Pages

Friday, 10 July 2020

கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் இளந்தளிர் விழிப்புணர்வு முகாம்

தேசிய ஆயுஷ் குழுமத்தின் வழிகாட்டுதலின் படி, பனைக்குளம் அரசு மருத்துவமனையும், கிருஷ்ணா தொன்மைப் பாதுகாப்பு மன்றமும், ரோட்டரி கிளப் ஆப் ஈஸ்ட் கோஸ்ட்டும் இணைந்து இளந்தளிர் விழிப்புணர்வு முகாம் மற்றும் மூலிகைக் கண்காட்சியை தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 31.01.2020 அன்று நடத்தின.

ரோட்டரி கிளப் தலைவர் கணேசக்கண்ணன், செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளிச் செயலாளர் ஜீவலதா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற இந்திய மருத்துவ முறைகள் பற்றி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இயற்கையான இம்மூலிகைகளை வளர்த்துப் பயன்பெறவும் மூலிகைக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் நரம்பியல் நிபுணர் டாக்டர் மலையரசு மூலிகைக் கண்காட்சியைத் திறந்துவைத்துப் பேசும்போது கூறினார்.

பின்னர் நடந்த இளந்தளிர் விழிப்புணர்வு முகாமில் மாவட்ட சித்தமருத்துவ அலுவலர் டாக்டர் கோ.புகழேந்தி இளந்தளிர் விழிப்புணர்வு பிரசுரத்தை வெளியிட்டு மாணவர்களுக்கு வழங்கினார்.

மூலிகைத் தாவரங்களைக் கண்டறிதல், மூலிகைத் தோட்டம் அமைத்தல், கண்காட்சி, நோய்த்தடுப்பு முகாம், ஊர்வலம் நடத்துதல் போன்ற செயல்பாடுகள் மூலம் இளந்தளிர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக பனைக்குளம் அரசு மருத்துவமனை உதவி சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் பா.ஸ்ரீமுகநாகலிங்கம் கூறினார். இயற்கையாக வளர்ந்துவரும் அரியவகை மூலிகைகள் பற்றியும் அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு புகைப்படங்கள் மூலம் விளக்கினார்.

இந்திய மருத்துவ முறைகள் பற்றி மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஜெயஸ்ரீ முதலிடமும், சபிபா பானு இரண்டாமிடமும், அஃப்ரா பானு மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலர் சந்தியா நன்றி கூறினார்.


நாளிதழ் செய்திகள்




No comments:

Post a Comment