Pages

Sunday 9 October 2016

இராமநாதபுரம் மாவட்டத்தில் 34 வது அகிம்சை நடை

தமிழகத்தில் அழியும் நிலையில் உள்ள தொன்மைச் சிறப்பு வாய்ந்த சமண வழிபாட்டுத்தலங்களைக் கண்டறிந்து அவற்றைப் பாதுகாக்கும் பணியை அகிம்சை நடை என்ற அமைப்பு செய்து வருகிறது. இதன் உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் சமண தடயங்கள் இருக்கும் பகுதிகளுக்குச் சென்று அவற்றை சுத்தம் செய்து பாதுகாக்கும் செயல்பாட்டை உள்ளூர் மக்களுடன் இணைந்து செய்து வருகிறார்கள். 
பிரபுகாந்தி பேசுகிறார்

பாதக்கோயிலை பார்வையிடுகிறார்கள்
 
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே இடையமடத்தில் அழிந்த நிலையில் இருந்த ஒரு சமணப்பள்ளி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இப்பள்ளியை பாதுகாக்கும் நோக்கிலும், (அக்டோபர் 2) உலக அகிம்சை நாளை முன்னிட்டு  தொல்லியல் தடயங்களைப் பற்றி உள்ளூர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டி,  34 ஆவது அகிம்சை நடை இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள சமணத் தடயங்களை காணும் வகையில் அக்டோபர் 1 மற்றும் 2 ஆம் நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

தொல்லியல் ஆய்வாளர் இராஜகுருசமணத்தடயங்கள் பற்றி உரையாற்றுகிறார்

     முதல் நாள் அன்று அனுமந்தக்குடி, இடையமடம் சமணப்பள்ளிகள், திருப்புல்லாணியில் ஆற்றின் கால்வாயில் மூழ்கிய நிலையில் இருக்கும் மகாவீரர் சிலையை மீட்கும் செயல்பாடும் திட்டமிடப்பட்டது. இடையமடம் சமணப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், அகிம்சை நடை செயலாளர் தனஞ்செயன், பொருளாளர் சௌதர்மேந்திரன், துணைத்தலைவர் தாஸ் மற்றும் நாகேந்திரன், ஆர்வலர் பிரபுகாந்தி ஆகியோர் பேசினர். இராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மைய தலைவர் இராஜகுரு, செயலாளர் காளிமுத்து ஆகியோர் இம்மாவட்டத்தில் உள்ள சமணத் தடயங்கள் பற்றிப் பேசினர். 

நூல் வெளியிடும் நிகழ்ச்சி
 தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு எழுதிய “இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சமணத்தடயங்கள்” என்ற சிறிய நூல் இடையமடம் சமணப்பள்ளியில் வெளியிடப்பட்டது. அங்கிருந்து திருப்புல்லாணி கோரைக்குட்டம் பகுதியில் ஆற்றில் புதைந்த நிலையில் இருந்த மகாவீரர் சிலை, மற்றும் ஒரு இயக்கி சிலையை வெளியில் எடுத்து சுத்தம் செய்தனர். 
சிலையை மீட்கும் பணியில் ஆர்வலர்கள்
சிலையை சுத்தம் செய்யும் பணியில் ஆர்வலர் ஒருவர்
 
வழிபாடு நடத்துகின்றனர்கள்
மீட்கப்பட்ட சிலைகளுடன்
மீட்கப்பட்ட மகாவீரர் மற்றும் இயக்கி சிலைகள்

தந்தி டிவி செய்தி


1 comment:

  1. அகிம்சை நடை பற்றியும் பழமையான தலங்களை பாதுகாப்பது குறித்து அவர்களின் விழிப்புணர்வு செயலாக்கத்தையும் பற்றி அறிந்து கொண்டேன்.

    இராமநாதபுர மாவட்டத்திற்கு முதன் முறையாக (சாயல்குடியில் ஒரு திருமணத்திற்கு) வந்தபோது உத்திரகோசமங்கை, திருப்புல்லானியின் பழமையை அற்ந்து இங்குள்ள கோவில்களுக்கு வந்தேன். தற்போது சமணர்களின் தடங்களைக் (மறைக்கப்பட்ட வரலாறுகள்) குறித்து தேடல் கொண்டிருந்த எனக்கு இவ்வலைப்பூவினை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. மிகத் தொன்மையான இவ்வூர்களுக்கு அதன் பெருமை அறியாமலேயே ஏதோ ஒரு சக்தி அங்கு இழுத்து வந்ததாகவே இப்போது உணர்கிறேன். தமிழ்நாட்டின் மிகப் பழமையான கல்வெட்டு எனத்தேடினாலும், இயல்பாய் சமணத்தின் தாக்கம் அங்கும் வருவதை தவிர்க்க இயலவில்லை. ஆநிரைக் கவரும் தீயர் இனத்தவர்தான் (தமிழ்ப் பழங்குடிகள்) ஒருவேளை களப்பிரர் எனச் சொல்லப்படுபவர்களோ?
    கள்வர். வடமொழியில் களப்ர. வேலன் வெறியாட்டத்தின் நீட்சிதான் தெய்யம் கலையோ? பல சிந்தனைகள் என்னுள் ஓடுகிறது. அதை முடிக்கிவிட்ட தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete