Pages

Monday, 19 July 2021

திருச்சுழி அருகே குதிரை படத்துடன் காரணவர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

 


கோட்டுருவமாக வரையப்பட்ட குதிரையின் படத்துடன் காரணவர் பெயர் குறிப்பிடும் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவைச் சேர்ந்த புரசலூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவைச் சேர்ந்த புரசலூர் கண்மாயில் சிதறிக் கிடக்கும் கற்களில் பழமையான கல்வெட்டுகள் இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள் செ.ரமேஷ், த.ஸ்ரீபால் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு செய்தார்.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது,

புரசலூர் கண்மாய் பகுதியில் பழமையான ஒரு கோயில் இருந்து அழிந்து போயிருக்கிறது. அக்கோயில் கற்கள் கண்மாயில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இக்கற்களை பல ஆண்டுகளுக்கு முன் இவ்வூர் கண்மாய் மடைகள் கட்டப் பயன்படுத்தியுள்ளனர். சமீபத்தில் புதிதாக மடை கட்டுவதற்காக பழைய கற்களை அகற்றியபோது அதில் கல்வெட்டுகள் இருந்ததை அவ்வூரைச் சேர்ந்த ரமேஷ், ஸ்ரீபால் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.

கண்மாயில் சிதறிக் கிடப்பவை, கோயில் கருவறையின் வெளிப்பகுதியில் உள்ள ஜகதி, குமுதம், யாளிவரி ஆகியவற்றின் உடைந்த பகுதிகள் ஆகும். இதில் ஜகதியில் இரண்டும், குமுதத்தில் ஒன்றுமாக மூன்று கல்வெட்டுகள் உள்ளன. முழுமையாக இல்லாமல் துண்டுகளாக உள்ள இக்கல்வெட்டுகள் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும்.

          குமுதத்தின் உடைந்த கல்லில் உள்ள 4 வரி கல்வெட்டில் நிலத்தின் எல்லை குறிப்பிடப்படுகிறது. எனவே இவ்வூர் கோயிலுக்கு நிலதானம் வழங்கி இருப்பதை அறியமுடிகிறது. இதில் வருள்வாசகநல்லூர் எனும் ஊர் குறிப்பிடப்படுகிறது. இது திருவருள்வாசகநல்லூராக இருக்கலாம்.

ஜகதியில் இருந்த இரு துண்டுக் கல்வெட்டுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. இதில் ஒன்றில் இத்திகுளத்தராயன் என்பவர் பெயரும், அஞ்சு நிலையூர்க்கு சமைந்த காரணவர் பெயரும், அடுத்ததில் வெண்கலம் பறித்து மண்கலம், சுபமஸ்து ஆகிய சொற்களும் காணப்படுகின்றன. இதில் காரணவர் பெயருக்குக் கீழே குதிரையின் படம் கோட்டுருவமாக  வரையப்பட்டுள்ளது.

காரணவர், படைக்காரணவர் எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுபவர்கள் படை வீரர்கள் ஆவர். இக்கல்வெட்டில் குதிரை படம் வரையப்பட்டிருப்பதன் மூலம் அவர்களை குதிரைப்படை வீரர்களாகக் கருதலாம். அஞ்சு நிலையூர் காரணவர்கள் இவ்வூர் கோயிலுக்கு தானம் வழங்கி இருக்கலாம். அருப்புக்கோட்டை, இலுப்பைக்குடி, பள்ளிக்குறிச்சி, திருமோகூர் ஆகிய ஊர்களில் இருந்த காரணவர் பற்றி கி.பி.13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் சொல்லப்படுகிறது. படைவீரர்களுக்குத் தானமாக மன்னர்கள் வழங்கிய பள்ளிக்குறிச்சி என்ற ஊரை காரணவர்கள் நிர்வகித்து வந்துள்ளனர்.

கல்வெட்டில் சொல்லப்படும் அஞ்சு நிலையூர் மதுரை அருகிலுள்ள நிலையூராக இருக்கலாம். ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கிடாரம், நரிப்பையூர் உள்ளிட்ட சாயல்குடியின் கடற்கரைப் பகுதியிலும், அருப்புக்கோட்டை, மதுரையிலும் காரணமறவர்கள் என்பவர்கள் தற்போதும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வூர் தொடக்கப்பள்ளி அருகில், கி.பி.18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, கணவன் இறந்தபின் உடன்கட்டை ஏறிய பெண்களுக்கான இரு சதிக்கற்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.








மதுரை அருகே தே.கல்லுப்பட்டியில் மடைக் கல்வெட்டு கண்டுபிடிப்பு

 

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி ஈஸ்வரப்பேரி கண்மாய் மடையில் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு,  மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் து.முனீஸ்வரன், வழக்கறிஞர் மோ.நாகபாண்டியன், வி.சிவகுமார் ஆகியோர், தே.கல்லுப்பட்டி பகுதியில் மேற்கொண்டிருந்த களஆய்வின் போது, அக்னீஸ்வரர் கோயில் பட்டர் கி.செல்லப்பா, ஈஸ்வரப்பேரி கண்மாய் மடையில் பழமையான ஒரு கல்வெட்டு இருப்பதாகக் கொடுத்த தகவலின் பேரில் அக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, உதவிப் பேராசிரியர் முனைவர் து.முனீஸ்வரன் ஆகியோர் கூறியதாவது,

தே.கல்லுப்பட்டியின் அடையாளமாகத் திகழ்வது தேவன்குறிச்சி மலை. இம்மலையின் வடகிழக்குப் பகுதியில் ஈஸ்வரப்பேரி என்ற கண்மாய் உள்ளது. மலைச்சரிவில் இயற்கையாக அமைந்த பாறையை வெட்டி இக்கண்மாய்க்கு மடை அமைத்துள்ளனர். இதில் நீர் வெளியேற மூன்று கண் மடை அமைப்பு உள்ளது. இதன் முதல் கண்ணில், தரையில் பதிக்கப்பட்டுள்ள 3 அடி நீளமும், 1 அடி அகலமும் உள்ள ஒரு கல்லில் 7 வரிகள் கொண்ட கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு உள்ளது.

நீர் வழிந்தோடும் இடத்தில் இருந்ததால் இக்கல்வெட்டின் பல சொற்கள் அழிந்தநிலையில் உள்ளன. ஸ்வஸ்திஸ்ரீ எனத்தொடங்கும் இக்கல்வெட்டு பாடல் போன்ற வடிவில் அமைந்துள்ளது. ‘கலிங்கத்தரையர் பெயர் கொண்ட பெருங்குன்றைப் பெரியகுளம்என கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் இக்கண்மாய் மற்றும் மடை கலிங்கத்தரையரால் கி.பி.13ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாகக் கருதலாம். கலிங்கத்தரையர் என்பவர்கள் பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் கி.பி.12, 13 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த குறுநிலத் தலைவர்கள் ஆவர். கல்வெட்டில் சொல்லப்படும் கலிங்கத்தரையர் இப்பகுதியில் இருந்த குறுநிலத் தலைவராக இருக்கலாம். இக்கண்மாய் அமைத்த அவருடைய  சிறப்பை கல்வெட்டு விவரிக்கிறது. இதில் மன்னர் பெயர் அழிந்துள்ளது. கல்வெட்டில் கார் கொண்ட நிறத்தான், இன்னோசை, கடலிடத்தே போன்ற சொற்களும் வருகின்றன.

இம்மடையின் மேற்குப் பகுதியில் உள்ள பாறையில் திரிசூலம், சூரியன், சந்திரன், பாண்டியரின் செண்டுக்கோல் ஆகியவை கோட்டோவியமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மடையை அமைத்துக் கொடுத்து, சந்திரனும் சூரியனும் இருக்கும் வரைக்கும் இந்த தர்மம் நிலைத்திருக்கும் என்பதன் அடையாளமாக இச்சின்னங்கள் இடப்பட்டுள்ளன. 

தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோயிலில் உள்ள முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்த துண்டுக் கல்வெட்டுகளில் இவ்வூர்  செங்குடி நாட்டு பெருங்குன்றத்தூர் எனவும், இங்குள்ள குன்று பெருங்குன்றம் எனவும், இவ்வூர் கண்மாய் பெரியகுளம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இக்கல்வெட்டில் பெருங்குன்றைப் பெரியகுளம் என சொல்லப்படுகிறது. சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் எழுத்தமைதியே இதிலும் காணப்படுகிறது. எனவே இக்கல்வெட்டு கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளிதழ் செய்திகள்






களஞ்சியம், களஞ்சியராஜா, களஞ்சியராணி என பெயர் வைக்கும் வழக்கம் எப்படி வந்தது?

 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மக்கள் வாழ்வோடு பின்னிப்பிணைந்த 200 ஆண்டுகள் பழமையான நெற்களஞ்சியம் அழியும் நிலையில் உள்ளது. அதை பாரம்பரியச் சின்னமாக பாதுகாக்க ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா முழுவதும் இருந்து ராமேஸ்வரம் வருபவர்களுக்காக சேதுபதி மன்னர்கள் பல சத்திரங்களைக் கட்டியுள்ளனர். இத்தகைய சத்திரங்களுக்கு உணவுக்குரிய நெல் வழங்குவதற்காக ஆங்காங்கே நெற்களஞ்சியங்களையும் அமைத்துள்ளனர்.

நெற்களஞ்சியங்கள்

நெற்களஞ்சியத்தை 'இரையாயிரம் கொண்டான்' எனவும் அழைப்பர். ராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் இரையாயிரம் கொண்டான் என்ற ஒரு பெரிய நெற்களஞ்சியம் இருந்துள்ளது. ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், அழகர்கோயில், திருப்பாலைத்துறை உள்ளிட்ட சில கோயில்களில் பழமையான நெற்களஞ்சியங்கள் தற்போதும் உள்ளன.

சேதுநாட்டில் அதிகமான நெல் விளைச்சல் இருக்கும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும், பாம்பன், ராமேஸ்வரத்திலும் சிறிய நெற்களஞ்சியங்கள் இருந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. இந்நிலையில், மண்டபத்தில் மக்கள் வாழ்வோடு பின்னிப்பிணைந்த 200 ஆண்டுகாலம் பழமையான, அழியும் நிலையில் உள்ள ஒரு நெற்களஞ்சியம் இன்றும் மக்கள் வழிபாட்டில் உள்ளது  என்பது ஆச்சரியமானது.

இதை ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இதுபற்றிக் கூறியதாவது,

மண்டபம் நெற்களஞ்சியம்

தனுஷ்கோடி செல்லும் யாத்திரிகர்களுக்காக மண்டபத்தில் 2 சத்திரங்கள் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. இந்த சத்திரத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில், ராமேஸ்வரம் செல்லும் வழியில், சாலை மற்றும் ரயில் பாதையின் இடையில் இந்த நெற்களஞ்சியம் அமைந்துள்ளது. இதன் அருகில் பிராமணர்கள் குடியிருப்பும் இருந்திருக்கிறது.

மண்டபத்தில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பகுதிகளில் அதிக அளவில் சத்திரங்கள் இருந்துள்ளன. இப்பகுதியில் நெல் விளைச்சல் இல்லை. எனவே சேது நாட்டின் பிற பகுதிகளில் விளைந்த நெல்லை, சேமித்து வைத்து இப்பகுதிகளில் உள்ள சத்திரங்களுக்கு வழங்குவதற்காக இங்கு நெற்களஞ்சியம் அமைத்திருக்கலாம்.

அமைப்பு

இது சுமார் 15 அடி உயரமும் 50 அடி சுற்றளவும் கொண்டுள்ளது. வெயில், மழை, கடல் காற்றால் பாதிக்காத வகையில் வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது கீழே அகன்றும் மேலே குறுகியும் ஒரு குதிர் போன்ற அமைப்பில் உள்ளது. இதன் சுவர் 3 அடி அகலத்தில் உள்ளது. கடற்கரைப் பாறைக் கற்கள், சுண்ணாம்புச் சாந்து கொண்டு கட்டப்பட்டுள்ளது.



