Pages

Showing posts with label பயிலரங்கம். Show all posts
Showing posts with label பயிலரங்கம். Show all posts

Saturday, 14 September 2019

திருப்புல்லாணி அரசு பள்ளியில் மாணவர்கள் நடத்திய கல்வெட்டுகள் அறிவோம் பயிலரங்கம்




இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் “கல்வெட்டுகள் அறிவோம்” பயிலரங்கம் மன்றத்தின் செயலர்  வே.இராஜகுரு தலைமையில் 25.07.2019 அன்று நடைபெற்றது. எட்டாம் வகுப்பு மாணவன் து.மனோஜ் அனைவரையும் வரவேற்றார்.


கல்வெட்டுகளில் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், எண்கள் ஆகியவை பல்வேறு நூற்றாண்டுகளில் எவ்வாறு வளர்ச்சி அடைந்து தற்போதைய வரிவடிவம் பெற்றன என எட்டாம் வகுப்பு மாணவிகள்  வி.டோனிகா, க.அபிராமி, மு.பிரவீணா ஆகியோர் பிற மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.  


7ஆம் வகுப்பு மாணவிகள் ச.பிரியதர்ஷினி, ஜீ.ஹரிதா ஜீவா ஆகியோர்  கல்வெட்டுகளின் அமைப்பு, அவை பற்றிய சில சுவையான தகவல்கள் பற்றியும், ஒன்பதாம் வகுப்பு மாணவன் த.முகம்மது பாசில் கல்வெட்டுகளில் காணப்படும் சில சொற்கள் பற்றியும் பேசினர். 7ஆம் வகுப்பு மாணவன் செ.கார்த்திகேயன் நன்றி கூறினார். மாணவிகள் ஜெ.சுஜிதாஸ்ரீ, சே.ஆனந்தி ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக திருப்புல்லாணி ஆசிரியர் பயிற்றுநர் வேல்சாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் தே.டேவிட் லிவிங்டன், அ.முகம்மது சைத், சீ.சீனி முகைதீன் இம்ரான், சு.முனீஸ்வரன், மு.சண்முகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளின் மைப்படிகளை மாணவர்கள் பார்த்து, படித்து அறிந்து கொண்டார்கள்.

நாளிதழ் செய்திகள் 

 





 

 காணொளிகள் 



 

 

 

Sunday, 9 October 2016

திருமலையில் உலக அகிம்சை நாள் விழா பயிலரங்கம்



திருப்புல்லாணி பள்ளி மாணவிகள் பேசுகிறார்கள்
சென்னை அகிம்சை நடை அமைப்பும், இராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையமும், திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றமும் இணைந்து சிவகங்கை மாவட்டம் திருமலையில் உலக அகிம்சை நாள் விழா பயிலரங்கம் நடைபெற்றது.  

தமிழகம் முழுவதும் அழியும் நிலையில் உள்ள சமண வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட தொல்லியல் சின்னங்களைக் கண்டுபிடித்து பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அகிம்சை நடை அமைப்பு மாணவர்களுக்கு தொல்லியல் சின்னங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று, ஏதாவது ஒரு தொல்லியல் சின்னங்களைப் பார்வையிடும் விழிப்புணர்வுப் பயணத்தை நடத்தி வருகிறது.
  
மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2, ஒவ்வொரு ஆண்டும் உலக அகிம்சை நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் சிறப்பை மாணவர்களுக்கு உணர்த்த, சிவகங்கை மாவட்டம் திருமலையில் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

பயிலரங்கத்துக்கு தலைமை தாங்கிய தொல்லியல் ஆய்வாளர் இராஜகுரு, திருமலையில் சுமார் 40௦௦ ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதிமனிதர்கள் வரைந்த பாறை ஓவியங்கள், 22௦௦ ஆண்டுகள் பழமையான சமண முனிவர்கள் தங்கி இருந்த குகைகள், படுக்கைகள் மற்றும் தமிழி கல்வெட்டுகள், கி.பி.8 நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப்பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட சிவனுக்கான குடைவரைக்கோயில், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிற்காலப்பாண்டியர் கால கட்டுமான சிவன்கோயில் ஆகியவற்றின்  சிறப்புகளை எடுத்துக்கூறினார். 

துணைத்தலைவர் தாஸ் பரிசு வழங்குகிறார்


     சமண சமயம் தோற்றுவிக்கப்பட்ட வரலாறு, தீர்த்தங்கரர்களின் பெருமைகள், சமண முனிவர்கள் அறிவுறுத்திய அகிம்சை கொள்கைகள், சமண சமயம் இந்த உலகத்துக்கு வழங்கிய அறக்கருத்துகள் ஆகியவை பற்றி தமிழ் இலக்கியங்களில் உள்ள கருத்துகளை ஆதாரமாகக் கொண்டு துணைத்தலைவர் தாஸ் விளக்கினார்.

காந்தியடிகள் இந்திய விடுதலைக்கான போராட்டத்தின் போது அகிம்சை வழியைப் பின்பற்றி வெற்றி பெற்றதன் மூலம் இது எக்காலத்துக்கும் ஏற்றது என அகிம்சை நடையின் செயலாளர் தனஞ்செயன் பேசினார். 



இதில் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தாதனேந்தல் சினேகா, திருப்புல்லாணி விசாலி, பொக்கனாரேந்தல் அபர்ணா, முத்துவீரப்பன்வலசை அபிநயா ஆகியோர் கலந்து கொண்டு சாதாரண மக்களின் வரலாறுகளை, வாய்மொழித் தரவுகள், களஆய்வுகள் மூலம்  ஆவணப்படுத்த அந்தந்த ஊர் மாணவர்கள் முன்வரவேண்டும் என வலியுறுத்தினர். தங்கள் ஊர் வரலாறை ஆவணப்படுத்திய அனுபவங்களை நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டனர். பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு அகிம்சை நடை அமைப்பினர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரபுகாந்தி, சௌதர்மேந்திரன், நாகேந்திரன், வாசுகி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.







தொல்லியல் ஆய்வாளர் இராஜகுரு திருமலையில் நிகழ்த்திய  உரை