இராமேஸ்வரத்தைச்
சுற்றி கடல் இருந்தாலும் பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையில் குதிரை தாண்டும்
தூரத்தில் பாம்பன் கால்வாய் அமைந்திருந்தது. கி.பி.1480 ஆம் ஏற்பட்ட மிகக் கொடிய புயல் காரணமாக அந்தக்
கால்வாய் பெரியதாக ஆனது. தொடர்ந்து ஏற்பட்ட புயல்களின் காரணமாக கடல்நீர் நிலையாக
ஏற்பட்டு இராமேஸ்வரம் தனித் தீவானது.
பாம்பன் கால்வாயின் மொத்த நீளம் 2.3 கி.மீ தூரம் ஆகும். பாம்பன் கால்வாயில் பாலம்
கட்டுவதற்கு கி.பி.1810 இல் ஆங்கிலேய அரசு ஒப்புதல் அளித்தது. பாம்பனுக்கும் மண்டபத்திற்கும் இடையே
கீழே கப்பலும் மேலே இரயிலும் செல்லக்கூடிய ஒரு பாலத்தைக் கட்டுவதென்றும், இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையிலுள்ள தலை
மன்னாருக்கும் சிறு கப்பல் போக்குவரத்து நடத்துவதென்றும் கி.பி.1912 இல் முடிவு செய்யப்பட்டது.
இந்திய நாட்டின் நிலப்பகுதியையும், இராமேஸ்வரம் தீவையும் இணைக்கும்
இந்தப்பாலம் மணற்கல்லுடன் கூடிய பவளப்பாறையில் 6740 அடி
நீளத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் தண்ணீரின் ஆழம் பாறைக்கு மேல் 6 அல்லது 7 அடி
தான். பாம்பனுக்கு அருகே கடலில் கி.பி.1837 இல் இங்கிலாந்து
பொறியியல் நிபுணர்கள் ஒரு கால்வாய் வெட்டி 12 அடி அகலமுள்ள படகுகள் செல்ல வழி
வகுத்தனர்.
கி.பி. 1911 ஜூன் மாதம் வேலை தொடங்கி கி.பி.1913 ஜூலை மாதம் வேலை
முடிவடைந்ததது. நாற்பது அடி நீளமுள்ள 145 தூண்களைக் கொண்டு பாலம் கட்டப்பட்டுள்ளது. கப்பல்கள் செல்ல
வழி விடும் தூக்குப்பாலம் 214 அடி நீளமுள்ளது. இப்பாலம் கட்டுவதற்கு தேவையான கற்கள் 170 கி.மீ.
தூரத்திற்க்கு அப்பால் இரயில் மூலம் கொண்டு வரப்பட்டது.
இடையில் வடகிழக்கு பருவக்காற்றால்
ஏற்பட்ட புயல்களில் ஆறு மாத காலம் வேலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இப்பாலம் கட்ட 4,000 டன் சிமெண்ட் 1,36,000 கனசதுரஅடி களிமண் 1,800 கன சதுரஅடி மணல் 80,000 கன சதுரஅடி
அளவுள்ள பெரும்பாறைகள், 2,600 டன்
இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளன.
தூக்குப்பாலம்
பகுதி அமைக்கும் பணி 1913 ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் மாதம்
முடிந்தது.
இப்பாலத்தில்
முதல் இரயில் 1914 பிப்ரவரி 24 இல் விடப்பட்டது. சென்னையில் இருந்து இலங்கையின்
கொழும்புக்குச் செல்வதற்காகவே இந்த பாலம் அமைக்கப்பட்டது. இதை போட் மெயில் சேவை என ஆங்கிலேயர் அழைத்தனர்.
சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை இரயிலில் பயணம் செய்து, பின்பு தனுஷ்கோடி முதல் தலைமன்னருக்கு சிறு
கப்பல் மூலம் பயணித்து அங்கிருந்து மீண்டும் கொழும்புக்கு இரயில் சேவை அமைக்கப்பட்டது.
1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியை புயல் தாக்கியது இப்பாலம் சிறிதளவு
சேதமடைந்தது. எனவே 45 நாள்கள் பராமரிப்புக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது. 2007 இல்
மதுரை முதல் இரமேஸ்வரம் வரை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டபோது, பாம்பன் பாலத்தின் குறுகிய தண்டவாளங்கள்
நீக்கப்பட்டு அகல இரயில் பாதையாக நமது
பொறியாளர்களால் மாற்றியமைக்கப்பட்டது. 2007 க்கு முன்பு வரை கப்பல் வரும்போது, தூக்குப்பாலத்தை மனிதர்களே இயக்கினார்கள். 2007 க்குப்
பிறகு இயந்திரங்களால் தூக்குப்பாலம் இயக்கப்படுகிறது.
நூறாண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும்
இப்பாலத்தில் இரயில்கள் மிக மெதுவான வேகத்திலேயே செல்கின்றன. இப்பாலம் காற்றின்
வேகத்தால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பாலத்தில் எந்த ஒரு
விபத்தும் நடைபெறா வண்ணம் மிகப்பாதுகாப்பாக ரயில் சேவை நடைபெறுகிறது. நூறாண்டு
கடந்து பெருமை கொண்ட இந்தியாவின் மிக
நீளமான கடல் பாலம் இது மட்டும்தான். இதை உலகப் பாரம்பரிய களமாக அறிவிக்க உரிய
முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 2,600 டன் இரும்பு பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கும் இப்பாலம் உள்ள பாம்பன் பகுதி உலகிலேயே இரண்டாவது அதிகளவு துருப்பிடிக்கும்
கடல்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment