இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன்
நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றமும், இராமநாதபுரம்
தொல்லியல் ஆய்வு நிறுவனமும் இணைந்து திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில்
மரபுச் சின்னங்களைப் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் பயிற்சி முகாமை நடத்தின.
இதில் திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச்
சேர்ந்த எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் 46 பேர் கலந்து
கொண்டு பயிற்சி பெற்றனர்.
மாணவ மாணவிகள் கோயில் தூண்களில் இருந்த சிலைகள்,
கல்வெட்டுகளை சுத்தம் செய்தும், ஒட்டடை, குப்பைகள், கோயில் சுவர், விமானங்களில்
முளைத்திருந்த செடிகள் ஆகியவற்றை அகற்றியும் நமது பண்பாட்டைக் காத்து வரும் மரபுச் சின்னங்களை பாதுகாத்துப் பராமரிக்கும்
முறைகள் பற்றிய செயல்விளக்கப் பயிற்சி பெற்றனர்.
கோயில் சுவர்கள் மற்றும் சிலைகள் மீது திருநீறு, குங்குமம்
தூவுதல், கல்வெட்டுகளில் பெயர் எழுதுதல், கோயில் குளங்களை மாசுபடுத்துதல், சிறுநீர்
கழித்தல் ஆகியவை பாரம்பரியச் சின்னங்களை அழியச் செய்யும் செயல்கள். இவற்றிலிருந்து
அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்பதை வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்களை
மாணவர்கள் கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் வழங்கினர்.
பயிற்சி பெற்ற மாணவ மாணவியரை கோயில் விசாரணைதார் கண்ணன்
பாராட்டினார். பயிற்சிக்கு உரிய ஏற்பாடுகளை தொன்மைப் பாதுகாப்பு
மன்றங்களின் இராமநாதபுரம் கல்வி மாவட்ட ஒருங்கிணப்பாளர் வே.இராஜகுரு,
இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் செயலாளர்
சோ.ஞானகாளிமுத்து, வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் முனியசாமி,
திருப்புல்லாணி பள்ளி சத்துணவு அமைப்பாளர் ஜெயபால் ஆகியோர் செய்திருந்தனர். இப்பயிற்சி
முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், சிற்றுண்டி வழங்கப்பட்டன.
நாளிதழ் செய்திகள்
No comments:
Post a Comment