Pages

Saturday 18 August 2018

பாரம்பரியச் சின்னங்களை அறிந்துகொள்ள மரபுநடை (heritage walk) துவக்கம்




ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் சார்பில் (Ramanathapuram Archaeological Research Foundation)  ராமநாதபுரம்  ராமலிங்கவிலாசம் அரண்மனையின் (Ramanathapuram Ramalinga Vilasam Palace) வரலாற்றுச் சிறப்பை பொதுமக்கள் நேரில் கண்டு அறியச் செய்யும் மரபுநடை நிகழ்ச்சி 18.02.2018 அன்று  நடைபெற்றது.

மரபுநடையின் நோக்கம், மாவட்டத்தில் உள்ள தொன்மைச் சின்னங்கள், அவற்றை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம், தென்னிந்தியாவிலேயே முழுவதும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் போன்ற அமைப்பில் அரண்மனை கட்டப்பட்டுள்ளதையும், திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எல்லீசின் கல்லறைக் கல்வெட்டுகள் இங்கு பாதுகாக்கப்படுவதையும்  ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறினார். 


ஓவியங்களின் அமைப்பு, இயற்கையான மூலிகை வண்ணத்தில் அவை உருவான விதம், 350 ஆண்டுகளாக அவை பாதுக்காக்கப்பட்டு வருவதையும், ராமாயாண, பாகவத காட்சிகள், சேதுபதிகள் வணங்கிய தெய்வங்களின் உருவங்கள், தஞ்சை மராட்டியர்களுடன் போர்க்காட்சிகள், மன்னர் பவனி வருதல், பலவகையான மதுக்குடுவைகள், பெண்களைக் கொண்டு உருவாக்கிய யானை, குதிரை உருவங்கள், கண்ணாடி பார்க்கும் ராணி ஆகிய சிறப்புமிக்க ஓவியங்கள் பற்றியும் அரண்மனை காப்பாட்சியர் ஆசைத்தம்பி, அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவகுமார் ஆகியோர் விளக்கினர்.


நிறுவனத்தின் செயலாளர் ஞானகாளிமுத்து நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் வெள்ளைப்பாண்டியன், ஆசிரியர் முனியசாமி, நிவாஸ்சங்கர் ஆகியோர் செய்திருந்தனர். ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள்  கலந்துகொண்டு அரண்மனையின் சிறப்பைத் தெரிந்து கொண்டனர். 


இதேபோன்று ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைகளில் இம்மாவட்டத்தின் தொன்மைச் சிறப்பு வாய்ந்த இடங்களில் ஒன்றுக்கு நேரில் சென்று அதன் சிறப்புகளை அனைவரும் அறிய உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வே.ராஜகுரு தெரிவித்தார்.




நாளிதழ் செய்திகள்










No comments:

Post a Comment