Pages

Saturday 11 July 2020

கல்வெட்டுகளின் அமைப்பு – வே.இராஜகுரு

மேல அரும்பூர் சேதுபதி கால சூலக்கல் கல்வெட்டு

பொதுவாக ஒரு முழுமையான கல்வெட்டு, மங்கலச் சொல், மெய்க்கீர்த்தி, அரசன் பெயர், ஆண்டுக் குறிப்பு, கொடை கொடுத்தவர், கொடைச் செய்தி, சாட்சி, காப்புச் சொல், எழுதியவர் ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கும்.

கல்வெட்டின் தொடக்கத்தில் மங்கலச் சொல் அமைந்திருக்கும். பெரும்பாலும் மங்கலச் சொல் ஸ்வஸ்திஸ்ரீ என இருக்கும். ஸ்ரீமது, சுபமஸ்து, நமசிவாய, சித்தம் என்ற சொற்கள் அமைந்துள்ள கல்வெட்டுகளும் உண்டு.

          கல்வெட்டு எந்த மன்னன் காலத்தைச் சேர்ந்ததோ அம்மன்னனின் பெருமைகள், போர் வெற்றிகள் முதலிய செய்திகள் மெய்க்கீர்த்தி பகுதியில் இடம்பெறும். இந்த மெய்க்கீர்த்திகள் மூலம் மன்னர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள முடிகிறது.

எந்த மன்னன் காலத்தில் கல்வெட்டு வெட்டப்பட்டதோ அம்மன்னன் பெயர் கல்வெட்டில் இடம் பெறும். கல்வெட்டில் மன்னர்களின் ஆட்சியாண்டு இடம் பெற்றிருக்கும். சில கல்வெட்டுகளில் கலியுகம், சாலிவாகன சகாத்தம், கொல்லம் போன்ற ஆண்டுகளும் இருக்கும்.

கொடை கொடுத்தவரின் நாடு, ஊர் முதலிய விவரங்களும், அவர் குடிப் பெயரும் பின்னர் அவருடைய பெயரும் வெட்டப்பட்டிருக்கும். பெண்கள் கொடை அளித்தால் அவர்கள் தந்தை பெயர் அல்லது கணவர் பெயருடன் அவர்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும்.

எந்தக் கோயில் இறைவனுக்கு அல்லது யாருக்கு, எதன் பொருட்டு, என்ன கொடுக்கப்பட்டது என்ற விபரங்கள் கொடைச் செய்தியில் குறிக்கப்படும். கொடையாக வழங்கப்பட்ட இடம் உள்ள நாடு, ஊர் முதலிய விபரங்களும்,  அதன் நான்கு எல்லைகளும் இதில் குறிக்கப்பட்டிருக்கும். வழங்கப்பட்ட கொடைக்குச் சாட்சியாக ஒருவரோ அல்லது சிலரோ கையொப்பம் இடுவர்.

அளிக்கப்பட்ட கொடையை காப்பாற்றுபவர்களுக்குப் புண்ணியமும், அழித்தவர்களுக்குப் பாவமும் வரும் என்பன போன்ற தொடர்கள் காப்புச் சொல் பகுதியில் எழுதப் பெற்றிருக்கும். கல்வெட்டை எழுதியவர்கள் பெயர் இறுதிப் பகுதியில் இருக்கும்.


2 comments:

  1. உங்களின் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இந்தப்பதிவானது கல்வெட்டைப் பற்றிய அடிப்படைச் செய்திகளைக் கொண்டு சிறப்பாக அமைந்துள்ளது.
    முகநூல் பக்கத்தில் இந்த வலைப்பூ 200 பதிவுகளை நிறைவு செய்ததை அறிந்து மனம் மகிழ்கின்றேன். உங்களின் வரலாற்று ஆர்வமும், இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் முறையும் போற்றத்தக்கன. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து தாங்கள் தரும் ஊக்கமும் வாழ்த்துகளும் மனதை மகிழச் செய்கிறது. இப்பணி தொடர ஊக்குவிக்கிறது. மனமார்ந்த நன்றிகள் ஐயா

      Delete