Pages

Saturday 27 August 2016

பொக்கனாரேந்தல் வரலாற்றுச் சிறப்புகள் - பா.அபர்ணா



(இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் 23.08.2016 அன்று ‘நம்ம ஊரு வரலாறு’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாணவர் ஆய்வரங்கத்தில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை) 

இக்கட்டுரை ஆசிரியரைப் பற்றி............
 



இக்கட்டுரை ஆசிரியரான பா.அபர்ணா, இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி.  இப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் 23.08.2016 அன்று ‘நம்ம ஊரு வரலாறு’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாணவர் ஆய்வரங்கத்தில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை இது. வாய்மொழித் தகவல்கள், களஆய்வு, நேர்காணல், ஊர் பெயராய்வு ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டு மாதங்களாக ஆய்வு செய்து இக்கட்டுரையை எழுதியுள்ளார்.  இவ்வூரைச் சேர்ந்த வே.ஜெகநாதன், பா.பானுமதி, துரைராஜ், இராமசாமி ஆகியோரிடம் நேரில் விசாரித்து பல தகவல்களை திரட்டியுள்ளார். இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி மு.பிரேமா, இப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற  பொறுப்பாசிரியர் திரு வே.இராஜகுரு ஆகியோரின் வழிகாட்டுதல்கள் இவரின் ஆய்வுக்கு துணை புரிந்துள்ளன. 



அறிமுகம்


இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணிக்கு கிழக்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பொக்கனாரேந்தல் என்ற ஊர். இங்கு பெருமைமிகு பல கோயில்களும், ஏந்தல்களும், ஊரணிகளும், மருத்துவக் குணமுள்ள சங்கஞ்செடி ஆகியவையும் உள்ளன. 

ஊர்ப்பெயர்க் காரணம்

பொக்கனாரேந்தல் என்பதை பொக்கனார்+ஏந்தல் எனப் பிரிக்கலாம். பொக்கன் என்றால் தோற்றப் பொலியுடையவன் எனப் பொருள். தோற்றப் பொலியுடையவர்களாக அய்யனாரையும், முருகனையும் குறிப்பர். மழைநீரைச் சேமித்து வைக்கும் நீர்நிலை ஏந்தல் எனப்படும். இவ்வூரில் மலைமேல் சாத்துடையார் என்ற அய்யனார் கோவில் உள்ளது. எனவே அய்யனார் பெயரால் இவ்வூர் அமைந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.
மலைமேல் சாத்துடையார் என்ற அய்யனார் கோவில்


கோவில்கள் 
 
Ø  இடர்நீக்கி அம்மன் கோவில்
Ø  புல்லாணி அம்மன் கோவில்
Ø  நொண்டிக் கருப்பணசுவாமி கோவில்
Ø  அய்யனார் கோவில்
Ø  கம்பளத்தார் கோவில்

இடர்நீக்கி அம்மன் கோவில்
 
         இவ்வூர் மக்கள் சிலர் இதனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.   அப்போது ஒரு கல்லை வைத்து ஊர்மக்கள் வணங்கி வந்தனர். இப்போதுதான் புதுச்சிலை வாங்கி ஊர்மக்கள் வழிபட்டு வருகின்றனர்.  
  
புல்லாணி அம்மன் கோவில்

          அக்காலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர், பால் எடுத்துக்கொண்டு  வரும் பொழுது அவர் வந்த பாதையில் ஒரு இடத்தில் மட்டும் மூன்று நாட்களாக பால் சிந்தியது. நான்காம் நாள் அவர் மண்வெட்டியுடன் வந்தார். அன்றும் அதே இடத்தில் பால் சிந்தியது. பால் சிந்திய இடத்தில் மண்வெட்டியை வைத்து வெட்டியவுடன் இரத்தம் அவர் முகத்தில் விழுந்தது. மேலும் தோண்டிய போது ‘புல்லுக்கு முன் பிறந்த புல்லாணி அம்மன்’ சிலை அவ்விடத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அவர் வெட்டும் பொழுது இந்தச் சிலையின் இடது கையில் வெட்டிவிட்டது. அது சிலையின் கையில் எண்ணெய் பத்துப்போட்டதாக இருக்கிறது. பின்பு அச்சிலையை வெளியில் எடுத்து கோவிலாகக் கட்டினர். திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் இருந்து வேறு புதிய புல்லாணி அம்மன் சிலை கொண்டு வந்து கோயிலில் வைத்து ஊர்மக்கள் இப்போது வழிபடுகிறார்கள். பழைய சிலையை இந்த கோவிலையே அடைத்து வைத்திருக்கிறார்கள்.   
    
