Pages

Thursday 18 December 2014

அழகன்குளம் அகழாய்வு - வே.இராஜகுரு

கிறிஸ்து பிறப்பதற்க்கு முன்பே தமிழ்நாட்டின் சில துறைமுகங்கள் எகிப்து, தாய்லாந்து, ஜாவா, சுமத்ரா, மியான்மர், போன்ற நாடுகளுடன் கடல் வாணிகம் செய்து கொண்டிருந்தது என்பதற்கு பல தொல்பொருள் ஆதாரங்கள் உள்ளன. மிக நீண்டதொரு கடற்கரையைக் கொண்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்திலும் அத்தகைய சில துறைமுகங்கள் இருந்துள்ளன. 


இராமநாதபுரத்தின் கிழக்கே 15 கி.மீ. தொலைவில் வைகை கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளது  அழகன்குளம் எனும் ஊர். இங்கு  செய்யப்பட்ட அகழாய்வு மூலம் இவ்வூர் சங்ககாலத்தில் மிக முக்கியமான துறைமுக நகராக இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. 

தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை மூலம் 1987 முதல் 1997 வரை நடத்தப்பட்ட அகழாய்வு மூலம் இவ்வூரின் பழமை நமக்குத் தெரிய வருகிறது. சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, மதுரைக்காஞ்சி ஆகிய இலக்கியங்களில் காட்டப்படும் மருங்கூர்பட்டினம் தான் இன்றைய அழகன்குளம்.
மருங்கூர்பட்டினம் அழகாகவும், செல்வச் செழிப்புடனும் விளங்கியதாகவும், இதன் இருமருங்கிலும் உப்பங்கழிகள் இருந்தன எனவும், இவ்வூரையும் ஊனூரையும் தழும்பன் என்ற ஒரு குறு நிலத் தலைவன் ஆண்டு வந்தான் அவனைப் பாண்டிய மன்னன் வெற்றி கொண்டான் எனவும் அகநானூறு கூறுகிறது. 

மருங்கூர்பட்டினமும் ஊனூரும் சேர்ந்து நெல்லூர் அல்லது சாலியூர் எனப் பெயர் பெற்றிருந்தன எனவும், கப்பல்கள் இத்துறைமுகத்தில் தங்கிருந்த காட்சி வெள்ளத்தை முற்றுகையிடும் மலை போல் காட்சியளித்தாகவும் மதுரைக் காஞ்சி கூறுகிறது. 

நெல் என்பது சாலி எனவும் வழங்கப்படுவதால் நெல்லூர், சாலியூர் எனவும் வழங்கி இருக்கலாம். எனவே தாலமி என்ற கிரேக்க அறிஞர் கூறியுள்ள சாலியூர்  இந்தச் சாலியூரே என நாம் கருதலாம். 

     பிற்காலத்தில் நெல்லூர் என அழைக்கப்பட்ட மருங்கூர் பட்டினமும் ஊனூரும் சிறப்பு மங்கியதால் பெரிய பட்டினம் சிறப்புப் பெற்றது. சீனர்கள் பெரிய பட்டினத்தை  தா பட்டினம் என அழைத்திருக்கிறார்கள். தா என்றால் சீன மொழியில் பெரிய என்று பொருள்.

     பாண்டிய நாட்டில் கொற்கையும் மருங்கூர் பட்டினம் என அழைக்கப்பட்ட அழகன்குளமும் புகழ் பெற்ற துறைமுக நகரங்களாக இருந்துள்ளன. நிர்வாக வசதிக்காக பாண்டிய நாடு பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இராமநாதபுரம் பகுதி செவ்விருக்கை நாடு என அழைக்கப்பட்டது. எனவே அழகன்குளமும் செவ்விருக்கை நாட்டில் இருந்ததாகக் கொள்ளலாம். 

     அழகன்குளம் கி.மு.நான்காம் நூற்றாண்டு முதல் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு வரை சிறப்புடன் விளங்கி இருந்துள்ளது. 

இங்கு கிடைத்த கருப்பு சிவப்பு நிறப் பானை ஓடுகள், மௌரியப் பானை ஓடுகள், ரெளலட்டட் மட்பாண்ட ஓடுகள், சாம்பல் நிறப் பானை ஓடுகள், சொரசொரப்பான சிவப்பு நிறப் பானை ஓடுகள், பழந்தமிழ் எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் முதலியவை இவ்வூரின் பழமையைச் சொல்லும்.

     ரோமானிய மதுக்குடங்களின் பகுதிகளும், ரோமானிய மன்னர்களின் காசுகளும் அகழாய்வில் கிடைத்துள்ளதால் இங்கு ரோமானியக் குடியிருப்பு இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது. இங்குள்ள மக்கள் ரோமானியர்களோடு வாணிக உறவு கொண்டிருந்தனர் என்பதும் தெரிகிறது.