இதன் நடுவில் ஒரு சுவர் கட்டி இரு பகுதியாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு  பகுதியிலும் ஒரு ஜன்னல் உள்ளது. இதன் வடக்குப்பகுதியில் உள்ளே செல்ல 3 அடி உயரம் 2 அடி அகலத்தில் ஒரு வாசல் உள்ளது. இதே அளவிலான வாசல் நடுவில் உள்ள சுவரிலும் உள்ளது.

கூம்பு வடிவிலான இதன் மேற்கூரை இடிந்து விழுந்துவிட்டது. இதன் உள்ளே மரங்கள் வளர்ந்துள்ளன. மழைநீர் சுவரில் படாமல் வழிந்தோடும் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாசல் பகுதியின் முன்னால் வளைவான சுற்றுச்சுவர் கடற்கரைப் பாறைக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் வெளிப்பகுதியில் விளக்கேற்ற ஒரு மாடக்குழி உள்ளது.

பிரம்மச்சாரிகள்

மன்னர்கள் காலத்தில் இக்களஞ்சியத்தைப் பாதுகாக்க பிரம்மச்சாரி இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு காவலர்களாக இருந்த முனியசாமி சன்னியாசி, பிச்சை, கருப்பையா, தொட்டிச்சி ஆகியோரின் சமாதிகள் களஞ்சியத்தின் அருகில் உள்ளன. இவை களஞ்சியம் கோயிலாக இப்போதும் மக்களால் வழிபடப்படுகின்றன. இதன் நினைவாக இப்பகுதி மக்களிடம் களஞ்சியம், களஞ்சியராஜா, களஞ்சியராணி என  பெயர் வைக்கும் வழக்கமும் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாளிதழ் செய்திகள்






மக்கள் தொலைக்காட்சி




Sunday, 18 July 2021

17ஆம் நூற்றாண்டில் மதுரை கோயில் திருப்பணிக்கு தானமாக வழங்கப்பட்ட செலுகை கிராமம்

 


கி.பி.17ஆம் நூற்றாண்டில் மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயில் மகாகோபுர திருப்பணிக்கு செளிகை பிள்ளைகுடி என்ற கிராமம் தானமாக வழங்கப்பட்டதைச் சொல்லும் 378 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு சிவகங்கை மாவட்டம் செலுகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் செலுகையில் பிள்ளையார் கோயில் அருகில் ஒரு கல்வெட்டு இருப்பதாக திருவாடானை நாகணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் அர்ச்சுனன் அளித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டைப் படியெடுத்து ஆய்வு செய்தார். இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது,

4 அடி உயரமும், 1¼ அடி அகலமும் உள்ள ஒரு கல்லில் மேலே திரிசூலமும், அதன் இரு புறங்களிலும் சந்திரன், சூரியன் சின்னமும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழே 24 வரிகள் கொண்ட கல்வெட்டு உள்ளது.

ஸ்வஸ்திஸ்ரீ என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்கும் இக்கல்வெட்டு, சக ஆண்டு 1564 விய வருடம், பங்குனி மாதம் 14ஆம் நாள் வெட்டப்பட்டுள்ளது. இது கி.பி.1642 ஆகும். அப்போது மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் அய்யன் அவர்களுக்குப் புண்ணியமாக கூத்தன் சேதுபதியின் மகன் தம்பிசேதுபதித்தேவர் மதுரை மீனாட்சி சொக்கநாதர் சன்னதியில் மகாகோபுர திருப்பணிக்கு செளிகை பிள்ளைகுடி என்ற இக்கிராமத்தைத் தானமாக விட்டுள்ளார்.

கல்வெட்டில் கூறப்படும் தானத்துக்குக் குந்தகம் செய்வதனால் ஏற்படும் விளைவுகளைச் சொல்லும் ஓம்படைக்கிளவி பகுதியில் ‘இந்த ஊருக்கு அகுதம் பண்ணினவன் கெங்கைக் கரையிலே காரம் பசுவையும், மாதா பிதாவையும், பிராமணனையும், குருவையும் கொன்ற தோஷத்திலே போவாராகவும்’ என கூறப்பட்டுள்ளது. தற்போது செலுகை என அழைக்கப்படும் இவ்வூர் கல்வெட்டில் செளிகை பிள்ளைகுடி எனப்படுகிறது. ஊர்ப்பெயர் தெளிகை என கல்வெட்டில் எழுதப்பட்டு செளிகை என திருத்தப்பட்டுள்ளது.

