Pages

Saturday 11 July 2020

ஆதன், நாதன் ஆனது எப்படி? - ஆ.மணிகண்டன் & வே.இராஜகுரு

மதுரைக்கு மேற்கில் செக்காணூரணி அருகில் கிண்ணிமங்கலத்தில் உள்ளது ஏகநாதன் குருகுலம். இங்கு குருகுல முறையிலான சித்தர்கள் 67 தலைமுறைகளாக மக்களுக்கு கல்வி, கலை, மருத்துவம், வானவியல், ரசவாதம், போர்ப்பயிற்சி, ராஜதந்திரங்கள், ராஜயோகம் என 16 விதமான கலைகளைக் போதித்து வருகிறார்கள். இது இரண்டாயிரம் ஆண்டுகளாக இயங்கிவரும்  குருகுலமாகும்.  பரம்பரை பரம்பரையாக 66 சித்தர்கள் இருந்திருக்கிறார்கள். இப்போது 67 ஆவது சித்தராக இருப்பவர் அருளானந்த சுவாமிகள் ஆவார். 

சமீபத்தில் இக்குருகுலத்தில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழே சதுரமாகவும், மேலே எட்டுப்பட்டை வடிவிலும் உள்ள ஒரு கந்துவின் கீழ்ப்பகுதியில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் ஏகன் ஆதன் கோட்டம் என எழுதப்பட்டுள்ளது. ஏகன் ஆதன் என்பவரின் கோட்டம் என இதை பொருள் கொள்ளலாம். இதில் கூறப்பட்டுள்ள ஏகன் ஆதன் என்பவர் இக்குருகுலத்தின் முதல் சித்தராகக் கருதப்படுகிறார்.

கோட்டம் என்ற சொல்லுக்கு கோவில் என்பது பொருள். புறநானூறு 299 ஆம் பாடலில் முருகன் கோட்டம் குறிப்பிடப்படுகிறது. தமிழர்களின் இறை வழிபாட்டில் கந்து வழிபாடு மிகப் பழமையானது. கல் தூண் என்ற சொல்லே கந்து எனச் சுருங்கியுள்ளது. பழமையான கந்து வழிபாடு பின்னர் லிங்க வழிபாடாக மாறியுள்ளதற்கு இக்கல்வெட்டும் கந்துவும் சான்றாக உள்ளன.

கீழடி, கொடுமணல், அரிக்கமேடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகளில் ஆதன் என்ற சொல் பயின்று வருகிறது. இதன் மூலம் குழுவின் தலைவர், மன்னன் இவர்களோடு கலைகளை கற்றுக்கொடுத்த சித்தரும், ஆதன் என அழைக்கப்பட்டிருப்பது உறுதியாகிறது.

மேலும் இக்கல்வெட்டில் சொல்லப்பட்ட ஏகன் ஆதன் கோட்டம் என்பது பின்னாளில் ஏகநாதன் பள்ளிப்படை என்றும் தொடர்ச்சியாக ஏகநாதர் திருக்கோவில் என்றும் மாறியிருக்கிறது. தமிழ் இலக்கண புணர்ச்சி விதியின்படி ஏகன் ஆதன் என்பது ஏகனாதன் என்றாகி பின்னாளில் ஏகநாதன் என்றானது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இதே அடிப்படையில் தமிழகத்தில் அமைந்திருக்கும் பிற கோவில் இறைவனின் பெயர்களை ஒப்புமை செய்யும்போது அதில் பழங்கால தமிழ்ச் சொற்களோடு ஆதன் என்ற சொல் இணைந்து (னாதன்) நாதன் என்ற சொல்லாக திரிபடைந்திருப்பதை அறியலாம்.

சொக்கன் ஆதன் என்ற மதுரையை ஆண்ட மன்னனின் பெயர்தான் சொக்கநாதன் என ஆகியிருக்கிறது. இதேபோல் நாகன் ஆதன் என்ற பெயர் நாகநாதன் என்றும், கயிலாயன் ஆதன் கயிலாயநாதன் என்றும், ராமன் ஆதன் ராமநாதன் என்றும் இந்த கல்வெட்டை அடிப்படையாகக்கொண்டு கோயில்களின் நாதன் என்ற சொல்லாடல் ஆதன் என்ற சொல்லிலிருந்து பிறந்தது என நிறுவலாம்.

தமிழ் சொற்கள் எவ்வாறு பிற மொழிகளில் உள்வாங்கிக் கொள்ளப்பட்டன என்பதற்கான சான்றாக இக்கல்வெட்டு அமைந்திருப்பது தமிழ்மொழி வரலாற்றில் மிக முக்கிய மைல் கல் ஆகும்.

ஆதன் என்று பெயரிடும் வழக்கம் சேரர்களிடையேயும், பாண்டியர்களிடையேயும் இருந்துள்ளது. உதாரணமாக சேரல் ஆதன் சேரலாதன் என்றும், வாழி ஆதன் வாழியாதன் என்றும், ஆதன் உங்கன் ஆதனுங்கன் என்றும் வழங்கி வந்துள்ளதை சான்றாகக் கொள்ளலாம்.

இப்படியாக இந்திய மொழியியல் வரலாற்றில் இக்கல்வெட்டு குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடிப்பதோடு மனித வர்க்கவியல் ஆய்விலும் ஒரு சிறந்த பண்பாட்டு தொடர்ச்சி கொண்ட குருகுல நிறுவனத்தின் சித்தர் வழி கல்வி கற்கும் முறைக்கும் புதிய சான்றுகளை தரும் என்பதில் ஐயமில்லை. குருகுலக்கல்வி முறை தமிழ்நாட்டில் மிகப் பழங்காலம் முதல் இயங்கி வந்திருப்பதையும்,  குருகுலக் கல்வி அளித்த சித்தர்கள் தெய்வமாக வணங்கப்பட்டு வந்துள்ளதையும் இதன்மூலம் அறியமுடிகிறது.

படங்கள் உதவி: ஆனந்தன் சன்னாசி

(கட்டுரை ஆசிரியர்கள்: தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொல்லியல் முனைவர் பட்ட ஆய்வாளர் வே.ராஜகுரு)


No comments:

Post a Comment