Pages

Sunday 9 October 2016

கிழக்குக் கடற்கரைப்பகுதிகளில் காணப்படும் மருத்துவச் சிறப்புக்கொண்ட தொன்மையான உகாய் மரங்கள் - வே.இராஜகுருதாதனேந்தல் நொண்டிக் கருப்பன் கோயிலில் உள்ள மரம்
அறிமுகம்
 வறட்சிக்குப் பெயர் பெற்ற இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவை கருவை மரங்கள் தான். வறண்ட மற்றும் நீர்ப்பற்றாக்குறை உள்ள இம்மாவட்டத்தின் பல இடங்களில் மற்ற மரங்கள் வளர்வதில் பல சிக்கல்கள் உள்ளன. எனவே பசுமை போர்த்திய நிலையில் இம்மாவட்ட மக்களின் நல்லதும் கெட்டதுமாக கருவை மரங்கள் விளங்குகின்றன.
 இந்நிலையில் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு மற்றும் மன்றத்தைச் சேர்ந்த மாணவிகள் தாதனேந்தல் சினேகா, திருப்புல்லாணி விசாலி, பொக்கனாரேந்தல் அபர்ணா, முத்துவீரப்பன்வலசை அபிநயா ஆகியோர், மிக அரிதான மருத்துவச் சிறப்பு வாய்ந்த பழமையான உகாய் எனும் குறுமரங்கள் இம்மாவட்டத்தின் சில இடங்களில் காணப்படுவதைக் கண்டறிந்து ஆய்வு செய்தனர். 

இது பற்றி அவர்கள் கூறியதாவது,

மிஸ்வாக்

ஆங்கிலத்தில் மிஸ்வாக் எனவும் அரபியில் அராக் எனவும் அழைக்கப்படும் இம்மரங்கள், திருப்புல்லாணி அருகில் மேலப்புதுக்குடியிலும், இராமநாதபுரம் சந்தவளியான் கோயில் வளாகத்திலும், தாதனேந்தல் நொண்டிக் கருப்பன் கோயிலிலும், கடுகுசந்தைசத்திரம் சோணைக் கருப்பசாமி கோயிலிலும் காணப்படுகின்றன. இவை சுமார் 4௦௦ ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மரங்களாக உள்ளன. மிஸ்வாக் என்ற பெயரில் வரும் பற்பசை இம்மரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் சல்வடோரா பெர்சிக்கா ஆகும். இதன் தாவரவியல் பெயர் கொண்டு பாரசீகம் இதன் தாயகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
 
மேலப்புதுக்குடியில் உள்ள மரம்


அமைப்பு 

உகாய் பாலை நிலத்து மரங்களில் ஒன்று. இது சங்க இலக்கியங்களில் பாலைத்திணைக்குரிய மரமாக குறிப்பிடப்படுகிறது. இதன் அடி மரம் மெலிதாக சொரசொரப்பாக சாம்பல் நிறத்துடன் இருக்கும். இம்மரத்தின் தண்டு  புறாவின் முதுகுக்கு உவமை கூறப்படுகிறது. இம்மரத்தின் காய்கள் உருண்டையாய், சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் பூக்கள் சிறியதாக பசுமை படர்ந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலைகள் முட்டை வடிவில் இருக்கும். இவை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பூத்து மார்ச்சு மாதங்களில் காய்ப்பவை. கடலோர சமவெளிகளிலும், களர் மற்றும் உவர் நிலங்களிலும் இம்மரங்கள் வளரும்.

கடுகுசந்தைசத்திரம் சோணைக் கருப்பசாமி கோயிலில் உள்ள மரம்

பயன்கள் 
 
இம்மரத்தின் இலைகளும், பழங்களும் சிறுநீரக கல்லுக்கும், வீக்கத்துக்கும் மிகச்சிறந்த மருந்தாகும். ஆப்பிரிக்காவில் இதன் இலைகளை உணவாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் வேரிலிருந்து எடுக்கப்படும் குச்சிகள் பல்துலக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காயிலிருந்து வெடித்து உதிரும் விதை மிளகைப்போல் காரம் உடையது. பறவைகள்  இவ்விதைகளை உண்ணும்.


