தமிழகத்தில்
சிறப்புடன் விளங்கியவை இரண்டு தொண்டி
துறைமுகங்கள். ஒன்று அரபிக் கடலோரம் சேர நாட்டில் உள்ள தொண்டி. மற்றொன்று வங்கக்கடலோரம் பாண்டிய
நாட்டில் இருக்கும் தொண்டி.
வங்கக்
கடலோரம் பாண்டிய நாட்டில் உள்ள நமது தொண்டியின் சிறப்புகளை சிலப்பதிகாரம் கூறுகிறது. கிழக்கிலிருந்து வரும் காற்று
தொண்டி துறைமுகத்தில் குவிக்கப்பட்டுள்ள
அகில், துகில், ஆரம், கற்பூரம் ஆகிய பொருள்களின்
வாசனைகளை சுமந்து
கொண்டு மதுரை வருகிறது என தொண்டி பற்றிய செய்தி சிலப்பதிகாரத்தில் உள்ளது.
சேதுப்பாதையில் அமைந்துள்ள தொண்டி பாண்டியர் ஆட்சிக்காலத்தில் இடையளநாடு, தலையூர் நாடு என
வழங்கப்பட்ட பகுதியில் இருந்துள்ளது. சங்ககாலத்தில்
அயல்நாட்டு வாணிகத் தொடர்புக்கு என பாண்டியர்களுக்கு முக்கியமான இரு
துறைமுகங்களாக விளங்கியவை கொற்கையும், அழகன் குளமும் ஆகும். கொற்கை தாமிரபரணி
ஆற்றுக் கரையிலும் அழகன்குளம் வைகைக்கரையிலும் அமைந்துள்ளன.
பாண்டிக்கோவை என்ற நூல் கி.பி.7ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்த நெடுமாறன் என்ற பாண்டிய மன்னனின் துறைமுகமாக தொண்டி விளங்கியதாக
தெரிவிக்கிறது. யாப்பெருங்கலக்காரிகை உரையில் கி.பி. 9ஆம்
நூற்றாண்டில் ஆண்ட வரகுண பாண்டியன் காலத்தில் இவ்வூர் வரகுணன் தொண்டி என
அழைக்கப்பட்டதாகக் கூறுகிறது.
நந்திக்கலம்பகம் என்ற நூல் பல்லவ மன்னனான
மூன்றாம் நந்திவர்மனை தொண்டியைக் கைப்பற்றியதற்காக பாராட்டுகிறது.
மேற்கண்ட இலக்கிய தகவல்கள் மூலம் சிலப்பதிகார காலம் முதல் கி.பி.9 ஆம்
நூற்றாண்டு வரை தொண்டி முக்கிய துறைமுகமாக இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
கொற்கை, அழகன்குளம் ஆகிய துறைமுகங்கள் தங்கள்
முக்கியத்துவத்தை இழந்தபோது தொண்டி ஒரு முக்கியத் துறைமுகமாக மாறியது. தொண்டியைக்
கைப்பற்றுவதற்காகப் பாண்டிய,
சோழ, இலங்கை மன்னர்களுக்கிடையே போர் நடந்து
வந்துள்ளது. இலங்கை மன்னன் தொண்டியைக் கைப்பற்றிய பின்பு மதுரை நோக்கி
முன்னேறினான் என சொல்லப்படுகிறது.
சோழர் படை இலங்கைப் படையை தொண்டியில் வைத்து
தோற்கடித்து துரத்தியது என ஆற்பாக்கம் கல்வெட்டு கூறுகிறது. கி.பி.12 முதல்
14 ஆம் நூற்றாண்டுகளில் பிற்காலப் பாண்டியர் ஆட்சியின் போது கிழக்கு நாடுகளுடன்
முக்கியமான வாணிகத் துறைமுகமாக தொண்டி விளங்கியது. இப்பகுதியில் கிடைத்த சீன
மண்பாண்டங்களின் மூலம் இதை அறிய முடிகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை நகரத்தார்கள்
தொண்டி துறை முகம் வழியாக இறக்குமதி செய்துள்ளார்கள். அப்போது
இங்கிருந்து இலங்கைக்கு 200 பயணிகள் பயணம் செய்யும் கப்பல் போக்குவரத்து நடந்து வந்துள்ளது.
தொண்டி என்றால் கடற்கழி எனப்பொருள். தொண்டியில் உள்ள கழிமுகப்பகுதியின் மூலம் இவ்வூருக்கும் இப்பெயர் வந்திருக்கலாம். இலக்கியதீபம்
என்ற நூல் தொண்டியை கானலன் தொண்டி என அழைக்கிறது இதன் பொருள் கடலால்
பிரித்து தனியாக்கப்பட்டது ஆகும்.
இவ்வூரிலுள்ள சிவன் கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்கள்
தொண்டியை பவித்ரமாணிக்கப்பட்டினம் என அழைக்கிறது. அதன் பொருள் தூய்மையான அரசன்
என்பது. இது முதலாம் இராஜராஜசோழனின் பெயர்களில் ஒன்று ஆகும். சோழர்கள்
ஆட்சிக்காலத்தில் இவ்வூர்
முக்கியத்துவம் பெற்று விளங்கி இருந்திருப்பதை இது காட்டுகிறது. கைக்களங்குளம் எனும்
கண்மாயில் கிடைத்த வீராபாண்டிய மன்னனின் கல்வெட்டு அதை கழிகணக்குளம் எனக் கூறுகிறது.
தொண்டியம்மன் கோயில் பகுதில் 1980 ஆம் ஆண்டு
தொல்லியல் துறையால்
நடத்தப்பட்ட அகழாய்வில் முதலாம் இராஜராஜ சோழன் கால செப்புக்காசு ஒன்றும் நாயக்க
மன்னர்கள் கால செப்புக் காசு இரண்டும் கண்டெடுக்கப்பட்டது. இதன் மூலம் தொண்டியின்
பழம் பெருமையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
No comments:
Post a Comment