போகலூரை தலைநகராகக் கொண்டு ஆண்ட கூத்தன் சேதுபதியின் மறைவுக்குப்பின் அவர் சகோதரர் தளவாய் சேதுபதி கி.பி.1635இல் ஆட்சிக்கு வந்தார். கூத்தன் சேதுபதியின் மகனான தம்பித்தேவருக்கு மன்னராகும் உரிமை வழங்கப்படவில்லை. எனினும் கி.பி.1639 மற்றும் 1640இல் திருமலை நாயக்கர் உதவியுடன் இவர் சேதுநாட்டை ஆண்டுள்ளார். அதன் பின்னரும் மதுரை மன்னரின் ஆதரவுடன் தம்பித்தேவர் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளதை இக்கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. இதில் உள்ள சக ஆண்டும் தமிழ் ஆண்டும் பஞ்சாங்கத்தின்படி பொருந்தவில்லை. தவறாக உள்ளது.

சேதுபதிகள் ஆட்சிக்காலத்தில் தானம் கொடுத்த நிலத்திலேயே அதற்குரிய கல்வெட்டையும் நடுவது வழக்கமாக இருந்துள்ளது. அவ்வகையில் தானமாக விடப்பட்ட இவ்வூரின் மத்தியில் இக்கல்வெட்டு நடப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி சொக்கநாதரை ஆண்டுதோறும் மாட்டு வண்டிகளில் சென்று வழிபடும் வழக்கம் இவ்வூர் மக்களிடம் சமீபகாலம் வரை இருந்துள்ளது. மதுரை குருவிக்காரன் சாலையில் இவ்வூர் பெயரில் செலுகை மண்டகப்படி மண்டபம் ஒன்று உள்ளது. இது இவ்வூராரின் மதுரையுடனான நீண்டகாலத் தொடர்புக்கு ஆதாரமாகத் திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


நாளிதழ் செய்திகள்







YOUTUBE VIDEO



தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் கோவில் காப்புக்காடுகள்

 

ஆதித் தமிழர்கள் ஆல், கடம்பு, வேம்பு, கள்ளி, ஓமை போன்ற மரங்களில் தெய்வங்கள் உறைவதாக நம்பினர். எனவே அம்மரங்களின் கீழ் படையலிட்டு வழிபட்டனர்.

மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை ஏரி, குளம், கண்மாய், ஏந்தல் என பலவற்றை வெட்டி அதில் தேக்கி வைத்தனர் நம் முன்னோர்கள். மாதம் மும்மாரி மழை பொழிய ஊர் தோறும் கோவில்களையும், அவற்றைச் சுற்றி காடுகளையும், தமிழர்கள் உருவாக்கி வைத்தனர். இதனால் கோவில்களும், வழிபாடுகளும், காடுகளும், நீர்ப்பாசனமும் இயற்கை சார்ந்ததாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருந்தன.

மருத்துவக் குணமுள்ள பல மூலிகைத் தாவரங்களைப் பெருக்கவும், இயற்கைச் சூழலைப் பாதுகாக்கவும் தமிழர்கள் பழங்காலக் கோவில்களைச் சுற்றி காடுகளை உருவாக்கினர். இத்தகைய காடுகள் காப்புக்காடுகள் எனப்படுகின்றன. அடர்ந்த காட்டுப்பகுதியில் மரங்களின் கீழ் உருவாக்கப்பட்ட தமிழர்களின் ஆதி ஆலயங்கள், பின்  மண்தளிகளாகவும், செங்கல் தளிகளாகவும், குடைவரை கோவில்களாகவும், கற்றளிகளாகவும் காலத்துக்கு ஏற்ப உருமாற்றம் பெற்றன.

