Pages

Saturday 11 July 2020

கொத்துக்கொத்தாய் மடிந்த மக்கள் 200 ஆண்டுகளுக்கு முன் பரவிய தொற்றுநோய் காலரா - வே.இராஜகுரு

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் பரவிய காலரா பல ஆண்டுகளாக பல லட்சம் பேரை கொன்று குவித்துச் சென்றது.

உலகத்தை அச்சுறுத்தும் கொடிய கொள்ளைநோய்கள் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு விதமாக மக்களைக் கொன்று குவித்து வந்துள்ளன. அறிவியல் வளர்ந்துள்ள இக்காலத்திலேயே அதைக் கட்டுப்படுத்தமுடியாமல் நாம் திணரும்போது, தடுப்புவழிகள் இல்லாத அக்காலங்களில் மக்கள் உயிரிழப்பும் தவிர்க்க முடியாததாக இருந்துள்ளது.

வைரஸ், பாக்டீரியாபூஞ்சைபுரோட்டோசோவா போன்றவை காரணமாக ஒரு நோய் உருவாகியுள்ளது என மருத்துவ சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டால்  அது தொற்றுநோய் எனப்படுகிறது. இத்தகைய தொற்றுநோய்கள் தொடுவதனாலோ, காற்று, நீர், உணவு வழியாகவோ ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றுகிறது.

ஒரு தொற்றுநோய் வேகமாகப் பரவி, ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களைத் தாக்குமாயின் அது கொள்ளைநோய் எனவும், அதுவே அதிக வேகத்தில் பரவி, உலகின் பல பகுதிகளில் உள்ள மக்களைத் தாக்கினால் அதை  உலகம்பரவுநோய் எனவும் அழைக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக பிளேக், அம்மை, இன்ஃபுளுவென்சா காய்ச்சல் போன்ற பல நோய்கள் பரவி உலகத்தையே அச்சுறுத்தி வந்துள்ளன.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வேகமாகப் பரவிய காலரா என்ற கொள்ளைநோய் மூலம் மக்கள் கொத்துக்கொத்தாய் மடிந்தனர் என்பதை அறியும்போது நாம் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது என்பதை உணர்ந்துகொள்ளமுடியும்.

இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா போன்று காலராவுக்கும் அன்று பலர் மடிந்தார்கள். கி.பி.1887இல் வெளிவந்த காலரா பற்றிய அறிக்கையில் 1871-1881 வரையிலான காலத்தில் அன்றைய தென்மாவட்டங்களில் மட்டும் 63,437 பேர் காலராவால் இறந்ததாகத் தெரிவித்துள்ளார்கள். 1877இல் மட்டும் 30,000 பேர் இறந்துள்ளார்கள். அந்தாண்டு காலராவின் தாக்கம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக அதிகமாக இருந்துள்ளது.

கி.பி.1831-32, 1843-44, 1861-63 ஆகிய ஆண்டுகளில் காலரா, பஞ்சம் ஆகியவற்றின் பாதிப்புகள் ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மிக மோசமாக இருந்ததாக கி.பி.1868இல் வெளிவந்த மதுரை மாவட்ட மேனுவல்லில் நெல்சன் தெரிவிக்கிறார். கி.பி.1563லேயே கோவா பகுதியில் இத்தகைய காலரா நோய் தாக்குதல் இருந்துள்ளது. காலராவை போர்ச்சுகீசியர் மார்டிஸின் என அழைத்துள்ளனர். கி.பி.1609லேயே மதுரை பகுதியில் காலரா இருந்ததாகவும் நெல்சன் தெரிவிக்கிறார்.


பல ஆங்கிலேயர்களும் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் கி.பி.1832இல் காலரா பாதிப்பால் ஜார்ஜ் கேரோவ் பேட் என்ற 14 வயது சிறுமி இறந்துள்ளாள். இராமநாதபுரம் வடக்குத் தெரு கிறிஸ்து நாதர் தேவாலயத்தில் உள்ள கல்லறைக் கல்வெட்டால் இதை அறியமுடிகிறது.

மேலும் இங்கிலாந்திலிருந்து வந்த கிறித்துவ சபை பாஸ்டர் ஆர்தர் ஹீபர் தாமஸ் என்பவர், இராமநாதபுரம் பகுதிகளில் கி.பி.1888 டிசம்பரில் புயல் காரணமாக காலரா பரவி பலர் இறந்ததாக பதிவு செய்துள்ளார். இவர் பெயரில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இரு தேவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 கொள்ளைநோயோ தொற்றுநோயோ தனிமனிதனின் விழிப்புணர்வும் பாதுகாப்பும் தான் நம்மைப் பாதுகாக்கும். கடந்தகால நோய்களின் வரலாற்றில்  இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு நம்மைக் காத்துக் கொள்வோம்.

படம்: இராமநாதபுரம் வடக்குத் தெரு கிறிஸ்து நாதர் தேவாலய கல்லறைக் கல்வெட்டு

கட்டுரையாளர்: தலைவர்,

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்.


தினகரன் நாளிதழ் செய்தி



2 comments:

  1. உண்மை. கடந்த கால நோய்களின் வரலாற்றிலிருந்து நாம் கற்கவேண்டியது அதிகம் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. மக்கள்
      நோயைக் கண்டு பயப்படாமல்
      மனதைரியத்துடன் அதை எதிர்கொள்ள வேண்டும். நமது பாரம்பரிய பழக்கவழக்கங்கள், மருத்துவ முறைகளை
      பின்பற்ற வேண்டும்.

      Delete