இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில்
உள்ள எஸ்.பி.பட்டினம் சோழர் காலத்தில் ஒரு வணிக மையமாக இருந்ததாக
மரபு நடை நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு
நிறுவனம் ஒவ்வொரு மாதமும் பாரம்பரியச் சிறப்பு வாய்ந்த இடங்களை பொதுமக்கள்,
மாணவர்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் மரபு நடை நிகழ்வை நடத்தி
வருகிறது. 13வது மரபு நடை
நிகழ்வு இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் 28.07.2019 நடைபெற்றது.
ஆய்வு நிறுவனத்தின் செயலாளர் சோ.ஞானகாளிமுத்து
அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த ராமநாதபுரம்
தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு பேசியதாவது, “முத்தூற்றுக் கூற்றத்து கீழ்கூற்று சுத்தவல்லியான
சுந்தரபாண்டியபுரம் என கல்வெட்டுகளில் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
இப்பகுதியைக் கைப்பற்றிய பின்னர், சுத்தவல்லி என்ற இவ்வூர் பெயர் சுந்தரபாண்டியபுரம் என மாற்றப்பட்டிருக்கிறது.
புரம்,பேட்டை ஆகியவை வணிக நகரங்களைக் குறிக்கும்
சொற்கள் ஆகும். எனவே
சுந்தரபாண்டியன்பட்டினமும், சோழகன்பேட்டையும் இரட்டை வணிக நகரங்களாக
இருந்துள்ளதை அறிய முடிகிறது. இவ்வூர் மலைமண்டலமான சேர
(கேரள) நாட்டுடன் தொடர்புடையதாக இருந்துள்ளது.
மலைமண்டலத்துக் காந்தளூரான எறிவீரபட்டினத்து இராமன் திருவிக்கிரமனான தேவேந்திர
வல்லபப் பதினெண்பூமிச் சமையச் சக்கரவத்திகள் என்பவர் இக்கோயிலுக்கு நிலதானம் வழங்கியுள்ளார்.
கி.பி.13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில் சொக்ககூத்தர்,
தம்பிராட்டி என இறைவன், இறைவி பெயர்
சொல்லப்பட்டுள்ளது. இதே கல்வெட்டில் ஆட்டை எனும் சோழர்கள் பயன்படுத்திய ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது.
இவ்வூரில் பாண்டியர்
காலத்திலேயே ஒரு மடம் இருந்துள்ளதை கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. தற்போதும்
சிவன்கோயிலின் தெற்கே ஒரு மடம் உள்ளது.
இதன் அமைப்பைக் கொண்டு இம்மடம் கி.பி.8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதலாம். இந்த மடத்துக்கு நிலதானம்
வழங்கப்பட்டதாக கல்வெட்டுகள் சொல்கின்றன. இம்மடம் பௌத்தமடமாக
இருந்து பின் சைவ மடமாக மாற்றப்பட்டிருக்கலாம். அங்குள்ள ஒரு நாசிக்கூட்டில்
புத்தரின் புடைப்புச் சிற்பம் உள்ளது இதை உறுதிப்படுத்துகிறது.
இவ்வூரின்
தெற்கே பாம்பாற்றின் கழிமுகப்பகுதியில் ஒரு
பாதக்கோயில், ஒரு மடம் உள்ளது. இங்கு சமண மதத்தின் 23வது தீர்த்தங்கரரான பார்சுவநாதரின்
சிறிய புடைப்புச் சிற்பம் உள்ளது. இது ஒரு சமணப்பள்ளி என சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கு 4 துண்டுக்கல்வெட்டுக்கள் உள்ளன. இவை திரிபுவனச்
சக்கரவத்திகள் விக்கிரமபாண்டியனின் 5ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் வெட்டுடையார் உய்யவனதார முதலி என்பவர்
பெயர் காணப்படுகிறது. இவர் அரசு அதிகாரியாக இருக்கலாம். இதில் ‘இத்தேசிநா’ என வரும் சொல் மூலம் வணிகர்கள் இக்கோயிலுக்கு நிலதானம் வழங்கியிருப்பதை அறிய
முடிகிறது.
மேலும் சுந்தரபாண்டியன்பட்டினம், தீர்த்தாண்டதானம், வட்டானம், தொண்டி உள்ளிட்ட ஊர்களில் கப்பல், படகு கட்டும் தொழில் நடந்திருக்கலாம். எஸ்.பி.பட்டினம் மற்றும் தொண்டியில் உள்ள ஓடாவி தெரு இதை
உறுதிப்படுத்துகிறது. ஓடாவி
என்பது மரக்கலம் செய்யும் தச்சர்களைக் குறிக்கும் சொல் ஆகும். இவ்வூர் அருகில் உள்ள
எட்டிசேரி வணிகர்களான எட்டி – செட்டிகளின் குடியிருப்பாக இருந்துள்ளது” இவ்வாறு அவர்
கூறினார்.
நாளிதழ் செய்திகள்
No comments:
Post a Comment