உகாய் மரத்தின் பழம்
 
முகம்மது நபியவர்கள் இதன் குச்சிகளை பல் துலக்கப் பயன்படுத்தியுள்ளார்கள். முஸ்லிம்களில்  பெரும்பாலானோர் இதனை இன்றளவிலும் பல் துலக்கப் பயன்படுத்துகின்றனர். பல முஸ்லிம் பள்ளிவாசல்களில் இம்மரம் வளர்க்கப்படுகிறது. 

இதனை உலக சுகாதார நிறுவனம் வாய்ச் சுத்தத்துக்கான சிறந்த பொருளாகப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறது. இதில் ஏராளமான மருந்துப் பொருட்கள் காணப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

சங்க காலம்
 
உகாய் விதை பற்றிய சுவையான செய்தி ஒன்று சங்க இலக்கியமான நற்றிணையின் 66 ஆவது பாடலில் வருகிறது. இதனைப் பாடிய புலவர் இனிசந்த நாகனார். உகாய் விதையை மேய்ந்த புறா ஒன்று அந்த விதையின் காரத்தால் துடித்ததாம். மரக்கிளையில் ஏறிக்கொண்டு கத்தியதாம் அப்போது அதன் கழுத்து மயிர் சிலிர்த்துகொண்டதாம். அதன் கண் சிவந்துபோயிற்று என பாடலில் கூறப்படுகிறது. சங்ககாலப் புலவர் ஒருவர் பெயர் உகாய்க்குடிகிழார். இவர் உகாய்க்குடி எனும் ஊரைச் சேர்ந்தவர். உகாய் மரத்தின் பெயரால் அவ்வூர் அமைந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.
கபிலர் எழுதிய குறிஞ்சிப்பாட்டில் காட்டப்படும் 99 மலர்களில் ஒன்று பாங்கர். இது உகாய் மரத்தின் பூவையே குறிப்பதாக கூறுவர். 

பாதுகாப்பு 

இவ்வளவு சிறப்பு வாய்ந்த உகாய் மரங்கள் மிக அபூர்வமாக இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாக கடும் வெப்பத்தையும், வறட்சியையும் தாங்கி இம்மரங்கள் செழிப்பாக வளர்ந்து வருகின்றன. பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாக இம்மரத்தின் இலை, வேர், தண்டு, பழம், விதை ஆகியவை பயன்படுகின்றன. இம்மரத்தை இதன் அருமை தெரியாமல் சிலர் வெட்டி எறிந்துவிடுகிறார்கள்.
இம்மரம் வறட்சியைத் தாங்கி வளர்வதால் கடற்கரைப்பகுதிகள் முழுவதும் கருவை மரங்களை வெட்டிவிட்டு இம்மரங்களை வனத்துறை மூலம் பயிரிட்டு வளர்க்கலாம். இதன் மருத்துவப் பயன் மூலம் வருமானமும் கிடைக்கும். நிலத்தை மாசுபடுத்தி சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக இருக்கும் கருவை மரங்களை அழித்து பூமியைக் காத்த புண்ணியமும் நமக்குக் கிடைக்கும். இம்மரங்களை கடற்கரை பகுதிகளில் நடவு செய்து பாதுகாக்கவேண்டும் என தமிழக அரசின் வனத்துறையை  திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
 
இராமநாதபுரம் சந்தவளியான் கோயிலில் உள்ள மரம்

தந்தி டிவி நம்நாடு நிகழ்ச்சியில் - உகாய் மரங்கள் பற்றிய சிறப்பு செய்தி தொகுப்பு - இப்பள்ளி மாணவி தாதனேந்தல் சினேகா பேட்டியுடன்


No comments:

Post a Comment