Pages

Saturday 13 August 2016

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான பொந்தன்புளி மரங்கள்! இராமநாதபுரத்திற்கு பெருமை சேர்க்கும் இம்மரங்களை பாதுகாத்து பராமரிக்கக் கோரிக்கை - வே.இராஜகுருஇராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பவை ராமேஸ்வரம், ஏர்வாடி, ஓரியூர் உள்ளிட்ட ஆன்மீக தலங்கள் மட்டுமல்ல. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பொந்தன்புளி மரங்களும் தான். 


இதுபற்றி ஆய்வு செய்த திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு கூறியதாவது,
துறைமுகங்கள்
இம்மாவட்டத்தின் கடற்கரை மிக நீண்டது. இங்கு அதிகளவில் உப்பங்கழிகள் காணப்படுகின்றன. இதனால் இங்கு சங்க காலம் முதல் இயற்கையான பல துறைமுகங்கள் செயல்பட்டு வந்திருக்கின்றன. தொண்டி, அழகன்குளம், பெரியபட்டினம், கீழக்கரை, மருங்கூர்ப்பட்டினம், தேவிபட்டினம், இராமேஸ்வரம், தனுஸ்கோடி, பாம்பன், புதுப்பட்டினம், தீர்த்தாண்டதானம், நானாதேசிப்பட்டினம் (தளிர்மருங்கூர்) உள்ளிட்ட பல துறைமுகங்கள் புகழ்பெற்று விளங்கி இருந்துள்ளதை கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.

வெளிநாட்டு வணிகர்கள்
 
 கி.பி.1269 இல் தீர்த்தாண்டதானத்தில் அஞ்சுவன்னம், மணிக்கிராமம், சாமந்தப்பண்டசாலி, தோயாவத்திரச் செட்டிகள், தென்னிலங்கை வளஞ்சியர், கைக்கோளர், தூசுவர், வாணியர், கரையார் ஆகிய வணிகக்குழுவினர் தங்கி இருந்ததாக அக்கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. அழகன்குளம், தொண்டி, பெரியபட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு ரோமானியர்கள், சீனர்கள், அரேபியர்கள் ஆகிய வெளிநாட்டு வணிகர்கள் வணிகம் செய்ய வந்துள்ளதை அப்பகுதியில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த பொருள்கள் நிரூபிக்கின்றன. 

பொந்தன்புளி மரங்கள்
 
இந்நிலையில் ஆப்பிரிக்கா, மடகாஸ்கார், ஆஸ்திரேலியா, அரேபியா  ஆகிய இடங்களை பூர்வீகமாகக் கொண்ட பொந்தன்புளி மரங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த வணிகர்களால் இராமநாதபுரம் பகுதிக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட குதிரை இனங்கள் தவிர பாண்டிய மன்னர்கள் அரேபியாவில் இருந்து பல உயர் ரக குதிரைகளை இறக்குமதி செய்துள்ளனர். இக்குதிரைகளுக்கு தீவனமாக பொந்தன்புளி மரத்தின் இலைகள், கனிகள், காய்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக இம்மரத்தின் விதைகள் பாலைவனப் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு பாண்டிய நாட்டின் பல பகுதிகளில் நடப்பட்டுள்ளன. இம்மரங்கள் சாதாரணமாக 1500 ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழ்பவை.


இராமநாதபுரம் பெரியார் நகரிலும், தேவிபட்டினம் உலகம்மன் கோயிலிலும், இராமேஸ்வரத்திலும், தங்கச்சிமடத்திலும், சேந்தனேந்தலிலும், அமர்ந்த நந்தி வடிவில் அழகன்குளம் கடற்கரையிலும், ஏர்வாடி தர்கா அருகிலும், நயினார்கோயில் அருகில் மும்முடிச்சாத்தானிலும் தற்போதும் இம்மரங்கள் காணப்படுகின்றன. கீழக்கரை, புல்லங்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் இம்மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இம்மரத்தின் பெயரால் கமுதி பகுதியில் பொந்தன்புளி என்று ஒரு ஊர் உள்ளது. ஆனால் இவ்வூரில் இம்மரம் தற்போது இல்லை. 
 
மரத்தின் வரலாறு

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் அடன்சன் என்ற தாவரவியல் அறிஞர் செனிகல் நாட்டில் உள்ள சோர் என்ற தீவில் கி.பி.1749 ஆம் ஆண்டில் இம்மரத்தைக் கண்டுபிடித்தார். இதனால் அவர் பெயரையும் இணைத்து அடன்சோனியா டிஜிடேட்டா (Adansonia Digitata) என்ற தாவரவியல் பெயர் இதற்கு சூட்டப்பட்டது. ஆங்கிலத்தில் இம்மரத்தை போபாப் என அழைக்கிறார்கள்.

மரத்தின் அமைப்பு

இம்மரத்தில் எட்டு வகைகள் உள்ளன. டீ கப் வடிவில் கூட ஒரு வகை உள்ளது. இதன் அடிமரம் டீ கப் போன்ற வடிவத்தில் இருப்பதால் இப்பெயர் பெற்றுள்ளது. 25 மீட்டர் வரையிலும் உயரமாக வளரக்கூடிய இதன் அடிமரத்தின் சுற்றளவு சுமார் 14 மீட்டர் வரை இருக்கும்.  அத்துடன் நேராக உருளை வடிவில் வளர்ந்து உச்சியில் கிளைகளைப் பரப்புகின்றது. ஓராண்டில் ஆறு ஏழு மாதங்கள் வரை இதில் இலைகள் உதிர்ந்து காணப்படும்.

வெண்மை நிறத்தில் இருக்கும் இதன் பூக்கள் கிளையின் நுனியில் பூக்கக்கூடியவை. நீண்ட காம்புகளில் பழுப்பு நிறத்தில் உருவாகும் இதன் காய், பழங்கள் நீண்ட நாட்களுக்கு மரத்திலேயே தொங்கிக் கொண்டிருக்கும். இதன் பழச்சாற்றை அம்மை நோய்க்கும், இலையை அவித்து காய்ச்சலுக்கும், மரப்பட்டைகளை காயங்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் கனியை சர்பத்தாகவும் பயன்படுத்தலாம்.
 
மக்களின் நம்பிக்கைகள்

பண்டைக் கால ஆப்பிரிக்க மக்கள் இந்த மரத்தை தூய்மையின் சின்னமாகக் கருதினார்கள். இதன் கீழே இருப்பவர்கள் ஆபத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என்றும், அதன் நிழலில் பேசி முடிவெடுக்கும் எந்தக் காரியமும் கை கூடும் என்றும் நம்பினார்கள். அதனால் பலர் இந்த மரத்தின் கீழே வாழ்ந்தார்கள். ஒரு சிலர் இந்த மரத்தின் அருகில் தாங்கள் வீடுகளைக் கட்டிக் குடியிருந்தார்கள்.

மரத்தின் சிறப்புகள்ஐவிரல் அமைப்புடைய இலைகள், இயற்கையாக உருவாகக் கூடிய பெரிய அளவிலான பொந்துகள், யானை போன்ற மிகப் பிரமாண்டமான அடிமரம், பயன்தரும் கனிகள், பட்டைகள் ஆகியவை இம்மரத்தின் சிறப்புகள். இதன் பிரமாண்டம், பொந்து போன்ற அமைப்பு, இலைகளின் புளிப்பு சுவை ஆகியவற்றால் இந்த மரத்துக்கு தமிழர்கள் பொந்தன் புளி என பெயர் சூட்டி உள்ளார்கள். இம்மரத்தை யானைமரம், ஆனைப்புளி, பெருக்கமரம், பப்பரப்புளி என பல பெயர்களில் அழைக்கிறார்கள். இது இலங்கையில் மன்னார் உள்ளிட்ட பல இடங்களில் காணப்படுகிறது.