நொண்டிக் கருப்பணசுவாமி கோவில்

            இந்த சுவாமி குதிரையில் இருந்து இவ்வூரை பாதுகாத்தது. இந்த ஊரில் முளைக்கொட்டு வைத்திருந்தார்கள். ஊர்மக்கள் அனைவரும் கும்மிக்கொட்டிவிட்டு சென்றனர். அப்போது ஒரு சிறுமி மட்டும் தூக்கம் வந்ததனால் அங்கேயே தூங்கிவிட்டாள். பேய் அந்தச் சிறுமியின் குடும்பத்தினரில் ஒருவர் உருவத்தில் வந்து ஊரின் எல்லைக்கு அவளை அழைத்துச் சென்றது. உடனே கருப்பணசுவாமி வந்து பேயை விரட்டிவிட்டு அந்தச் சிறுமியைக் கோவிலுக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தார். பின்பு காலையில் எழுந்து சிறுமி வீட்டுக்குச் சென்றாள். இந்த சிறுமிக்கு இப்போது வயதாகி விட்டது. இன்னும் இவர் இருக்கிறார். 

அய்யனார் கோவில்

             இவ்வூரின் கோவில்களுள் ஒன்று அய்யனார் கோவில். இங்குள்ள அய்யனார் மலைமேல் சாத்துடையார் என்று அழைக்கப்படுகிறார். மழை பெய்யாவிட்டால் இந்த சுவாமியை வணங்கினால் மழை பெய்யும் என்றும், இதுவரை வணங்கியதில் மழை பெய்தது என்றும் இவ்வூர் மக்கள் அனைவரும் கூறினர்.
 

தலை உடைந்த நிலையில் உள்ள சமண தீர்த்தங்கரர் சிலை

    இந்த சுவாமி சேதுக்கரை போய்விட்டு திரும்பி இவ்வூர் வழியே வந்துகொண்டிருக்கும் பொழுது இருட்டிவிட்டதனால் இங்கேயே இருந்து சிலையாய் மாறிவிட்டது. இந்தச் சிலையைக் கண்ட ஊர்மக்கள் கோவிலாகக் கட்டி வழிபடுகின்றனர். சேதமடைந்த நிலையில் உள்ள பழமையான கருப்பசாமி சிலை இங்கு உள்ளது. இந்தக் கோவிலின் வெளியே சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது. இதன் தலைப்பகுதி உடைந்து காணாமல் போய்விட்டது. இதில் இடதுகை பாதி உடைந்த நிலையில் உள்ளது.

சங்கஞ்செடி

   அய்யனார் கோயில் முன் சங்கஞ்செடி என்ற  மூலிகைச்செடி உள்ளது. இதன் தாவரவியல் பெயர் Azima tetracantha Lam ஆகும். இதை முட்சங்கான், இசங்கு, உவரிச்சங்கம் எனவும் அழைப்பர். இதன் பழம் சங்கு போன்ற வெள்ளை நிறத்தில் இருப்பதால் இப்பெயர் இதற்கு வந்திருக்கலாம். இதன் இலை, வேர், பழம் ஆகியவை மருத்துவக் குணமுடையவை.
 

