வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை மாணவர்கள், பொதுமக்கள் நேரில்
கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் மரபுநடை நிகழ்வை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு
நிறுவனம் ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. நான்காவது மரபுநடை ஆர்.எஸ்.மங்கலம்
அருகே செங்கமடையில் உள்ள ஆறு இதழ்கள் கொண்ட மலர் போன்ற வடிவில் உள்ள சேதுபதிகள்
கால ஆறுமுகக்கோட்டையில் 19.05.2018 அன்று நடந்தது.
நிறுவனத்தின் செயலாளர் சோ.ஞானகாளிமுத்து அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த ராமநாதபுரம்
தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பேசியபோது,
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில், மங்கலம், கோட்டை என முடியும் ஊர்கள்
அதிகளவில் உள்ளன. மன்னர்கள் காலத்தில் பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர்கள்
மங்கலம் எனவும், மலைபோல் நெல் விளையும் ஊர்கள் கோட்டை எனவும் பெயர் பெற்றுள்ளன. பாதுகாப்பு
அரண் மிகுந்த செங்கல் கோட்டை ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடையில் கோட்டைக்கரை
ஆற்றின் கரையில் உள்ளது. இதை திருவுடையத்தேவர் என்ற முத்து விஜயரெகுநாத சேதுபதி,
பிரஞ்சுப் பொறியாளர்களைக் கொண்டு கட்டியுள்ளார்.
ஆறு இதழ்கள் உள்ள ஒரு மலர் போன்று அறுங்கோண வடிவில் அமைந்துள்ளதால்
இதை ஆறுமுகக் கோட்டை என்கிறார்கள். இதன் சுவர்கள் உள்நோக்கி வளைந்தும்,
வெளிப்புறம் விரிந்தும் உள்ளன. 600 மீட்டர் சுற்றளவில் உள்ள இது கமுதிக் கோட்டையை
விட அளவில் பெரியது. 20 அடி உயரம் உள்ள இக்கோட்டை செங்கல், சுண்ணாம்புச் சாந்து
போன்றவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கோட்டையின் மேற்குப்பகுதியில் கல்நிலை வாசல்களுடன் இரு பெரிய அறைகள்
உள்ளன. இவை வீரர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டதாக இருக்கலாம். இதன் சுவர்களும்
கோட்டை சுவர்கள் போன்று பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக உள்ளன. இங்கு விளக்கு
வைக்கும் சாளரங்கள் உள்ளன. கோட்டையின்
மேலே ஏறிச் செல்ல படிகள் உள்ளன. வீரர்கள் நின்றுகொண்டு கோட்டையின்
வெளிப்பகுதிகளைக் கண்காணிக்கவும், துப்பாக்கியால் சுடவும் கோட்டைச் சுவர்களில்
மேல், கீழ், நடுப் பகுதிகளில் துளைகள் உள்ளன.
கோட்டையின் தென்பகுதியில் கோட்டையின் பொறுப்பாளர் தங்கி இருந்த செவ்வக
வடிவிலான சிறிய அரண்மனை இடிந்த நிலையில் உள்ளது. இக்கோட்டையைச் சுற்றி இருந்த அகழி
தற்போது தூர்ந்துபோன நிலையில் உள்ளது. சேதுபதிகள் தஞ்சாவூர் நாயக்க, மராட்டிய
மன்னர்களுடன் நடத்திய போர்களின்போது இக்கோட்டை முக்கியப் பங்கு வகித்தது. கி.பி.
1801 இல் ஆங்கிலேயர் சேதுபதிகளின் பல கோட்டைகளை அழித்தபோது இக்கோட்டையும் சிதைக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ராமநாதபுரம்
நிவாஸ்சங்கர், பொறியாளர் கென்னடி, ஆசிரியர் கீழக்கரை சுதர்சன் ஆகியோர்
செய்திருந்தனர். ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, கோட்டையின்
அமைப்பு, பெருங்கற்கால, சங்ககாலத் தடயங்கள், புதைந்தநிலையில் உள்ள பாண்டியர் காலக்
கோட்டை, மூலிகைத் தாவரங்களான நாட்டு வீழி, சங்கஞ்செடி ஆகியவற்றை நேரில் பார்த்து
அறிந்து கொண்டனர்.
நாளிதழ் செய்திகள்
No comments:
Post a Comment