Pages

Saturday 11 July 2020

தமிழகத்தில் முதன்முறையாக தொல்லியல் பயிற்றுவிக்க இராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரியில் தொல்லியல் மன்றம் துவக்கம்

கீழடி அகழாய்வுக்குப்பின் கல்லூரி மாணவர்களிடையே தொல்லியல், பண்பாடு, தமிழர் நாகரிகம் ஆகியவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. மாணவர்களின் ஆர்வத்தை நிறைவேற்றவும், தமிழகத்தின் வரலாறு, கலை, பண்பாடு போன்றவற்றை அவர்கள் தெரிந்து கொள்ளவும் தமிழகத்தில் முதன்முறையாக ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரியில் தொல்லியல் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் நடந்த மன்றத் தொடக்கவிழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் க.மகுதம்மாள் தலைமை வகித்துப் பேசும்போது, “இராமநாதபுரம் மாவட்டம் பாரம்பரிய சிறப்புமிக்கது. இம்மாவட்டத்தில் பல தொல்லியல் தடயங்கள் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிதைந்து வருகின்றன. மேலும் 2600 ஆண்டுகள் பழமையான கீழடியை விட அகழாய்வில் அதிக பொருட்கள் கிடைத்த அழகன்குளம், தேரிருவேலி ஆகியவை ரோமானியருடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்த  சர்வதேச நகரங்கள் ஆகும். தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு மாணவர்கள் நேரில் சென்று அவற்றின் சிறப்புகளைத் தெரிந்துகொண்டால் தான் அவற்றை பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் ஏற்படும்.

மாவட்டத்தில் சிறப்பாக வழங்கிவரும் கலைகள், நாட்டுப்புறப்பாடல்கள், வாய்மொழி வரலாறு ஆகியவற்றை இம்மன்றம் மூலம் மாணவர்கள் தேடித் தொகுக்கவேண்டும். தங்கள் பகுதிகளில் உள்ள ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள், தொல்லியல் தடயங்கள் ஆகியவற்றை தேடிக் கண்டறியவேண்டும் என மாணவர்களை கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டிலேயே ஒரு முன்மாதிரியாக இம்மன்றத்தை இக்கல்லூரியில் முதன்முதலில் தொடங்குவதாகத் தெரிவித்தார்.

உடற்கல்வி இயக்குநர் சோ.மணிமுத்து அனைவரையும் வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் மெ.செந்தாமரை முன்னிலை வகித்தார். இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும் தொல்லியல் ஆய்வாளருமான  வே.இராஜகுரு தொல்லியல் மன்றமும் ராமநாதபுரம் மாவட்டச் சிறப்புகளும் என்ற தலைப்பிலும், இராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை மாணவி வே.சிவரஞ்சனி சங்ககாலக் கல்வெட்டுகள் என்ற தலைப்பிலும் பேசினர். தொல்லியல் மன்றச் செயலாளர் முனைவர் .அதிசயம் நன்றி கூறினார்.



நாளிதழ் செய்திகள்









No comments:

Post a Comment