     பெரிய அளவிலான பச்சை நிற முட்களைக் கொண்டுள்ள இச்செடியின் தண்டும் பச்சை நிறத்தில் தான் இருக்கிறது. இதன் இலைகள் உறுதியானதாக பளபளப்பாக இருக்கிறது. இதன் மலர்கள் வெண்ணிறமானவை. பூங்கொத்துகளாய் பூப்பவை. இதன் பழங்கள் வெண்ணிறத்தில் கோள வடிவமானவை. இச்செடி பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை பூக்கும். மே முதல் ஜூன் வரை காய்க்கும்.
              இதன் இலையை அரைத்து சொறி, சிரங்கு, புண் இருக்கும் இடத்தில் போட்டால் அவை குணமாகும். இலைச்சாறை குழந்தைகளுக்குக் கொடுத்தால் கபம் குணமாகும். இதன் இலைகளை குடிநீரில் போட்டு வாத நோய்க்கண்டவர்களுக்கு கொடுக்க நலம் பெறுவர். இதன் காய் உப்புத்தன்மையுடையது. ஒரு காய் சாப்பிட்டால் வெண்கலக்குரலில் பேசலாம். அடிக்கடி இந்தக் காயை சாப்பிடக்கூடாது. இதன் வேர்கள் ஹெபாடைடிஸ் ‘பி’ க்கு சிறந்த மருந்தாகும். 

கம்பளத்தார் கோவில்

     கம்பளத்தார் கோவில் கட்டப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தக் கோவிலைக் கட்டியவர்கள் புல்லாணி,மங்கச்சி,காரா ஆகியோர். இங்கு சூலம் இருந்தது. இவர்களின் மகன் விவசாயம் தொடங்கும் போது இந்தக் கோவிலை இடித்துவிட்டார். ஆனால்,இடித்த இடத்தில் சிலை இருக்கிறது.  கம்பளத்தார் என்பவர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்கள் ஆவார். 
        
நீர்நிலைகள்

       இங்கு சீனி ஏந்தல் கண்மாய், உப்பன் ஏந்தல் கண்மாய், மானாகானா கண்மாய், பொக்கனாரேந்தல் கண்மாய் ஆகிய கண்மாய்கள் உள்ளன. சீனி ஏந்தல் கண்மாய் இப்பொழுது வெங்கடரேந்தல் ஊரணி என்று அழைக்கப்படுகிறது. மானாகானா கண்மாய் என்பது கீழக்கரையைச் சேர்ந்த மா.கா. என்ற முஸ்லிமுக்குச் சொந்தமானது. பல ஆண்டுகளாக கோரைப்புல் மண்டிக் கிடந்த  பொக்கனாரேந்தல் என்ற கண்மாயை ஊர்மக்கள் தற்போது விளைநிலமாகப் பயன்படுத்துகிறார்கள்.   கோயில் ஊரணி, மரக்காயர் ஊரணி ஆகிய ஊரணிகளும் இங்குள்ளன.

முடிவுரை 

    இவ்வூரில் ஓலைச்சுவடியும், எழுத்தாணியும் பலர் வைத்திருந்துள்ளனர். இதனால் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் பலர் இங்கு பழங்காலம் முதல் இருந்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது. அநேக மக்களின் தொழிலாக வேளாண் தொழிலே உள்ளது. மழை அதிகம் இல்லாததன் காரணமாக பலர் இன்று வெளிநாடு சென்று வருமானம் ஈட்டுகின்றனர். இதனால் ஊர் முழுவதும் சீமைக்கருவை மரங்களே சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால் இவ்வூரின் நீர் வளமும் நிலவளமும் பாதிப்படைந்துள்ளது. இங்குள்ள கருவை மரங்களை முழுவதுமாக வெட்டி அகற்றிவிட்டு வயல் வரப்பு முழுவதும் பனை மரங்களை நட்டு வளர்த்து இவ்வூரின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ஊர் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும்.
 



5 comments:

  1. பெண்களை கள ஆய்வுப் பணி சம்பந்தப்பட்ட துறையில் ஆர்வம் உண்டாக்க அவர்கள் சார்ந்திருக்கிற சமூகக் கூறுகளான பெற்றோர் ஆசிரியர்கள் விரும்புவதில்லை.
    ஆய்வாளர்கள் சொல்லித் தர முன் வருவதில்லை.
    அவற்றுக்கு இரண்டு காரணங்களைச் சொல்வார்கள்.

    1.களஆய்வு பெண்களுக்கு ஏற்றதல்ல.
    2. திருமணத்தின் பின்னர் பெண்கள் இதைத் தொடர மாட்டார்கள்.

