட்டன. அவை இப்போது அழிந்துவிட்டன. வறண்டுபோன அந்த இடங்களில் இப்போது  கருவமரங்களும், பனைமரங்களும் அதிகளவில் காணப்படுகின்றன.

இங்குள்ள கோயில்களும் தெய்வங்களும்

·        லாடய்யா கோவில்,
·        மாடய்யா கோவில்,
·        முனியையா கோவில்,
·        நொண்டிக் கருப்பணசாமி கோவில்.
·        கலியமுத்தம்மன் கோவில்.
·        ஐயனார் கோவில்.
·        காளியம்மன் கோவில்.
·        ராக்கச்சியம்மன் கோவில்.
·        உலகாண்டவள் கோவில்.
·        செல்வத்துரை கோவில்.
·        வலம்புரியான் கோவில்.

இங்குள்ள குளங்களின் பெயர்கள் 

·        காலாங்கரை
·        தோப்பூரணி
·        சின்னத்தோப்பூரணி
·        தரவை

காலாங்கரை

        காலாங்கரை  என்பது ஏரிக்கு நீர்கொண்டு வரும் கால்வாய் ஆகும். காலின் (கால்வாயின்) கரை என்பதால் இப்பெயர் பெற்றிருக்கிறது. காலின் (கால்வாயின்) கரையில் அமைந்த ஊருக்கும் காலாங்கரை எனப் பெயர் ஏற்பட்டு இருக்கும். இராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் ஒரு காலாங்கரை உள்ளது. தாதர்களால் இது தோண்டப்பட்டிருக்கலாம். இக்கால்வாய் இராமானுசப் பேரேரிக்கு நீர் கொண்டுவரும் கால்வாயாக இருந்திருக்கலாம்.

தோப்பூரணி

தென்னந்தோப்பு இருந்த இடத்தில் தோண்டி உள்ளதால் இந்த ஊரணிக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். இதை இப்போதும் இந்த ஊரில் உள்ள மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

சின்னத்தோப்பூரணி

அக்காலத்தில் உத்தரவையில் முளைப்பாரி கொட்டும்போது இந்த ஊரணியில் தான் கரகம் எடுப்பதற்க்கு, தண்ணீர் எடுப்பது வழக்கம்.

தரவை

இவ்விடத்தில் மழை பெய்யும் போது தண்ணீர் வந்து தேங்கி நிற்கும். ஆனால் ஆழமே இருக்காது. அதனால் இது தரவை என்று அழைக்கப்படுகிறது.

பழமையான ஆலமரம் 

இந்த ஊரில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. இது 500 ஆண்டு பழமையான மரம். இந்த ஆலமரத்தின் மேல் ஒரு நீண்ட பனைமரம் வளர்ந்துள்ளது. இந்த மரத்தைப்  பார்த்தால் ஒரு பழமையான கோட்டை போல் இருக்கிறது. நீண்ட விழுதுகளுடன் இம்மரம் காணப்படுகிறது.
  

இராஜராஜசோழன் ஈழக்காசு 

இங்கு இராஜராஜசோழன் கால ஈழக்காசு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது 1000 வருடத்திற்கு மேல் பழமையானது. கி.பி.10 நூற்றாண்டை சேர்ந்த  ஈழக்காசு ஆகும். இங்கே முதுமக்கள் தாழியும், இரும்புத் தாதும் கிடைத்துள்ளன. கி.பி.10 நூற்றாண்டுக்கு பின் பயன்படுத்திய பானை ஓடுகள் இங்கு நிறைய கிடைக்கின்றன.
இக்கிராமத்தில் வழங்கப்படும் பாடல்கள்

கும்மிப்பாட்டு

தானாகண்ணே  தானகண்ணே
முந்தி முந்தி விநாயகராம்
முருகோள் நல்ல சரசுவதி
கந்தனுக்கு முன்பிறந்த
காசி நல்ல கணபதி
ஆவருங்கட்டைய வெட்டுங்கடி – புள்ள
ஆளுக்கொரு கொட்டா கொட்டுங்கடி
ஆடத்தெரியாத மடப்பயலுக்கு
ஆளுக்கொரு துப்பா துப்புங்கடி
பாம்பு இருக்கும் பொந்துக்குள்ள - புள்ள
பயமிருக்கு நெஞ்சுக்குள்ள
தட்டக் காட்டு பயலுக
பொண்ணு கேட்டு வந்தாங்க
மொட்ட மொட்ட குமரிய
வேணாம் முண்ணு சொன்னாங்க.

ஒயில் பாட்டு

தானாகண்ணே  தானாகண்ணே போடு
தன்னாகண்ணே தன்னாகண்ணே
கொட்டுடி கொட்டுடி ராக்காயி - இவ
குனிஞ்சு கொட்டுடி ராக்காயி
குனிஞ்சு கொட்டுனா  குறுக்கு வலிக்கும்
நிமிந்து கொட்டுடி ராக்காயி
தானாகண்ணே தானாகண்ணே - ஒயிலு
தன்னாகண்ணே தன்னாகண்ணே
மோட்டார் போகுது பாருங்கடி
மோட்டார் மோதி போகுது பாருங்கடி
மோட்டார் மேல இருக்குற முனியப்பன் சாமிக்கு
மோதரம் மின்னுரத பாருங்கடி
தானாகண்ணே தானாகண்ணே - ஒயிலு
தன்னாகண்ணே தன்னாகண்ணே
காரு போறத பாருங்கடி
காரு கதறி போறத பாருங்கடி
காருகுள்ள இருக்குற கருப்பண சாமிக்கு
கண்ணாடி மின்னுறத பாருங்கடி - இவ பாருங்கடி
தானாகண்ணே தானாகண்ணே போடு
பாவை படருது பாருங்கடி
பாவை பற்றிப்படருது பாருங்கடி
பாவை பழம் போல நம்மூரு பொண்டுக்கு
பல்லு வரிசைய பாருங்கடி - இவ பாருங்கடி
தானாகண்ணே தானாகண்ணே - ஒயிலு
தன்னாகண்ணே தன்னாகண்ணே
கோவை படருது பாருங்கடி
கோவை கொத்திப் படருது பாருங்கடி
கோவை பழம் போல நம்மூரு பொண்டுக்கு
கொண்டை வரிசைய பாருங்கடி - இவ பாருங்கடி
தானாகண்ணே தானாகண்ணே - ஒயிலு
தன்னாகண்ணே தன்னாகண்ணே.

முடிவுரை

      ஒவ்வொரு ஊருக்கும் சிறப்பாக ஏதாவது ஒன்று இருக்கும். அந்தவகையில் உகாய் மரமும் பெரிய ஆலமரமும் இவ்வூரில் காணப்படுவது இயற்கை இவ்வூருக்கு வழங்கிய கொடையாகவே உள்ளது. அதிக அளவிலான பனை மரங்கள் இவ்வூரின் நீர் வளத்தைப் பாதுகாக்க உதவுகிறது. அதேசமயம் இங்கு அதிகளவில் காணப்படும் கருவை மரங்கள் இவ்வூரின் நீர் வளத்தை கேள்விக்குறியாக்கிவிடும். நமது ஊரின் வரலாற்றை நாம் அறிந்துகொள்வதால் நம் ஊரின் சிறப்பு நமக்குத் தெரியவரும். அதை எப்போதும் காக்கவேண்டும் என்ற உணர்வையும் அது நமக்கு ஏற்படுத்தும்.  

2 comments:

  1. அந்த மாணவிக்கும் உங்ககளுக்கும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. அந்த மாணவிக்கும் உங்ககளுக்கும் பாராட்டுக்கள்

    ReplyDelete