Pages

Friday 10 July 2020

அழகன்குளம் அகழாய்வு ஒரு பார்வை - வே.இராஜகுரு


அறிமுகம்

இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. இங்கு வைகை மற்றும் அதன் கிளை ஆறுகள் பலவாகப் பிரிந்து வங்கக்கடலில் கலக்கின்றன. இவை கடலில் கலக்கும் பகுதிகளில் உள்ள உப்பங்கழிகள் மூலம் அதிகளவில் இயற்கைத் துறைமுகங்கள் உருவாகியுள்ளன. இதனால் இம்மாவட்டத்தில் பழங்காலம் முதல் பல துறைமுகப்பட்டினங்களும், வணிக நகரங்களும் உருவாகியுள்ளன.

சுங்தரபாண்டியன்பட்டினம், தீர்த்தாண்டதானம், பாசிப்பட்டினம், நானாதேசிப்பட்டினம், தொண்டி, முத்துராமலிங்கபட்டினம், புதுப்பட்டினம், தனுஷ்கோடி, பாம்பன், பெரியபட்டினம், இராமேஸ்வரம், அழகன்குளம், முடிவீரன்பட்டினம், தேவிபட்டினம், கீழக்கரை, சாயல்குடி ஆகிய பல ஊர்கள் வணிக நகரங்களாக இருந்துள்ளதை தொல்லியல் சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. இங்கு சங்ககாலம் முதல் இடைக்காலம் வரை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாணிகம் மிகச் சிறந்த முறையில் நடந்து வந்துள்ளது.

சமுதஹ

சங்ககாலத்தில் தமிழ்நாட்டின் சில துறைமுகங்கள் உலகின் பல நாடுகளுடன் கடல் வாணிகம் செய்து கொண்டிருந்தது என்பதை வெளிநாடுகளில் கிடைத்த பல தொல்பொருள்கள் மூலம் அறியலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன்குளம், தேரிருவேலி, தொண்டி, பெரியபட்டினம் ஆகிய ஊர்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் மூலம் அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. இதில் மிகப் பழமையான இடமாகவும் பன்னாட்டு வணிகச் சந்தையாகவும் அழகன்குளம் திகழ்ந்துள்ளது.

1984இல் அழகன்குளத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் கோட்டைமேடுப் பகுதியில் சேகரித்த சில காசுகளை தொல்லியல் துறையிடம் வழங்கினார். அதன் தொடர்ச்சியாக துறை சார்பில் அப்பகுதியில் மேற்பரப்பாய்வு செய்யப்பட்டு கோட்டைமேடும், அம்மன்கோயில் குடியிருப்பும் தொல்பொருள் மேடு என்பதை உறுதிப்படுத்தினர்.

 

அழகன்குளம்

ராமநாதபுரத்தின் கிழக்கே 17 கி.மீ. தொலைவில் வைகை கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளது  அழகன்குளம் எனும் ஊர். இங்கு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் 1986 முதல் 2017 வரை 8 கட்டங்களாக நடத்தப்பட்ட அகழாய்வு மூலம் இவ்வூரின் பழமையை அறியமுடிகிறது. சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, மதுரைக்காஞ்சி ஆகியவற்றில் காட்டப்படும் மருங்கூர்பட்டினம் தான் இன்றைய அழகன்குளம் என்கிறார்கள். இங்கு  செய்யப்பட்ட அகழாய்வு மூலம் இவ்வூர் கி.மு.நான்காம் நூற்றாண்டு முதல் கி.பி.12ஆம் நூற்றாண்டு வரை மிகச் சிறப்புடன் விளங்கியுள்ளது என்பதை அறிய முடிகிறது.


இங்கு கிடைத்த மணி செய்யும் கற்கள், பாசிகள், தக்களி, சிப்பி, சங்கு  வளையல்கள், அரிட்டைன், ஆம்போரா, ரௌலட்டட் ஆகிய ரோமானிய நாட்டு ஓடுகள், கருப்பு சிவப்பு நிற ஓடுகள், மௌரியப் பானை ஓடுகள், குறியீடுகள், தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் முதலியன இவ்வூரின் பழமையைச் சொல்கிறது.

