இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை
மாணவர்கள், பொதுமக்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் மரபு நடை நிகழ்வை
ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தி வருகிறது. மூன்றாவது மரபு
நடை நிகழ்வு கமுதிகோட்டையில் 15.04.2018 அன்று நடந்தது. கமுதிக்கோட்டையில் அனைத்துத் திசைகளையும்
கண்காணிக்க ஏழு பீரங்கிகள் அமைக்கப்பட்டு இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிறுவனத்தின்
செயலாளர் சோ.ஞானகாளிமுத்து அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு பேசியபோது,
“வணிகம், சமணம், கோட்டை, கழுமரங்கள்,
மாலைக்கோயில்கள், பாரம்பரியத் தாவரங்கள் என பல்வேறு பழமைத்தடயங்களைக் கொண்ட
வரலாற்றுச் சுரங்கமாக கமுதி உள்ளது.
பழங்காலம்
முதல் கமுதி ஒரு வணிக மையமாக இருந்துள்ளது. வழிவிட்ட ஐயனார் கோயிலில் உள்ள பத்தாம் நூற்றாண்டு
வட்டெழுத்துக் கல்வெட்டில் ஐந்நூற்றுவர் எனும் வணிகக்குழுவின் மெய்க்கீர்த்தி உள்ளது.
வழிவிட்ட ஐயனார் கோயில், பசும்பொன் ஆகிய இடங்களில் 9 - 10 ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பங்கள் உள்ளன.
இராமநாதபுரத்திலிருந்து திருநெல்வேலி செல்லும் பாதையில் கமுதி உள்ளது.
இவ்வழியில்தான் ஜாக்சன் துரையை சந்திக்க கட்டபொம்மன் வந்துள்ளார்.
குண்டுகுளம்,
ஆரைகுடி உள்ளிட்ட பல இடங்களில், உடன்கட்டை ஏறிய பெண்களுக்கு அமைக்கப்பட்ட மாலைக்கோயில்கள்
உள்ளன. நாயக்கர் காலத்தைச் சேர்ந்த இவை 300
முதல் 500 ஆண்டுகள் வரை பழமையானவை.
கி.பி.1713 முதல் கி.பி.1725
வரை சேதுநாட்டை ஆண்ட முத்து விஜய ரெகுநாதசேதுபதி என்ற திருவுடையத்தேவர், பிரான்ஸ்
நாட்டுப் பொறியியல் வல்லுநர்களின் உதவியுடன் புதிய வடிவங்களில் கமுதி, பாம்பன்,
செங்கமடை ஆகிய இடங்களில் மூன்று புதிய கோட்டைகளைக் கட்டினார். இதில் கமுதிக்கோட்டை
வட்டவடிவில் உள்ளது.
குண்டாற்றின்
கரையில் பாறைகள் நிறைந்த மேடான அடர்ந்த காட்டுப்பகுதியில் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது.
இதன் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு கோட்டை கட்டப்
பயன்படுத்தப்பட்டுள்ளது. வெட்டி எடுக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகள் தற்போதும்
அப்பகுதியில் கிடப்பது இதை உறுதியாக்குகிறது. பாறைகளை வெட்டியதால் ஏற்பட்ட பள்ளம்
அகழி போல் அமைந்துள்ளது.
இதில்
ஏழு கண்காணிப்புக் கோபுரங்கள் போன்ற அமைப்பு உள்ளது. இது வீரர்கள் நின்று
காவல்புரியவும், கண்காணிக்கவும், பீரங்கி இயக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி
கொண்டு தூரத்தில், அருகில் உள்ளவர்களைக் குறிபார்க்க இக்கோட்டையின் மேல் சுவர்களில்
துளைகள் உள்ளன.
இக்கோட்டை
செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் உள் மற்றும் வெளிப்புறச்சுவர்களில் பலவிதமான
பாறைக்கற்களைக் கொண்டு ஒட்டியுள்ளனர். இதனால் இக்கோட்டை வெளியில் இருந்து
பார்க்கும்போது கற்கோட்டை போன்ற அமைப்பில் காணப்படுகிறது. கோட்டை கட்டுவதற்கான
செங்கற்களை இங்கேயே தயாரித்துள்ளனர்.
சிறிய கோட்டையாக இருந்தாலும் இரண்டடுக்கு வரிசையில் பாதுகாப்பு இருந்துள்ளது. இங்கு குழல் ஆதண்டை, நாட்டு வீழி ஆகிய அரியவகை மூலிகைத்
தாவரங்கள் உள்ளன.
கி.பி.1877 ஆம் ஆண்டு குண்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக
இக்கோட்டையின் பல பகுதிகள் சேதமடைந்தன. கற்கள் பெயர்ந்து வெறும் செங்கல் கோட்டையாக
இப்போது காட்சியளிக்கிறது.
இராமநாதபுரம் சேதுநாட்டை ஆங்கிலேயர் கைப்பற்றிய பின்பு, அனைத்துக்
கோட்டைகளையும் இடித்தபோது, இதையும் இடித்து சேதப்படுத்திவிட்டனர். இதில் எஞ்சிய
பகுதிகளே தற்போது நாம் காணும் இக்கோட்டை” என்றார்.
நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கமுதி வெள்ளைப்பாண்டியன், பேரையூர் முனியசாமி, இராமநாதபுரம் நிவாஸ்சங்கர் ஆகியோர் செய்திருந்தனர். பரமக்குடி புதுமலர்
பிரபாகரன், பொறியாளர்கள் கென்னடி, அரியநாயகம், ஆசிரியர்கள் இளஞ்செம்பூர் கார்த்திகேயன்,
நரசிங்கக்கூட்டம் கிறிஸ்துஞான வள்ளுவன், பனைக்குளம் குமார், கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி உள்பட 100க்கும்
மேற்பட்ட பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கோட்டையின் அமைப்பு,
கட்டுமானம், மூலிகைகள் ஆகியவற்றை நேரில் பார்த்து அறிந்து கொண்டனர். நமது
பாரம்பரிய பானமான பானகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
நாளிதழ் செய்திகள்
தினக்காவலன் டிவி
No comments:
Post a Comment