Pages

Saturday 18 August 2018

கமுதி அருகே பேரையூரில் கீழடி போன்ற பழமையான தொல்லியல் களம் நுண்கற்காலக் கருவிகள், சங்ககால செங்கல் கட்டுமானம், ரோமன் நாட்டு ரௌலட்டட் ஓடுகள் கண்டுபிடிப்பு




ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூரில் குண்டாற்றின் கரையில் நுண்கற்காலம் (கி.மு.10,000 - கி.மு.3,000) பெருங்கற்காலம் (கி.மு.1,000 – கி.மு.300),  சங்ககாலம் (கி.மு.300 – கி.பி.200) மற்றும் இடைக்காலத்தைச் (கி.பி.300 – கி.பி.1,300) சேர்ந்த நான்கு விதமான தொல்லியல் களங்களில் நுண்கற்காலக் கருவிகள், முதுமக்கள்தாழி,  செங்கல் கட்டுமானம், ரோமன், சீன நாட்டுப் பானை ஓடுகள் ஆகியவற்றை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர். 

          பேரையூரைச் சேர்ந்த ஆசிரியர் கு.முனியசாமி, பொறியாளர் த.சங்கர் ஆகியோர் தங்கள் ஊரில் திடல்காடு, செம்மண்காடு, செங்கமடைராஜா கோயில், கலுங்கு முனியப்பசாமி கோயில் ஆகிய பகுதிகளில் கள மேற்பரப்பாய்வு மூலம் பழங்காலப் பொருள்களைக் கண்டெடுத்து அதுபற்றி இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு களஆய்வு செய்தபின் தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது,

செங்கமடைராஜா கோயில்

          பேரையூர் கண்மாய் கரையில் செங்கமடை ராஜா கோயில் பகுதியில் பெரிய செங்கல்களால் கட்டப்பட்ட கட்டுமானம் உள்ளது. இங்கு கிடைத்த சிறிது உடைந்த ஒரு முழு செங்கலின் அளவு நீளம் 30 செ.மீ., அகலம் 17 செ.மீ., உயரம் 6 செ.மீ. ஆகும். இது கி.பி.1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககால செங்கல் அளவில் உள்ளது. இங்கு கோட்டை இருந்து அழிந்ததாக ஊர்மக்கள்  தெரிவித்தனர். 


மேலும் இங்கு கருப்பு சிவப்பு, ரௌலட்டட் உள்ளிட்ட பானை ஓடுகளுடன் பச்சை, சிவப்பு, பளிங்கு நிற பாசிமணிகள், யானை தந்தத்தால் ஆன ஆபரணம், கருப்பு வளையல், மணி செய்யும் கற்கள், சுடுமண் காதணி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே இங்கு மணிகள் செய்யும் தொழிற்சாலை இருந்திருக்கலாம். 

திடல்காடு 

பேரையூரிலிருந்து ஆனையூர் செல்லும் வழியில் ரெகுநாதகாவிரி கால்வாயின் கரையில் உள்ள திடல்காட்டில் நுண்கற்காலக் கருவிகள், சங்ககாலத்தைச் சேர்ந்த ரௌலட்டட் வகை ரோமானிய பானை ஓடுகள், வழுவழுப்பான மற்றும் அலங்கரிக்கப்பட்ட கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மற்றும் குவளைகள், தக்களி, சுடுமண் புகைப்பான், சாணைக்கல், கவண்கல், இரும்பாலான அம்பு முனைகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக்கழிவுகள், வட்டச் சில்லுகள், சுடுமண் தாங்கிகள், சுடுமண் குழாய், துளையுள்ள பானை ஓடுகள், குறியீடு உள்ள பானை ஓடு, கருங்கல்லால் ஆன நடுவில் குழியுள்ள சிறிய அரைப்புக்கல், குழவிகள், தேய்ப்புக்கற்கள் ஆகியவையும், இடைக்காலத்தைச் சேர்ந்த பழுப்பு நிற செலடன் மற்றும் போர்சலின் வகை சீனப்பானை ஓடுகள், பூண்டு வடிவிலான பெரிய மணி, சுடுமண் கெண்டியின் மூக்குப்பகுதிகள், மூடிகள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதன் வடக்கே செங்கலால் கட்டப்பட்ட கோயில் ஒன்று புதைந்த நிலையில் உள்ளது. இச்செங்கல்கள் நீளம் 26 செ.மீ., அகலம் 14 செ.மீ., உயரம் 5.5 செ.மீ. எனும் அளவில் உள்ளன. எனவே புதைந்துள்ள கோயில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

நுண்கற்காலம் கி.மு.10,000 முதல் கி.மு.3,000 வரையிலானது. நுண்கற்காலக் கருவிகள் அளவில் மிகச்சிறியவை. குவார்ட்ஸ், ஜாஸ்பர், கிரிஸ்டல் போன்ற இப்பகுதிகளில் கிடைக்கும் மிருதுவான கற்களால் செய்யப்பட்டுள்ள இவற்றை அம்புமுனைகள், சிறுகத்திகள், சுரண்டிகளாகப் பயன்படுத்தியுள்ளனர்.

ரோமானிய ரௌலட்டட் ஓடுகள் தட்டு வடிவில் பளபளப்பான கருப்பு நிறத்தில் நடுவில் ரௌலட்டட் வட்டங்களுடன் காணப்படுகின்றன. ரோமானிய, சீன நாட்டுப் பானை ஓடுகள் கிடைத்துள்ளது வெளிநாட்டு வணிகத் தொடர்புக்கு ஆதாரமாக உள்ளது.  

இங்கு நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரையிலான பானை ஓடுகள் கிடைப்பதால் கி.மு.10,000 முதல் கி.பி.1,300 வரையிலான காலத்தில் இது மக்கள் வாழ்விடப்பகுதியாக இருந்துள்ளதை அறியமுடிகிறது.

செம்மண்காடு 

திடல்காட்டின் தெற்கே உள்ள செம்மண்காட்டில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழியின் ஓடுகளும், கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் சிதறிக்கிடக்கின்றன. இதை மக்கள் வாழ்விடப்பகுதியான திடல்காட்டின் இடுகாடு எனலாம்.

கலுங்கு முனியப்பசாமி கோயில்

          அதேபோல் கலுங்கு முனியப்பசாமி கோயில் எதிரே உள்ள திடலில் பெரிய அளவிலான இரு பக்கமும் அரைக்கும் குழி உள்ள அரைப்புக்கல் மற்றும் இடைக்காலப் பானை ஓடுகள் காணப்படுகின்றன.


அகழாய்வு செய்ய கோரிக்கை

          கீழடி போன்ற ஒரு பழமையான தொல்லியல் களமாக பேரையூர் உள்ளது. இங்கு அனைத்து வகையான தொல்பொருட்களும் மேற்பரப்பாய்விலேயே கிடைத்துள்ளன. நுண்கற்காலம் முதல் மக்கள் குடியிருப்பாக இவ்வூர் இருந்து வருகிறது. வைகை போன்ற ஒரு பழமையான ஆறான குண்டாற்றின் கரையில் இருந்து மறைந்த ஒரு தொன்மையான நாகரீகத்தை அகழாய்வு மூலம் முழுமையாக வெளிக்கொண்டுவர மத்திய, மாநில அரசின் தொல்லியல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.


நாளிதழ் செய்திகள்
 










TV NEWS

 

No comments:

Post a Comment