இங்கு 1986 முதல் 1997 வரையில் செய்யப்பட்ட அகழாய்வுகளில் மட்டும் 193 குறியீடுகள் உள்ள ஓடுகளும், 60 தமிழி எழுத்துப் பொறிப்பு உள்ள ஓடுகளும் கிடைத்துள்ளன.

ரோமானிய ஓடுகளும், ரோமானிய மன்னர்களின் காசுகளும் அகழாய்வில் கிடைத்துள்ளதால் இங்கு ரோமானியக் குடியிருப்பு இருந்திருக்கிறது என்பதையும், இங்குள்ள மக்களோடு அவர்கள் வாணிக உறவு கொண்டிருந்தார்கள் என்பதையும்  அறிய முடிகிறது.

VALENTINE  COIN

இங்கு கப்பல் உருவம் வரையப்பட்ட பானை ஓடு ஒன்றும், அச்சில் பதிக்கப் பெறுவதற்காகக் குடையப்பெற்ற காளை உருவத்தோடு கூடிய பானை ஓடு ஒன்றும், யானை ஓன்று செடியைத் தும்பிக்கையால் வளைத்து உண்ண முயல்வது போன்ற உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடு ஒன்றும் கிடைத்துள்ளன.

அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பானை ஓட்டில் ‘சமுதஹ’ எனும் சொல் உள்ளது. இலங்கை குகைக் கல்வெட்டுகளிலும் இச்சொல் காணப்படுகிறது. இதன்மூலம் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் பழங்காலம் முதல் தொடர்பு இருந்துள்ளதை அறியலாம்.

கிரேக்க கலைப்பாணியை ஒத்துள்ள, ஒரு பெண் தன் குழந்தையை இடுப்பில் தாங்கி உள்ளதைப்போன்று சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு பானை ஓட்டில் மூன்று பெண்கள், விசிறியை தம் கைகளில் கொண்டும், ஒரு கையில் மதுக்குடத்தைத் தாங்கியும் காணப்படுகின்றனர். இவை எகிப்து பிரமீடுகளில் உள்ள வண்ண உருவங்களை போன்று உள்ளன. அரேபியர்களோடு இருந்த வாணிகத் தொடர்புக்குச் சான்றாக அரபி எழுத்தில் எழுதப்பட்ட சங்கு ஒன்று கிடைத்துள்ளது.

எட்டு கட்டங்களாக ஆய்வு

1986-87 -ல் இருகுழிகள் தோண்டி முதல் அகழாய்வைத் தொடங்கினர். இதில் கிடைத்த பொருட்களின் கார்பன் சோதனையில் இது 2360 ஆண்டுகள் பழமையானது என அறியப்பட்டுள்ளது.

1990 – 91 இல் இரண்டாம் கட்ட அகழாய்வில் 4 குழிகள் தோண்டப்பட்டன. ஹரப்பா நாகரிகத்தில் கிடைத்த களிமண் தகடு உருவம் போன்று ஒரு பகடைக் காய் கிடைத்தது. கி.மு.350-320-ஐச் சேர்ந்த யானை உருவம் உள்ள சங்ககால பாண்டியர் காசு கிடைத்தது.

1993-94 இல் மூன்றாம் கட்ட அகழாய்வில் தமிழி எழுத்துகள் எழுதப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கிடைத்தன. 1995-96 இல் நான்காம் கட்ட அகழாய்வில் காளை உருவம் பொறித்த சங்ககால பாண்டியர் காசு, குறியீடு உள்ள ஓடுகள், ரோமானிய கப்பல் போன்ற உருவம் பொறிக்கப்பட்ட ஓடு ஆகியன கிடைத்தன.

1996-97 இல் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் 6 குழிகள் தோண்டப்பட்டன. கி.மு.4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்த அரசர்களின் வெள்ளிக்காசு, சங்ககால பாண்டியர், ரோமானியர் காசுகள் கிடைத்தன. 1997-98 இல் ஆறாம் கட்ட அகழாய்வில் 18 குழிகள் கோட்டைமேட்டிலும், ஒரு குழி அம்மன்கோயில் குடியிருப்பிலும் தோண்டப்பட்டன.