பொந்தன்புளி மரத்தின் வயது ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தபின்பே அதில் பொந்து உண்டாகிறது. சில மரங்களில் உள்ள பொந்துகள் 60 பேர் வரை அமரக்கூடிய அளவிற்கு பெரியதாக இருக்கும். முதிர்ந்த தண்டுகளில் ஏற்படும் துளைகள் மூலம் இம்மரம் ஒரு லட்சம் லிட்டர் வரை தண்ணீரைச் சேர்த்து வைக்கிறது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இம்மரத்தில் துளையிட்டு அதிலுள்ள நீரை அருந்துகிறார்கள். வெளிநாடுகளில் இம்மரங்களைக் கொண்டு நிறைய கதைகள் எழுதி உள்ளார்கள்.மரத்தைப் பாதுகாக்கவேண்டும்இராமநாதபுரம் பெரியார் நகரில் உள்ள மரத்தில் பெரிய அளவிலான பொந்துகள் காணப்படுகின்றன. எனவே இம்மரம் நடப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆகி  இருக்கலாம். 
இம்மரங்களின் பிரமாண்டம் இதில் உண்டாகும் பொந்து ஆகியவை மக்களிடம் பெரிய பயத்தை ஏற்படுத்தி இருந்திருக்கவேண்டும். எனவே இதன் பழம்பெருமை தெரியாத பலர் இம்மரத்தை வெட்டியும், தீ வைத்து எரித்தும் அழித்துள்ளனர். இம்மாவட்டக் கடற்கரை பகுதிகள் முழுவதும் இம்மரங்கள் அதிக அளவில் பரவி இருந்து பின்பு அழிக்கப்பட்டிருக்கலாம்.

 


இம்மரங்கள் காணப்படும் ஊர்களில் எல்லாம் வெளிநாட்டு வணிகர்கள் தங்கி இருந்து வணிகம் செய்ததின் அடையாளமாக இம்மரங்கள் விளங்குகின்றன. இவை ஆயிரம் ஆண்டுகளின் வரலாற்றுக்குச் சான்றாக உள்ளன. தீர்த்தாண்டதானம் மட்டுமின்றி இராமேஸ்வரம், தேவிபட்டினம், தளிர்மருங்கூர் உள்ளிட்ட பல நகரங்களில் வெளிநாட்டு வணிகர்கள் தங்கி இருந்துள்ளனர். தேவிபட்டினம் பகுதியில் அரபுநத்தம் என்று ஒரு பகுதி இருப்பது அங்கு அரேபிய வணிகர்கள் தங்கி இருந்ததை உறுதிப்படுத்துவதாக உள்ளது. பல ஊர்களில் இம்மரங்கள் சுத்தமாக அழிந்துவிட்டதால் வெளிநாட்டு வணிகர்கள் தங்கியிருந்த மற்ற ஊர்களை அறிய இயலாமல் போய்விட்டது. மாநிலம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்டதில் இம்மரங்கள் ராமநாதபுரம் மாவட்டம் தவிர, ராஜபாளையம், மதுரை அமெரிக்கன் கல்லூரி, சென்னை உள்ளிட்ட பிற இடங்களில் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. இது ஒரு அரியவகை மரமாகும்.
ஏற்கனவே இங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க பொந்தன்புளி மரங்களை வேலியிட்டு அழிவிலிருந்து பாதுகாக்கவும், தொடர்ந்து பராமரிக்கவும், புதியதாக பல இடங்களில் பொந்தன்புளி மரங்களை நட்டுவைத்து வளர்க்கவும் வேண்டும் என இளைஞர்களையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.
நாளிதழ் செய்திகள்
 


தினத்தந்தி 

தினமலர்
 

TIMES OF INDIA
 வேந்தர் டிவி

நியூஸ்7 டிவி  


1 comment: