Pages

Sunday, 9 October 2016

திருடனிடம் இருந்து கோயிலைக் காத்தவருக்கு சிலை வைத்து சிறப்புச் செய்த சேதுபதி மன்னர் ஆய்வு செய்து ஆவணப்படுத்திய அரசு பள்ளி மாணவி



திருப்புல்லாணி கோயிலை பலமுறை கொள்ளையடித்துச் சென்ற திருடனை, தனி ஒருவனாய் பிடித்துக் கொடுத்த முத்துவீரப்பன் என்பவருக்கு சேதுபதி மன்னர் அக்கோயிலில் சிலை வைத்து சிறப்புச் செய்துள்ளார். இதை ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அபிநயா என்ற மாணவி ஆய்வு செய்து ஆவணப்படுத்தியுள்ளார்.
 
மாணவி அபிநயா முத்துவீரப்பன் சிலையுடன்
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு வரலாறுஎன்ற ஆய்வரங்கத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி அபிநயா, தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுருவின் வழிகாட்டுதலில், வாய்மொழித் தகவல்கள், களஆய்வு, நேர்காணல், ஊர் பெயராய்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்து முத்துவீரப்பன் என்பவர் வரலாற்றையும் அவர் சிலையையும் கண்டுபிடித்து ஆவணப்படுத்தியுள்ளார். அதன் விவரம் வருமாறு

அரண்மனை 

திருப்புல்லாணியில் இருந்து ரெகுநாதபுரம் செல்லும் வழியில் முத்துவீரப்பன் வலசைக்கு அருகில் இடிந்த நிலையில் ஒரு அரண்மனை உள்ளது. இது செல்லத்தேவர் என்ற விஜய ரகுநாத சேதுபதியின் தளவாய் தாமோதரம் பிள்ளை என்பவரால் கி.பி.1762 இல் கட்டப்பட்டது.
ஆரம்பத்தில் கோட்டையாகப் பயன்படுத்தப்பட்ட இது பிற்காலத்தில் அரண்மனையாக அந்தப்புரமாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சேதுபதி மன்னரின் 21 மனைவிகளுக்காக இது கட்டப்பட்டதாக இங்குள்ள மக்களின் வாய்மொழி வரலாறு தெரிவிக்கிறது.

முத்து வீரப்பன் 

அரண்மனையின் அருகில் உள்ள வலசை என்ற ஊரைச் சேர்ந்த முத்து வீரப்பன் என்பவர் இங்கு வேலை செய்து வந்தார். மன்னரின் பேச்சை மறுத்ததால் கோபங்கொண்ட மன்னர், “அறுப்பு சாமை” என்ற தானியத்தை நூறு குறுத்தை (ஏக்கர்) நிலத்தில் விதைத்து அதை அவர் கையாலயே அறுத்து அடித்துக் கொடுக்கவேண்டும் என்ற தண்டனை கொடுத்தார். அனைவரும் எதிர்பார்த்ததைவிட அந்த தண்டனையை மிக எளிதாக  முத்து வீரப்பன் செய்ததால் அவரால் தமக்கு ஆபத்து வரலாம் என மன்னர் அவரை சிறையில்  அடைத்தார். அங்கு உணவாக அவருக்கு கஞ்சி, கேழ்வரகு கூழ் கொடுக்கப்பட்டது. ஆறு மாதம் சிறைச்சாலையில் இருந்தும் அவர் முன்பு  இருந்ததை விட பலம் வாய்ந்தவராகவே இருந்தார்.
 
முத்துவீரப்பன்
கோயிலில் தொடர் திருட்டு  

இந்நிலையில் திருப்புல்லாணியில் உள்ள ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில்  தாயார் சிலையில் உள்ள நகைகள் தொடர்ந்து களவாடப்பட்டு வந்தன. இக்கோயிலின் நான்கு திசைகளிலும் நான்கு வாசல்கள் இருந்துள்ளன. இதனால் திருடன் தப்பிச் செல்வது எளிதாக இருந்துள்ளது. திருடனைப் பிடிக்க மன்னர் அதிக ஆட்களை நியமித்தார்.  ஆனாலும் திருட்டு தொடர்ந்து நடந்தது. அவர்களால் திருடனைப் பிடிக்க முடியவில்லை.
முத்துவீரப்பனின் முன்னோர்கள் திருப்புல்லாணி கோவிலுக்கு பற்றுரிமை உடையவர்கள். அக்கோயில் இறைவனை தங்கள் குல தெய்வமாக வழிபட்டவர்கள். எனவே அத்திருடனைப் பிடிக்கும் வாய்ப்பை தனக்குத் தருமாறு முத்துவீரப்பன் மன்னரிடம் கேட்டார். இத்தனை காவலர்கள் இருந்தும் பிடிக்க முடியாத திருடனை உன்னால் எப்படி பிடிக்க முடியும் என சேதுபதி கேட்டார். 

திருடனைப் பிடித்தல்

இக்கோயிலுக்கு உரிமையும் கடமையும் உடையவர்கள் நாங்கள். எங்கள் முன்னோர்கள் இக்கோயிலைக் காத்ததைப் போல காக்க வேண்டியது எங்கள் கடமை என முத்துவீரப்பன் கூறினார். யாராலும் பிடிக்க முடியாத திருடனை நீ பிடித்து விட்டால், இந்தக் கோவில் உள்ள மட்டும் உன் பெயர் சொல்லும் விதத்தில் உன் சிலையை இக்கோயிலில் வைத்து உன்னைப் பெருமைப்படுத்துகிறேன் என்றார் மன்னர்.
கோயிலின் மேற்கு வாசல் கதவுக்குப் பின்னால் மறைந்து நின்ற முத்துவீரப்பன், நகை திருட வந்த  சங்கிலி என்ற திருடனைப் பிடிக்க முயற்சித்த போது அவன் தப்பி ஓடிவிட்டான். 3 கி.மீ. தூரம் துரத்திச் சென்ற அவர் ஆனைகுடி உப்பளத்து ஓடை அருகில் வைத்து தப்பிக்க முடியாத அளவிற்கு அவன் கொண்டைமுடியைப் பிடித்துக் கொண்டார். அங்கு நடந்த சண்டையில் அந்த இடத்திலேயே திருடன் கொல்லப்பட்டான். இதனால் கோயிலுக்கு இருந்த திருட்டுப் பயம் நீங்கியது.

மன்னர் சிறப்பு செய்தல்

திருடனைப் பிடிக்க உதவிய முத்துவீரப்பனுக்கு ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலின் காவல் பொறுப்பை சேதுபதி மன்னர் வழங்கினார். தேர்த் திருவிழாவின் போது, தேர் வடத்தைத் தொட்டு வணங்கி முதலில் இழுக்கும் கௌரவத்தையும்  அவருக்கு வழங்கினார். அவர் மறைந்த பின்பு மன்னர் அளித்த வாக்குப்படி அவருக்கு கோயிலில் சிலை வைத்து சிறப்பித்துள்ளார். அவர் குடியிருந்த வலசை என்ற ஊர் அவர் பெயரில் முத்துவீரப்பன் வலசை என மாற்றப்பட்டது.
முத்துவீரப்பனுக்கு மன்னர் அமைத்த கல் சிலை தற்போது திருப்புல்லாணி கோயிலில்  தாயார் சன்னதியின் வெளிப்பகுதியில் நந்தவனத்தின் உள்ளே உள்ளது. அவர் மறைந்திருந்து திருடனைப் பிடித்த இடத்திலேயே சேதுபதி மன்னர் அச்சிலையை நிறுவியிருப்பதாகத் தெரிகிறது. 

வெளி உலகுக்குத் தெரியாத முத்துவீரப்பன் வரலாறையும் அவருக்கு பெருமை செய்யும் விதமாக கோயிலில் அவருக்கு சிலை அமைத்ததையும் ஆவணப்படுத்திய மாணவி அபிநயாவை திருப்புல்லாணி அரசு மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மு.பிரேமா பாராட்டினார்.  
       

முத்துவீரப்பன் காலத்துக்குப்பின், பாதுகாப்புக் காரணங்களுக்காக  இக்கோயிலின் கிழக்கு வாசல் தவிர மற்ற வாசல்கள் அனைத்தும் சுற்றுச் சுவராக மாற்றிக் கட்டப்பட்டுள்ளது.



முத்துவீரப்பன் சிற்பம், வலது பக்கம் சரிந்த நிலையிலான கொண்டையுடன் தலையில் கட்டியுள்ள தலைப்பாகை கால்வரை நீண்டுள்ளது. இது பெண்களின் கூந்தல் போல உள்ளது. அவர் மேலாடையின்றி இடுப்புக்குக் கீழே மட்டும் ஆடை அணிந்த நிலையில் மார்பில் நீண்ட மாலை அணிந்து காணப்படுகிறார்.






தந்தி டிவி நம் நாடு நிகழ்ச்சியில் வந்த 'முத்துவீரப்பன் கதை'


மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டிய வெளிநாட்டில் வாழும் முத்துவீரப்பன் வலசை கிராம இளைஞர்கள்

 தி இந்து




தினத்தந்தி 

தந்தி தொலைக்காட்சி 
 

 

நியூஸ் 7 டிவி - சிறப்புச்செய்தி தொகுப்பு
 

 

 

No comments:

Post a Comment