Pages

Thursday 18 December 2014

புராண பெருமை பேசும் தேவிபட்டினம் - வே.இராஜகுரு



இராமநாதபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது தேவிபட்டினம். 

இவ்வூரில் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள திலகேஸ்வரர் கோயில் சிவனுக்காகவும், கடற்கரை ஓரம் கடலடைத்த இராமர் கோயில் திருமாலுக்காகவும், படையாச்சி தெருவில் உள்ள உலகம்மன் ஆலயம் அம்மனுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. 

கடலடைத்த இராமர் கோயிலுக்கு எதிரில் கடல் நடுவே அமைந்துள்ள நவபாஷாணம் எனப்படும் நவக்கிரகங்கள், பாவங்கள் நீங்கவும், முன்னோர் வழிபாட்டிற்கும் மக்களால் வழிபடப்படுகிறது.

இவ்வூர் இராமாயணத்தோடு தொடர்புடையது. இராமபிரான் இலங்கைக்குச் செல்லும் முன்னர் உப்பூரில் விநாயகரை வழிபட்டுவிட்டு, இங்கு கடலிலே ஒன்பது கற்களை ஒன்பது கோள்களாக பாவித்து வழிபட்டபோது கடல் அலைகள் குறுக்கிட்டதால், விஷ்ணுவை வேண்டினார் என்றும், பின்னர் கடல் அலைகள் அமைதியடைந்தன என்றும் புராணங்கள் கூறுகின்றன. இதனால் இங்குள்ள திருமால் கடலடைத்த இராமர் என அழைக்கப்படுகிறார். இக் கடலடைத்த இராமர் கோயில் நவகிரகத்துக்கு எதிரில் உள்ளது. 

இந்தியா முழுவதிலுமுள்ள 52 சக்தி பீடங்களில் இந்த ஊரில் உள்ள உலகம்மன் ஆலயமும் ஒன்றாகும். இது கடற்கரை ஓரத்தில் மிக அமைதியான சூழலில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

தேவிபட்டினத்தை கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஜடாவர்மன்    சுந்தரபாண்டியன் கல்வெட்டும் கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஜடாவர்மன் விக்கிரம பாண்டியன் கல்வெட்டும் முறையே இளங்கோ மங்கலமகிய உலக மாதேவிப்பட்டினம் என்றும் புறக்குடி ஆகிய ஸ்ரீவல்லபட்டினம் என்றும் குறிப்பிடுகின்றன. கி.பி. 1533 ஆம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டு தேவிபட்டினத்தை தேவிபட்டினம் என்றே குறிப்பிடுகின்றது. இம்மூன்று கல்வெட்டுகளும் தேவிபட்டினம் செவ்விருக்கை நாட்டில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. 

முதலாம் இராஜராஜ சோழனின் பட்டத்து அரசியான லோக மகா தேவியின் பெயரில் இவ்வூர் அமைக்கப்பட்டதாகக் கூறுவர். உலக மகா தேவி பட்டினம் என்பது நாளடைவில் தேவிபட்டினம் என வழங்கப்பட்டு வருகிறது.

கோபுரத்தை சிறியதாகவும், விமானத்தை பெரியதாகவும்  அமைப்பது சோழர் கால கட்டடக்கலை. இவ்வூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள திலகேஸ்வரர் கோயில் விமானம் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளதால் அது சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இங்கு கடலடைத்த இராமர் கோயில் உள்ளது. இது நவகிரகத்துக்கு எதிரில் உள்ளது.  

இவ்வூரின் பெயரோடு தொடர்புடைய உலகம்மன் (உலகமாதேவி) கோயில் படையாச்சி தெருவில் உள்ளது. பட்டினம் என்பது கடற்கரையோரம் உள்ள நகரை குறிக்கும் சொல். 

தேவிபட்டினம் கடற்கரையின் சதுப்பு நிலப் பிரதேசத்தில் அலையாத்தி காடுகள் காணப்படுகின்றன. இவ்வகை அலையாத்தி காடுகள் இவ்வூர் முதல் கிழக்கு கடற்கரை முழுவதும் பரவி உள்ளது.

No comments:

Post a Comment