Pages

Saturday, 18 August 2018

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பெருங்கற்கால நீத்தார் நினைவுச்சின்னம் கண்டுபிடிப்பு




ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து அபிராமம் செல்லும் வழியில் உள்ளது விக்கிரமபாண்டியபுரம். இங்கு குளம் தோண்டியபோது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழி, இரு கருப்பு சிவப்பு நிற குவளைகள், எலும்புகள் ஆகியவை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இடுகாடான நீத்தார்  நினைவுச்சின்னம் என்பது ஆய்வில் தெரியவந்தது. இதுபற்றி இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும் தொல்லியல் ஆய்வாளருமான  வே.ராஜகுரு கூறியதாவது,
பெருங்கற்காலம் என்பது கி.மு.1000 முதல் கி.மு.300 வரையிலான காலத்தைச் சேர்ந்தது. இக்காலத்தில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டு அதனை பயன்படுத்தி வந்துள்ளனர். பெருங்கற்காலத்தில் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. சில இடங்களில் தாழிக்குள் இருந்த இரும்புப் பொருட்கள் கிடைத்துள்ளன.
இக்காலத்தின் ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை ஊருக்கு வெளியே உள்ள காடுகளில் போட்டுவிடுவார்கள். அதை நரி, கழுகு போன்றவை இரையாய் கொண்டபின் அங்கு கிடக்கும் எலும்புகளை சிறிய முதுமக்கள் தாழியில் சேகரித்து, அதோடு அவர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களையும்,  தானியங்களையும் உள்ளே வைத்து மூடி V வடிவ குழியில் வைத்து அடக்கம் செய்வார்கள். முன்னோர்களான நம் தமிழர்கள் எதையும் வீணாக்காமல் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்கள். இறந்த மனிதர்களின் சதைகளைக் கூட பறவை,  விலங்குகளுக்குத் தானமாக வழங்கிய தாராளமனது கொண்டவர்கள்.
விக்கிரமபாண்டியபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழி அளவில் சிறியதாக உள்ளது. இதனுள்ளே எலும்புகளுடன் கருப்பு சிவப்பு நிற குவளைகள் இரண்டும் உள்ளன. இது இறந்தவர் பயன்படுத்தியதாக இருக்கும்.
மலைப் பகுதிகளில் காணப்படும் பெருங்கற்படைச் சின்னங்களை விட சமவெளிப் பகுதிகளில் உள்ள முதுமக்கள் தாழிகள் காலத்தால் முந்தியவை என்பதால்   இவை 3000 ஆண்டுகளுக்கும் மேல்  பழமையானவை எனலாம்.
மேலும் இவ்வூர் பெயர் 13 ஆம் நூற்றாண்டுகளில் மதுரையை ஆண்ட விக்கிரமபாண்டியன் எனும் பாண்டிய மன்னன் பெயரில் அமைந்துள்ளது. முதுகுளத்தூரைச்  சுற்றி உள்ள பல ஊர்களில் முதுமக்கள் தாழிகள் நிலத்தைத் தோண்டும்போது கிடைத்து வருகின்றன. இதனால் இப்பகுதி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் மக்கள் குடியிருந்த பகுதிகள் என அறிய முடிகிறது. எனவே தொல்லியல் துறை இப்பகுதியில் அகழாய்வு செய்தால் மேலும் பல வரலாற்றுச் செய்திகள் வெளிவரும் என்றார்.


நாளிதழ் செய்திகள்
 



No comments:

Post a Comment