2015-16 இல் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்தது. 2016-17 இல் எட்டாம் கட்டமாக  விரிவான அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் 52 குழிகளுக்கும் மேல் தோண்டப்பட்டன. இதில் 13,000 பழங்காலப் பொருட்கள் கண்டறியப்பட்டன.

மனிதன் முதன் முதலாகப் பயன்படுத்திய வெள்ளி முத்திரை காசுகள், சதுர வடிவில் செப்புக் காசுகள் என 50க்கும் மேற்பட்டவை இங்கு கிடைத்துள்ளன. கூட்டல் குறி போன்ற முத்திரை, சுடுமண் பொம்மை, சுடுமண் குழாய்கள், இரும்புப் பொருட்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், கல்மணிகள், சங்கு ஆபரணங்கள், ஆபரணங்கள், பச்சைநிற கற்கள், கண்ணாடி மணிகள் ஆயிரக்கணக்கில் கிடைத்துள்ளன. 150 கிராம் எடையுள்ள விதையுடன் செங்கற்களால் கட்டப்பட்ட சிறிய தானிய விதை கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அழகன்குளத்தில் மட்டுமே பழங்கால மண்பாண்டங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.

சிறப்புகள்

          உலகின் பல்வேறு நாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொண்ட துறைமுகமாக  அழகன்குளம் திகழ்கிறது. இவ்வூர் சங்ககால பாண்டியர் துறைமுகமாக இருந்துள்ளதால் இங்கிருந்து மதுரை செல்லும் பெருவழி வைகையின் கரை வழியில் இருந்திருக்க வேண்டும். இப்பாதையில் தான் கீழடி உள்ளது. இவ்வூர் மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுடன் 2400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாணிகத் தொடர்பு கொண்டு இருந்துள்ளது. கோட்டைமேடு பகுதி 20 ஏக்கர் பரப்பளவில் இருந்தாலும் இங்கு கிடைத்த பொருள்கள் ஏராளம்.

ரோம், அரேபியா, இலங்கை, வட இந்தியா, எகிப்து, கிரேக்கம் உள்ளிட்ட பகுதிகளுடன் தொடர்புடைய பொருள்கள் கோட்டைமேடு பகுதியிலும், இடைக்காலத்தைச் சேர்ந்த சீனநாட்டுப் பொருள்கள் அம்மன்கோயில் குடியிருப்பு பகுதியிலும்  கிடைத்துள்ளன.

ஆய்வு அறிக்கை வெளியிடப்படவேண்டும்

1986 முதல் 1998 வரையில் 6 கட்டங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் வெறும் 19 குழிகள் மட்டுமே தோண்டப்பட்டன. இதன் ஆய்வு அறிக்கை 2005 இல் வெளியிடப்பட்டது. ஆனால் 7 மற்றும் 8 ஆம் கட்டங்களில் 55க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டி ஆய்வு செய்யப்பட்டன. அதிகளவில் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதன் அய்வு அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கை

    அழகன்குளம் பன்னாட்டு வணிகச் சந்தையாக இருந்துள்ளதை அகழாய்வு மூலம் அறிய முடிகிறது. 43 ஆண்டுகளாக இங்கு அகழாய்வு நடைபெற்று வருகிறது. தொழில்நுட்பம் தற்போது வளர்ந்துள்ள நிலையில், புதிய தொழில்நுட்பத்தில் இங்கு மீண்டும் ஆய்வு தொடங்கப்படவேண்டும். இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட குறியீடுகளை சிந்துச் சமவெளி எழுத்துகளுடன் ஒப்பிட்டு படிக்கப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். அழகன்குளத்துக்கும் உலகம் முழுதும் இதே காலகட்டத்தில் இருந்த பிற பழமையான நகரங்களுக்கும் உள்ள தொடர்பு அறியப்படவேண்டும். இங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு இங்கு ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படவேண்டும். அழகன்குளம் அகழாய்வு அறிக்கையை துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு எழுதி வெளியிட வேண்டும்.


கட்டுரை ஆசிரியர்: இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர்


ஜுனியர்விகடன் 


ஜெயா டிவி 


நியூஸ்18 டிவி


No comments:

Post a Comment