Pages

Saturday 18 August 2018

திருவாடானை அருகே கள்ளிக்குடியில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிப்பு




ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கள்ளிக்குடியில் கி.பி.16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரையை பாண்டியர்களிடமிருந்து டில்லி சுல்தான்கள் கைப்பற்றியபின் பாண்டியர்களின் ஆட்சி தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நாயக்க மன்னர்கள் காலம் வரை நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ் ஆகியோர் திருவாடானை அருகில் கள்ளிக்குடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் கி.பி.16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கோயில் நுழைவுவாயில் சுவரில் இக்கல்வெட்டு உள்ளது.
இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது,
கல்வெட்டு செய்தி
அரும்பொற்கூற்றத்து கள்ளிக்குடியில் இருக்கும் தீக்கொல்லர் சொக்கர் ஆண்டார் என்பவர் பெருமாள் கோயில் எதிரில் உள்ள குளத்தைத் தானமாக  வெட்டிக் கொடுத்துள்ளார். தீக்கொல்லர் என்பது இரும்புக் கொல்லராக இருக்கலாம். திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீசீவல்லத்தேவர் எனும் பாண்டிய மன்னரின் 27வது ஆட்சியாண்டில் சார்வரி வருஷம் பங்குனி 1 அன்று இந்த தானம் வழங்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேல்பகுதியில் சில வரிகள் அழிந்துள்ளன.
தானத்திற்கு அழிவு செய்தால்...
இத்தானத்திற்கு யாராவது அழிவு செய்தால் அவர்கள் கங்கைக்கரையிலும் சேதுக்கரையிலும் காராம் பசுவைக் கொன்ற பாவம் எய்துவார்கள் என்றும்  திருக்கோயில்களில் திருட்டுப் பாவம் எய்துவார்கள் என்றும் கல்வெட்டின் ஓம்படைக்கிளவி கூறுகிறது.
தானத்திற்கு அழிவு செய்தால் அவர்களுக்கு எவ்வித பாவம் ஏற்படும் என்பதைக் குறிப்பிடும் கல்வெட்டுப் பகுதி ஓம்படைக் கிளவி ஆகும். விஜய நகர, நாயக்கர் காலக் கல்வெட்டு அமைப்பில் இது இருக்கிறது. கூடுதலாக சேதுக்கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவமும் சொல்லப்பட்டுள்ளது. திருப்புல்லாணி அருகில் உள்ள சேதுக்கரை கங்கைக்கரைக்கு இணையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வூரைச் சேர்ந்த கண்ணாளரான பெரிய நாயன் குலசேகரக் கொல்லன் என்பவர் அரசாங்க அதிகாரியான முதலிகள் சொல்லியபடி, இதை எழுதி கையெழுத்திட்டுள்ளார். 
இக்கல்வெட்டில் உள்ள தமிழ் ஆண்டு மற்றும் எழுத்தமைதி கொண்டு இதன் காலம் கி.பி.1541 எனக் கணிக்கமுடிகிறது.
திருவாடானை பாண்டியர்
மன்னரின் 27வது ஆட்சியாண்டில் தானம் வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதன்மூலம் இவர் 27 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்துள்ளார் என அறியமுடிகிறது. ஆனால் இதே பெயரில் தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட ஸ்ரீவல்லபபாண்டியன் 9 ஆண்டுகள் தான் ஆட்சி செய்துள்ளார். எனவே இக்கல்வெட்டு குறிப்பிடும் மன்னர் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டியன் இல்லை என்பதை அறியலாம்.
மேலும் சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட சில கல்வெட்டுகளிலும் பாண்டிய மன்னர் பெயர், ஆட்சியாண்டில்  குழப்பம் உள்ளது. எனவே தென்காசியைப் போல  திருவாடானை அல்லது காளையார்கோயில் பகுதியை தலைமை இடமாகக் கொண்டும்  பாண்டியர்கள்  ஆட்சி செய்திருக்கலாம் என ஊகிக்கமுடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


நாளிதழ் செய்திகள்
 








No comments:

Post a Comment