இராமநாதபுரம் கோட்டையின் முக்கிய நுழைவுவாயில் அருகே அஷ்டலட்சுமிகளின்
ஓவியங்கள் உள்ளன. மிகவும் தத்ரூபமாக வரையப்பட்ட இவ்வோவியங்கள் சேதுபதிகள் கால
ஓவியச் சிறப்புக்குச் சான்றாக உள்ளன.
![]() |
ஆதிலட்சுமி ஓவியம் |
குழந்தைப்பேறு அருளும் சந்தானலட்சுமி, நோய்நொடி நீக்கி நலம் அருளும் ஆதிலட்சுமி,
அனைத்துப் பாக்கியங்களையும் நல்கும் கஜலட்சுமி, கல்வியும் ஞானமும் வழங்கும் வித்யாலட்சுமி,
ஆற்றல் வழங்கி தைரியம் அருளும் வீரலட்சுமி, செல்வம் தரும் ஐஸ்வர்யலட்சுமி, உணவு தானியங்களை
அருளி பஞ்சம் போக்கும் தான்யலட்சுமி, காரியங்களில் வெற்றி தரும் விஜயலட்சுமி என தனித்தனியாக
எட்டுத் தோற்றங்களில் பல்வேறு செல்வங்களை அருளும் மகாலட்சுமியே அஷ்டலட்சுமி எனப்படுகிறார்.
வாயில் பகுதியில் உள்ள அஷ்டலட்சுமிகள் ஓவியங்களை ஆய்வு செய்த இராமநாதபுரம்
தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ்
ஆகியோர் கூறியதாவது,
சேதுநாட்டை ஆண்டுவந்த சேதுபதிகள் கட்டடம், சிற்பம், ஓவியம், இலக்கியம் ஆகிய
கலைகளில் மிகச்சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர். இம்மாவட்டக் கோயில்கள் அவர்களின் கட்டட,
சிற்பக்கலைக்குச் சான்றாக உள்ளன. தென்னிந்தியாவிலேயே முழுவதும் ஓவியங்களால்
அலங்கரிக்கப்பட்ட ஒரே அரண்மனையாக இராமநாதபுரம் இராமலிங்கவிலாசம் விளங்குகிறது.
இராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் உள்ள கோட்டைவாசல் பிள்ளையார் கோயிலுக்கு பின்புறம் மேற்கே
உள்ள வாசல் தான் இராமநாதபுரம் கோட்டையின்
முதன்மை நுழைவாயிலாக இருந்துள்ளது. இந்த வாயிலில் நுழைந்து வலப்புறம் திரும்பி இராமலிங்கவிலாசம்
அரண்மனை செல்லும் வாயில் தாழ்வாரத்தின் இருபுறமும் அஷ்டலட்சுமியின் ஓவியங்கள்
உள்ளன.
வாயிலின் மேற்கில் கருடன், சந்தானலட்சுமி, ஆதிலட்சுமி, கஜலட்சுமி,
வித்யாலட்சுமி ஓவியமும், கிழக்கில் அனுமன், வீரலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி,
தான்யலட்சுமி, விஜயலட்சுமி ஆகிய ஓவியங்களும் உள்ளன. வாயிலின் அருகில் இருபுறமும் உள்ள
கருடன் அனுமன் ஓவியங்கள் 6 அடி உயரத்திலும்
அஷ்டலட்சுமிகளின் ஓவியங்கள் 5 அடி
உயரத்திலும் உள்ளன.
தாங்கள் தினமும் செல்லும் வாயிலின் இருபுறமும் எட்டு லட்சுமிகளையும் ஓவியமாகத்
தீட்டி அவர்களின் அருள் பார்வை தங்கள் மீது படவேண்டும் என்ற சேதுபதி மன்னர்களின்
விருப்பமே இந்த ஓவியங்கள் தீட்டப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம். அழகுடன் ஆன்மீகமும்
இணைந்த இந்த ஓவியங்கள் தெய்வத்தன்மை பொருந்தியதாக திகழ்கிறது.
சிவப்பு, கறுப்பு, பச்சை, நீலம் ஆகிய வண்ணங்களும் அவற்றை
ஒன்றுடன் கலந்த வண்ணங்களும்
பயன்படுத்தப்பட்டுள்ளன. தெய்வங்களின் பின்னணியில் அழகிய பிரபாவளி அமைப்பு உள்ளது.
அதன் இருபுறங்களிலும் தேவதைகள் மாலைகளை கையில் ஏந்திவாறு உள்ளன.
நாயக்க மன்னர்களின் கலைப்பாணியை பின்பற்றியே சேதுபதிகளின்
இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இராமலிங்கவிலாசம் அரண்மனையில் ஓவியங்கள்
வரையப்பட்ட காலத்திலேயே இந்த ஓவியங்களும் வரையப்பட்டிருக்கவேண்டும். அந்த
ஓவியங்கள் கி.பி.1711 முதல் கி.பி.1725 வரை இராமநாதபுரத்தை ஆண்ட முத்துவிஜயரகுநாத
சேதுபதியால் வரையப்பட்டதால் இந்த ஓவியங்களும் அதே காலத்தில் வரையப்பட்டதாகக்
கருதலாம்.
நாளிதழ் செய்திகள்
No comments:
Post a Comment