Pages

Saturday 18 August 2018

இலங்கை யாழ்ப்பாணத்தை ஆண்ட இராமநாதபுரம் ஆரியச்சக்கரவர்த்தி திருப்புல்லாணி மரபுநடை நிகழ்ச்சியில் தகவல்இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை பொதுமக்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் மரபு நடை நிகழ்வை ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தி வருகிறது.

இரண்டாவது மரபு நடை நிகழ்வு திருப்புல்லாணியில் 18.03.2018 அன்று நடந்தது. இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு பேசியபோது, “108 திவ்விய தேசங்களில் 44வதாகப் போற்றப்படும் இவ்வூர் கோயிலில் திருமால், ஆதிஜெகந்நாதப் பெருமாளாக அமர்ந்த கோலத்திலும், பட்டாபிஷேக இராமராக நின்ற கோலத்திலும், தர்ப்பசயன இராமராக கிடந்த கோலத்திலும் காட்சி தருகிறார் 
.
இக்கோயில் மூலவர் ஆதிஜெகந்நாதப் பெருமாளை, தெய்வச்சிலையார்’ என்றும், பத்மாசனித் தாயாரை ‘பூமேலிருந்தார்’ என்றும், இராமபிரானை ‘இலங்கை வழி திறந்த பெருமாள்’ என்றும் சீதையை ‘மாதகச் சொக்கப்பிராட்டி’ என்றும்  கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

பவித்திரமாணிக்கப்பட்டினத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கு இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கொடை அளித்த செய்தி சொல்லும் கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது. வைணவக் கோயிலில் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு கொடை வழங்கிய கல்வெட்டு இருப்பதன்மூலம் அக்காலத்திலேயே மத நல்லிணக்கம் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியனின் அமைச்சராகவும், படைத்தளபதியாகவும் இருந்த ஆரியச்சக்கரவர்த்தியின் பெயர் குறிப்பிடும் இரு கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இவர் தேவிபட்டினம் அருகேயுள்ள சக்கரவர்த்திநல்லூரைச் சேர்ந்தவர். படையெடுத்துச் சென்று இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைக் கைப்பற்றினார். பின் இவர் வம்சாவளியினர் 500 ஆண்டுகள் அப்பகுதியை ஆண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது” இவ்வாறு கோயிலின் வரலாற்றுச் சிறப்புகளை விளக்கினர்.

டில்லி சுல்தான்களிடமிருந்து மதுரையைக் கைப்பற்றிய விஜயநகர மன்னர்  வீரகம்பண உடையாரின் முதல் கல்வெட்டு இக்கோயில் இரண்டாவது கோபுரவாசலில் உள்ளதை அனைவரும் வாசித்தனர். கோயில் கோபுரத்தின் முதல்தளத்தில் சேதுபதி மன்னர் காலத்தைச் சேர்ந்த  தேக்கு மரச் சிற்பங்கள், விஜயநகர மன்னர் கால கலைப்பாணியில், கடற்கரை மணற்பாறைகளில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட இராமர், லட்சுமணர், யாளி சிற்பங்களைப் பார்த்து வியந்தனர்.
திருப்புல்லாணி கோயிலில் பலமுறை கொள்ளையடித்துச் சென்ற, சங்கிலி என்ற திருடனை தனி ஒரு ஆளாய் பிடித்து அடித்துக் கொன்ற முத்துவீரப்பன் என்ற மாவீரனைப் பாராட்டி சேதுபதி மன்னர் கோயிலில் வைத்துள்ள அவர் சிலையை அடையாளம் காட்டி அந்த  வரலாற்றை பத்தாம் வகுப்பு மாணவி அபிநயா கூறினார். டச்சுக்காரர்களின் அச்சுறுத்தலைச் சமாளிக்கவும் தங்கள் பாதுகாப்புக்காகவும் சேதுபதி காலத்தில் கி.பி.1764இல் திருப்புல்லாணியில் ஒரு கோட்டை கட்டப்பட்டது. பிற்காலத்தில் அது அரண்மனையாக அந்தப்புரமாக மாறியது. இடிந்த நிலையில் உள்ள அந்த அரண்மனையையும் பார்வையிட்டனர். 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிறுவனத்தின் செயலாளர் சோ.ஞானகாளிமுத்து,  ஒருங்கிணைப்பாளர்கள் மோ.விமல்ராஜ், ஆசிரியர் கு.முனியசாமி, நிவாஸ்சங்கர்  ஆகியோர் செய்திருந்தனர். பரமக்குடி அரசு கல்லூரி பேராசிரியர்கள் இரமேஷ்பாபு, சாந்தம்மாள், வக்கீல் பாலமுருகன், ஆசிரியர்கள் சுதர்சன், கார்த்திகேயன் உள்பட ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.


நாளிதழ் செய்திகள்
 
No comments:

Post a Comment