Pages

Sunday 19 August 2018

அழியும் நிலையில் கிழவன் சேதுபதி கட்டிய 300 ஆண்டுகள் பழமையான மடம் பாதுகாத்து பராமரிக்கக் கோரிக்கைராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே புதுமடத்தில் கிழவன் சேதுபதி காலத்தில் கட்டப்பட்ட 300 ஆண்டுகள் பழமையான மடம் அழியும் நிலையில் உள்ளது. அதை சுத்தம் செய்து பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்க இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய தினங்களில் ஆறுகளிலும், கடலிலும் நீராடி முன்னோர்களை வணங்குவதை இந்தியர்கள் புண்ணியமாகக் கருதுகிறார்கள். இந்தியா முழுவதும் இருந்து சேதுயாத்திரை வருபவர்கள் தனுஷ்கோடி, ராமேஸ்வரம், தேவிபட்டினம், சேதுக்கரை ஆகிய இடங்களில் புனித நீராடுவது பல நூற்றாண்டு கால வழக்கமாக உள்ளது. 


சேதுபதிகள் ஆட்சிக்காலத்தில் நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் செல்பவர்களுக்கு உணவு, நீர்,  தங்கும் இடம் வழங்க 5 மைல் தூரத்திற்கு ஒன்று என்ற அளவில் பரவலாக மடம், சத்திரங்கள் கட்டப்பட்டன. இதை அவர்கள் தங்களின் தலையாயக் கடமையாகவும், புனிதமாகவும் கருதினர். இவற்றை தனிநபர்களும் மன்னர்களிடம் மானியம் பெற்று நடத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் அருகே புதுமடத்தில் பழமையான ஒரு மடம் உள்ளது என அவ்வூரைச் சேர்ந்த எ.சீமோன் ஜெனிபர் அளித்த தகவலின்படி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, செயலாளர் சோ.ஞானகாளிமுத்து, முனைவர் பட்ட ஆய்வாளர் ஹரிகோபாலகிருஷ்ணன் ஆகியோர் அதை ஆய்வு செய்தனர். இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது,

அமைப்பு

நீளம் 200 அடி, அகலம் 100 அடி, உயரம் 10 அடி என்ற அளவில் உள்ள இம்மடத்தில், தாழ்வாரம், கோயில், தங்குமிடம், உள்முற்றம் ஆகியவை உள்ளன.   நுழைவுவாயில்களில் கஜலெட்சுமி சிற்பங்கள் உள்ளன. இது மங்கலச் சின்னமாக   சேதுபதிகள் கட்டிய அனைத்துக் கட்டிடங்களிலும் காணப்படுகிறது. இங்கு 4 ஜன்னல்களும், இரு வாசல்களும் உள்ளன.

தங்குமிடம் இரண்டு பகுதிகளாக உள்ளன. இரண்டிலும் உள்முற்றங்கள் உள்ளன. அதைச் சுற்றி ஒரு பகுதிக்கு 32 தூண்கள் வீதம் 64 கல்தூண்கள் இரண்டு வரிசைகளில் அமைந்துள்ளன. தாழ்வாரத்தில் 10 தூண்கள் உள்ளன. தூண்கள் சேதுபதிகள் கால தாமரைப்பூ போதிகைகளுடன் உள்ளன. 

கட்டடம் முழுவதும் கடற்கரைப்பாறை, சுண்ணாம்பு சாந்து கொண்டு கட்டப்பட்டுள்ளது. பாறைக் கற்கள் செவ்வகவடிவில் வெட்டப்பட்டு வெளிப்பகுதியில் அழகாக ஒட்டப்பட்டுள்ளன. மடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரையிலிருந்து பாறைகள் வெட்டியெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. பாறைகள் வெட்டி எடுத்த பகுதியை இப்போதும் கடற்கரையில் பார்க்கலாம்.

சிற்பங்கள்

மடத்தின் உள்ளே ஒரு தூணில் கைகூப்பி வணங்கிய நிலையில் உள்ள  ஒருவரின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இது கிழவன் சேதுபதியாக இருக்கலாம். தூண்களில் புல்லாங்குழல் ஊதும் கண்ணன், மயில், லிங்கம், ஆமை, மீன் போன்ற சிற்பங்கள் உள்ளன.
நுழைவுவாயிலின் இடப்பக்கம் சிறிய அனுமன் சிற்பம் உள்ளது. சேதுபதிகள் அனுமன் கொடி உடையவர்கள் என்பதால் இதை அவர்களின் சின்னமாகப் பொறித்திருக்கிறார்கள். தாழ்வாரத்தில் உள்ள ஒரு தூணில் 3 அடி நீளத்தில் ஒரு மீன் சிற்பம் உள்ளது.

கோயில்

விளக்கு வைக்கும் மாடக்குழி அனைத்து அறைகளிலும் உள்ளன. மடத்தின் முன்பகுதியில் ஒரு கோயில் உள்ளது. இதை வனதேவதை கோயில் என்கிறார்கள். ஆனால் அங்கு நாகர் சிற்பம் மட்டுமே உள்ளது.

300 ஆண்டுகள் பழமை

கி.பி.1710இல் கிழவன் சேதுபதியால் இம்மடம் கட்டப்பட்டுள்ளது. அந்த ஆண்டே இம்மடத்துக்காக புதுமடம் கிராமத்தை அவர் தானமாக வழங்கியுள்ளார். புதியதாகக் கட்டப்பட்ட மடம் என்பதால் இம்மடத்துக்கும், ஊருக்கும் புதுமடம் என்பது பெயராகியுள்ளது. இவ்வூரில் அவர்காலத்தில் ஒரு அரசப்பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.

கோரிக்கை

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இம்மடத்தில் தொடக்கப்பள்ளியும், உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வந்துள்ளது. தற்போது பயன்பாட்டில் இல்லாததால், இதன் மேல் பகுதியில் அரசமரம், ஆலமரம், வாகை, மஞ்சனத்தி, இலந்தை, கருவை ஆகிய மரங்கள் வளர்ந்துள்ளன. மேலும் இப்பகுதி மக்களின் குப்பை கொட்டும் இடமாகவும் இது உள்ளது. இவ்வூரின் பெயருக்கும், சேதுபதிகளின் வரலாற்றுக்கும் சான்றாகத் திகழும் இம்மடத்தை சுத்தம் செய்து பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.நாளிதழ் செய்திகள்


No comments:

Post a Comment