இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ்
சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில்
‘மக்கள் தெய்வங்கள்’ என்ற தலைப்பில் வரலாற்றுக்கதை சொல்லும் மன்றம் நடைபெற்றது. ஒன்பதாம்
வகுப்பு மாணவி து.நிஷா கோபிகா வரவேற்றார். ஓவிய ஆசிரியர்
க.அன்பழகன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளித் தலைமையாசிரியர்
கூ.செல்வராஜ் பேசியபோது, பல நூறு ஆண்டுகளுக்கு முன் நம் பகுதியில் வாழ்ந்து மறைந்தவர்கள்
மக்களால் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறார்கள். இத்தெய்வங்களைப் பற்றிய வாய்மொழி வரலாறை மாணவர்கள் தெரிந்துகொண்டு
அவற்றைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
மன்னர்களுக்கு மட்டுமல்ல சாதாரண மக்களுக்கும் வரலாறு உண்டு. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஊருக்காகவும்,
நாட்டுக்காகவும் தங்கள் உயிரை இழந்த பலபேர் மக்களால் போற்றப்படுகிறார்கள்.
கிராமக் கோயில்களின் வழிபாடுகளில் பல வரலாறுகள் உள்ளன. அவற்றை மாணவர்கள் ஆவணப்படுத்தவேண்டும் என மன்றப் பொறுப்பாசிரியர் வே.இராஜகுரு அறிமுக
உரையின் போது கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் 9ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேரும், 7ஆம்
வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவனும் கலந்துகொண்டு வரலாற்றுக் கதைகளை சொன்னார்கள்.
உடன்கட்டை ஏறி இறந்த பெண்களுக்கு கட்டப்பட்ட மாலைக்கோயில்கள் குறித்து
ச.சந்திராஸ்ரீயும், ஆர்.எஸ்.மடையில் உள்ள
வண்ணமிளகு, களஞ்சியம் ஆகிய இரு தெய்வப்பெண்கள் குறித்து து.மனோஜும், அம்மன்கோயில் கிராமத்தில்
உள்ள பாப்பாத்தி அம்மன் குறித்து ச.ஜனனியும், ராமநாதபுரத்தில் ஆர்தர் ஹீபர் தாமஸ் நினைவாகக்
கட்டப்பட்ட கப்பல் வடிவ தேவாலயம் குறித்து அ.முகமது லபிப்பும், கழுமர வழிபாடு குறித்து
ச.ஜாஸ்மினும் கதை சொன்னார்கள்.
ஆறாம் வகுப்பு மாணவன் மு.சண்முகராஜ் நன்றி கூறினார். எட்டாம்
வகுப்பு மாணவி ச.சாஜிஹா பானு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
மாணவர்கள் விசாலி, சுதர்ஸன், முகம்மது நஜிப் ஆகியோர் செய்தனர்.
நாளிதழ் செய்திகள்
சிறந்த தகவல் களஞ்சியம் நன்றி
ReplyDelete