AMPHORAE

இங்கு கப்பல் உருவம் வரையப்பட்ட பானை ஓடு ஒன்றும், அச்சில் பதிக்கப் பெறுவதற்காகக் குடையப்பெற்ற காளை உருவத்தோடு கூடிய பானை ஓடு ஒன்றும், யானை ஓன்று செடியைத் தும்பிக்கையால் வளைத்து உண்ண முயல்வது போன்ற உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடு ஒன்றும் கிடைத்துள்ளது. 

இங்கு கிடைத்த பானை ஓடுகளில் உள்ள பண்டைத்தமிழ் எழுத்துக்கள் மதுரை மீனாட்சிபுரத்தில் உள்ள தமிழ் எழுத்துக்களைப் போன்று உள்ளதாக டாக்டர் நாகசாமி கூறுகிறார்.

இங்கு கைப்பிடியுடன் காணப்படும் இரும்புவாள் ஒன்றும், கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககாலப் பாண்டியர் காலச் சதுரக் காசு ஒன்றும், பல ரோமானியக் காசுகளும் கிடைத்துள்ளன.

அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடு ஒன்றில் பண்டைய தமிழ் எழுத்தில் ‘சமூதஹ’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படும் குகைக் கல்வெட்டுகளிலும் ‘சமூதஹ’ என்ற சொல் காணப்படுகிறது. இதன்மூலம் தமிழகத்திற்க்கும் இலங்கைக்கும் நெடுங்காலத் தொடர்பு இருந்துள்ளதை அறியலாம்.

கிரேக்க கலைப்பாணியை ஒத்துள்ள, ஒரு பெண் தன் குழந்தையை இடுப்பில் தாங்கி உள்ளதைப்போன்று சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு பானை ஓட்டில் மூன்று பெண்கள், விசிறியை தம் கைகளில் கொண்டும், ஒரு கையில் மதுக்குடத்தைத் தாங்கியும் காணப்படுகின்றனர். இவை எகிப்து பிரமீடுகளில் உள்ள வண்ண உருவங்களை போன்று உள்ளன. 


கடலில் நிற்கும் பெரிய கப்பல்களில் இருந்து சரக்குகளை சிறிய ஓடங்களில் இறக்குவதற்கு வசதியாக அழகன்குளம் வைகை ஆற்றின் கழிமுகப் பகுதியில் அமைந்துள்ளது. இலக்கியங்களில் கூறப்படும் மருங்கூர் பட்டினம் தான் அழகன்குளம் என்பதை அகழாய்வுகள் நிரூபித்துள்ளன.

2 comments:

  1. இலங்கையில், கோணேசர் கல்வெட்டு என்னும் இலக்கியத்தில்(இது திருகோணமலையிலுள்ள பழம் கோயிலான கோணேசர் குறித்த இலக்கியம்) பண்டைக் காலத்தில் இங்கு ஆட்சி புரிந்த குளக்கோட்டு மன்னன் என்பவன், (சோழன் வரராதேவன் மகன் ராசசிருங்க மகராசன்) "கோயில் தொழும்புகள் செய்ய" மருங்கூரிற்கு சென்று வளவரின் நல்லோரை மரக்கலத்திதேலற்றி திருகோணமலையில் குடியேற்றியதாக கூறப்பட்டுள்ளது..
    தானத்தார் எனும் குடிகள் குடியேற்றப்பட்டதாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
    மற்றும் வரிப்பத்தார் வன்னிமைகள் குடியேற்றப்பட்டதாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
    இக்கோயிலுக்கு சோழநாட்டிலிருந்து "ஒரு நாளைக்கு இரண்டவணச் செம்பூச் சம்பா அரிசி வந்ததாகவும்” கூறப்பட்டுள்ளது.
    Vijey

    ReplyDelete
  2. இலங்கையில், கோணேசர் கல்வெட்டு என்னும் இலக்கியத்தில்(இது திருகோணமலையிலுள்ள பழம் கோயிலான கோணேசர் குறித்த இலக்கியம்) பண்டைக் காலத்தில் இங்கு ஆட்சி புரிந்த குளக்கோட்டு மன்னன் என்பவன், (சோழன் வரராதேவன் மகன் ராசசிருங்க மகராசன்) "கோயில் தொழும்புகள் செய்ய" மருங்கூரிற்கு சென்று வளவரின் நல்லோரை மரக்கலத்திதேலற்றி திருகோணமலையில் குடியேற்றியதாக கூறப்பட்டுள்ளது..
    தானத்தார் எனும் குடிகள் குடியேற்றப்பட்டதாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
    மற்றும் வரிப்பத்தார் வன்னிமைகள் குடியேற்றப்பட்டதாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
    இக்கோயிலுக்கு சோழநாட்டிலிருந்து "ஒரு நாளைக்கு இரண்டவணச் செம்பூச் சம்பா அரிசி வந்ததாகவும்” கூறப்பட்டுள்ளது.
    Vijey

    ReplyDelete