    இதை உடைத்தெரிந்து
    .மாணவிகளுக்கு களஆய்வுப்பணி குறித்து சொல்லித்தந்து
    வழிகாட்டும் உங்களை உங்கள் அமைப்பை பாராட்டுகிறேன்.
    மாணவிகள் சினேகா, அபர்ணா ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பெண்களை கள ஆய்வுப் பணி சம்பந்தப்பட்ட துறையில் ஆர்வம் உண்டாக்க அவர்கள் சார்ந்திருக்கிற சமூகக் கூறுகளான பெற்றோர் ஆசிரியர்கள் விரும்புவதில்லை.
    ஆய்வாளர்கள் சொல்லித் தர முன் வருவதில்லை.
    அவற்றுக்கு இரண்டு காரணங்களைச் சொல்வார்கள்.

    1.களஆய்வு பெண்களுக்கு ஏற்றதல்ல.
    2. திருமணத்தின் பின்னர் பெண்கள் இதைத் தொடர மாட்டார்கள்.

    இதை உடைத்தெரிந்து
    .மாணவிகளுக்கு களஆய்வுப்பணி குறித்து சொல்லித்தந்து
    வழிகாட்டும் உங்களை உங்கள் அமைப்பை பாராட்டுகிறேன்.
    மாணவிகள் சினேகா, அபர்ணா ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. “வில்லால் இலங்கை மலங்கச்சரம் துரந்த
    வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்
    எல்லாரும் என்றன்னை ஏசிடினும் பேசிடினும்
    புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே”
    - பெரிய திருமொழி 9-4-5

    ReplyDelete
  4. திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகனாத பெருமாள் ப்ரும்மோத்ஸவ காலங்களில் சில வழக்கங்கள் கடைப் பிடிக்கப் படுகின்றன.

    அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் காளி ஓட்டம் என்னும் நிகழ்ச்சி நடக்கும். மூன்றாம் நாள் இரவில் கோவிலிலிருந்து மரியாதைகளுடன், தளிகை மற்றும் பூசணிக்காய் (பலியாக – முன்னாள்களில் ஆடோ கோழியோ போகுமாம்) இவற்றை மேளதாளத்துடன் ஆலய அதிகாரிகள் திருப்புல்லாணி ஊரை வலம் வந்து அதன்பின் ஊருக்கு வெளியே சுமார் 2 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த புல்லாணி அம்மன் என்னும் எல்லைக் காவல் தெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபட்டு அதன்பின்னேதான் உரிய நாளில் அங்குரார்ப்பணம் செய்து உத்ஸவம் ஆரம்பிக்கும்.

    அதேபோல, அங்குரார்ப்பண நாளன்று ரக்ஷாபந்தனம் செய்துகொள்ளும் பட்டர், ஸ்தானிகர் இவர்களுக்கு அடுத்தபடியாக இந்தப் புல்லாணி அம்மன் கோவில் பூசாரிக்கும் மரியாதைகள் செய்து வஸ்திர தானம் அளிக்கப் படும்.

    பெரியவர்கள் சிலர் புல்லாணி அம்மனாகத் தான் இங்கு எங்கள் தாயார் முதலில் அவதரித்தாள் என்ற சொல்வதுண்டு. இந்தப் புல்லாணி அம்மன் கோவில் திருப்புல்லாணி ஆதி ஜெகன்னாதப் பெருமாள் கோவிலுக்கும் முந்தியது என்று வந்தது.

    இன்னும் ஒரு கொசுறு தகவல். புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே என்று தினமும் ஸேவிக்கும் அந்தணர்களில் யாருக்கும் புல்லாணி என்று பெயர் கிடையாது. அபூர்வமாக ஓரிரு தெய்வச்சிலைகள் தென்படுவார்கள். ஆனால், இதர ஜாதிகளில், குறைந்த பக்ஷம் பத்தில் ஒருவருக்கு புல்லாணிதான் பெயர்..

    இம்மாதிரி வழக்கங்கள் வேறு எந்த ஊர் உத்ஸவாதிகளில் கடைப் பிடிக்கப் படுகிறது?

    ReplyDelete
  5. ஸ்ரீ மலைமேல் சாத்தார்வுடையார் ஐய்யனார் குலதெய்வம்

    ReplyDelete