Pages

Monday 20 August 2018

முதலாம் ராஜேந்திரசோழனின் பெயரில் உருவாக்கப்பட்ட மேலக்கிடாரம் மரபுநடை நிகழ்ச்சியில் தகவல்



இந்திய மன்னர்களில் முதன்முதலில் கடல்கடந்து சென்று வெளிநாடுகளைக் கைப்பற்றி வெற்றிக்கொடி நாட்டியவன் முதலாம் இராஜேந்திரசோழன். கிடாரம் வெற்றிக்குப் பின் கிடாரம் கொண்ட சோழன் என பெயர் பெற்ற அம்மன்னன் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள கிடாரம் கொண்ட சோழபுரம் தற்போது மேலக்கிடாரம் என அழைக்கப்படுகிறது என மரபுநடை நிகழ்ச்சியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை மாணவர்கள், பொதுமக்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் மரபுநடை நிகழ்வை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. ஆறாம் மரபுநடை நிகழ்வு மேலக்கிடாரத்தில் 29.07.2018 அன்று நடந்தது. நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் நிவாஸ்சங்கர் அனைவரையும் வரவேற்றார். 

இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பேசியதாவது,

மேலக்கிடாரத்தில் திருவனந்தீஸ்வரமுடையார் எனும் சிவன் கோயில் உள்ளது. சுற்றுச்சுவர், கோபுரம் இல்லாமல் விமானம் மட்டும் உள்ள சிறிய இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம் என்ற அமைப்பில் உள்ளது. இங்கு பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 9 கல்வெட்டுகள் உள்ளன. கோயில் கருவறையின் மேல்பகுதி கூடு போன்று வெற்றிடமாக உள்ளது. பிரமிடு போன்ற இந்த அமைப்பை சோழர்களின் பல கோயில்களில் காணலாம். பெரிய அளவிலான செங்கற்களைக் கொண்டு கலைநயத்துடன் இக்கோயில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இதரப் பகுதிகள் கடற்கரைப் பாறைகள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. 


கோயில் தெற்குச் சுவரில் உள்ள இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டில் இவ்வூர்ப் பெயர் கிடாரம் கொண்டபுரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தேவிபட்டினம் திலகேஸ்வரர் கோயிலில் உள்ள இம்மன்னனின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் இவ்வூர் கிடாரங்கொண்ட சோழபுரம் என குறிப்பிடப்படுகிறது. இம்மன்னன் இவ்வூர்ப் பெயரில் இருந்த சோழன் என்பதை நீக்கியுள்ளான் என அறிய முடிகிறது.

கிடாரம் கொண்ட சோழன் என முதலாம் ராஜேந்திர சோழன் அழைக்கப்படுகிறான். இவன் கி.பி.1025இல் தனது வலிமையான கப்பற்படையால் தென்கிழக்காசியப் பகுதியைச் சேர்ந்த 14 நாடுகளை வென்றுள்ளான். இதில் கிடாரமும் ஒன்று. தற்போதைய மலேசிய நாட்டின் ஒரு மாநிலமான கெடா முற்காலத்தில் கடாரம், கிடாரம் என அழைக்கப்பட்டுள்ளது. 


கிடாரத்தை அம்மன்னன் வெற்றி கொண்டதைக் கொண்டாடும் விதமாக இவ்வூருக்கு கிடாரம் கொண்ட சோழபுரம் என பெயர் சூட்டியுள்ளான். கோயில் சோழர்காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் அவர்கள் காலக் கல்வெட்டுகள் எதுவும் இங்கு இல்லை. இவ்வூரின் பெயரில் உள்ள புரம் என்பதன் மூலம் இது வணிகர்களின் நகரம் என அறியமுடிகிறது. இக்கோயில் கல்வெட்டில் ‘இந்நகரத்து’ என வருவதால் இது உறுதியாகிறது.

இவ்வூரைச் சேர்ந்த நகரத்து ஆண்டபிரான் எனும் வணிகர் இக்கோயிலுக்கு சந்தியாதீபம் ஒன்று இரவும் பகலும் எரிவதற்கு நன்கொடை வழங்கியுள்ளார். திருஆப்பனூர் ஊரார் இக்கோயிலுக்கு நிலம் தானமாக வழங்கியுள்ளனர். திருஆப்பனூர் கடலாடி அருகில் உள்ளது. மேலச்செழுவனூர், மேலக்கிடாரம் ஆகிய கோயில்களைச் சேர்ந்த சிவபிராமணர், தேவகன்மிகளுக்கு திருப்படி மாற்று உள்ளிட்ட நிவந்தங்களுக்கு குளம் ஒன்று விடப்பட்டுள்ளது.  இவ்வூர் இடைக்குளநாடு எனும் நாட்டுப்பிரிவில் இருந்துள்ளது. மேலச்செழுவனூர், திருஆப்பனூர் ஆகிய ஊர்களும் இதே நாட்டுப்பிரிவில்  இருந்துள்ளன.


கோயிலின் தெற்குப் பகுதியில் ஒரு திடல் உள்ளது. 9-10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பம் இருந்த இப்பகுதியில் இடைக்காலத்தைச் சேர்ந்த செலடன் வகை சீன நாட்டுப் பானை ஓடுகள், இரும்புத்தாதுக்கள், சிவப்பு நிற பானை ஓடுகள், வட்டச்சில்லுகள், சுடுமண் கெண்டியின் நீரூற்றும் பகுதி, செப்புச் சிலையின் சில பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. இவ்வூரில் பழமையான மூன்று சுடுமண் உறைகிணறுகள் இருந்துள்ளன. குளத்தின் வடக்குப்பகுதியில் கொக்கிமுள் ஆதண்டை எனும் ஒரு மூலிகைத் தாவரம் உள்ளது. சிவன்கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையில் நடப்படும் இரண்டு சூலக்கற்கள் இவ்வூரில் உள்ளன இவ்வாறு அவர் கூறினார். கமுதி ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப்பாண்டியன் நன்றி கூறினார்.


நிகழ்ச்சிக்குரிய ஏற்பாடுகளை பொறியாளர் அரியநாயகம், ஆசிரியர் முனியசாமி ஆகியோர் செய்திருந்தனர். முதுகுளத்தூர் கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி, ஆசிரியர் கார்த்திகேயன், நேவி கமாண்டர் நடராஜன், முதுகுளத்தூர் Dy BDO கருப்பையா உள்ளிடோர் கலந்து கொண்டனர். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கோயிலில் இருந்த கல்வெட்டுகளை வாசித்து அறிந்துகொண்டனர். மேலக்கிடாரம் முனைவர் செந்தில்குமார் அனைவருக்கும் பானகம், மதிய உணவு வழங்கினார். மேலக்கிடாரம் பற்றிய சிறு நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.



நாளிதழ் செய்திகள்








No comments:

Post a Comment