தேசிய
சித்த மருத்துவ தினம் ஒவ்வொரு ஆண்டும் அகத்தியர் பிறந்த மார்கழி மாதத்தில் ஆயில்யம்
நட்சத்திரம் வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஜனவரி 13 அன்று
கொண்டாடப்படுகிறது.
சித்தமருத்துவ
தினத்தை முன்னிட்டு மத்திய சித்த ஆராய்ச்சிக் குழுமத்தின் அறிவுரையின்பேரில்,
மாவட்ட சித்தமருத்துவ அலுவலகத்தின் வழிகாட்டுதலில், பனைக்குளம் அரசு மருத்துவமனையும், திருப்புல்லாணி
தொன்மைப் பாதுகாப்பு மன்றமும் இணைந்து மூலிகை கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை திருப்புல்லாணி
சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில்
08.01.2020 அன்று நடத்தின.
பள்ளித் தலைமையாசிரியர் கூ.செல்வராஜ்
தலைமை வகித்துப் பேசும்போது, பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் மூலிகைத் தாவரங்களை
வளர்த்துப் பயன்பெறவேண்டும் என கேட்டுக் கொண்டார். உத்தரகோசமங்கை சித்தமருத்துவ
அலுவலர் க.முத்துராமன் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளி
மாணவர்களிடையே சித்தமருத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இம்மருத்துவத்தை
தொடர்ந்து பின்பற்றச் செய்யவும், நமது பாரம்பரிய மூலிகைகள் பற்றி அறிந்து கொள்ளவும்
மூலிகைக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சித்தமருத்துவ அலுவலர் டாக்டர்
கோ.புகழேந்தி கண்காட்சியைத் திறந்துவைத்துப் பேசும்போது கூறினார். இளந்தளிர்
விழிப்புணர்வு பிரசுரத்தை மாணவர்களிடம் வழங்கினார்.
பின்னர்
நடந்த கருத்தரங்கில் சித்தமருத்துவம் தோன்றிய வரலாறு, சித்தர்கள் எழுதிய மருத்துவ
நூல்கள், இந்திய மருத்துவமுறைகள் பற்றி பனைக்குளம் அரசு மருத்துவமனை உதவி சித்த
மருத்துவ அலுவலர் டாக்டர் பா.ஸ்ரீமுகநாகலிங்கம் கூறினார். நமது மாவட்டத்தில் உள்ள அரியவகை
மூலிகைகள் பற்றி தொன்மைப் பாதுகாப்பு மன்ற செயலர் வே.இராஜகுரு ஒளி ஒலிக் காட்சி
மூலம் விளக்கினார்.
சித்தமருத்துவம்
பற்றி மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் முகம்மது பாசில் முதலிடமும், ஜெ.சுஜிதாஸ்ரீ
இரண்டாமிடமும், அபிநயஸ்ரீ மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு
பரிசுகள் வழங்கப்பட்டன. 8-ம் வகுப்பு மாணவி வி.டோனிகா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் செய்தனர்.
நாளிதழ் செய்திகள்
No comments:
Post a Comment