இதுபற்றி தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக தொல்லியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது,

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில் காடுகள் அவ்வூர்களின் இயற்கையைப் பாதுகாக்கும் சூழியல் மண்டலங்களாகவே உருவாக்கப்பட்டன. இக்காடுகள் பருவமழையை வரவழைத்தல், மருத்துவ மூலிகைகள் தருதல், பறவைகள், விலங்குகளின் வாழ்விடம் என பலவித பயன்பாடுகளை நமக்கு வழங்குகின்றன. இக்கோவில் காடுகளில் உள்ள மரங்களை மக்கள் புனிதமாகக் கருதுவதால், அவற்றை கோவில் பணிகளுக்காக கூட வெட்டுவதில்லை. பல இடங்களில் இதை ஊர்க் கட்டுப்பாடாகவே பின்பற்றுகிறார்கள். கோவிலில் பொங்கல் வைக்க, தானாக உடைந்து விழும் குச்சிகளையே பயன்படுத்துகின்றனர். இவை இயற்கையைப் பாதுகாக்க நம் முன்னோர்கள் உருவாக்கிய வழிமுறைகள் ஆகும்.


ஐயனார், காளி ஆகிய தெய்வங்களுக்குரிய கோவில்கள், மரங்கள் சூழ்ந்த காப்புக் காடுகள் கொண்டதாகவே இன்றும் இருக்கின்றன. மேலும் பெரிய கோவில்களில் நந்தவனம் என்ற பெயரிலும் மரங்கள் நிறைந்த காடுகள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பெருங்கோவில்களில் தலவிருட்சமாக மரங்கள் வளர்க்கும் வழக்கமும் வந்திருக்கிறது.

கேரளாவில் பல சாஸ்தா மற்றும் காளி கோவில்கள் காப்புக் காடுகளால் உருவாகியுள்ளன. இத்தகைய கோவில்கள் காவு எனப்படுகின்றன. கா, காவு என்ற சொல்லுக்கு சோலை என்பது பொருள். காவுக்கோவில் அமைந்த பகுதிகளில் உருவான ஊர்களும் கோவில் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இப்போதும் அங்கு பழமை மாறாமல் இக்காடுகளும், அவற்றின் மூலிகைகளும் பாதுகாக்கப்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல கிராமக்கோவில்கள், முக்கியமாக ஐயனார், காளி கோவில்கள், உகாய், ஆதண்டை, ஆத்தி, மணிபூவந்தி, தாழை, நாட்டுவீழி, சங்கஞ்செடி உள்ளிட்ட பல மூலிகைத் தாவரங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. சில ஐயனார் கோவில்களில் உள்ள மூலிகைகள் மருந்தாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பார்த்திபனூர் அருகில் கீழ்ப்பெருங்கரை ஐயனார் கோவில், நரிப்பையூர் செவக்காட்டு ஐயனார் கோவில், போகலூர் முல்லைக்கோட்டை முனீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் 20க்கும் மேற்பட்ட மிஸ்வாக் எனப்படும் உகாய் மரங்கள் கோவிலைச் சுற்றி காவல் நிற்கின்றன. ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான மாவட்டம் என அழைக்கப்பட்டாலும் பல அரியவகை மரங்கள் இங்கு செழித்து வளர்ந்து வருவதை இன்றும் பல கிராமக் கோவில்களில் காணமுடிகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  காடுகள் சூழ்ந்த ஆலயங்களை கொம்படி ஆலயங்கள் என அழைப்பதாகக் கூறிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர்  ஆ.மணிகண்டன் மேலும் கூறியதாவது,

கந்தர்வக்கோட்டை ஒன்றியம் மங்கனூர், நத்தமாடிப்பட்டி கிராம எல்லையில் உள்ள வீசிக்காடு, கீழவாண்டான்விடுதி சிவனார் திடல்,  குன்றாண்டார்கோவில் ஒன்றியம் பெரம்பூர் வாட்டாருடையார் கோவில், வளத்தாரப்பன் கோவில் சிட்டை, அன்னவாசல் ஒன்றியத்திலுள்ள வெள்ளாஞ்சாறு புலிக்குத்தி அய்யனார் கோவில் காடு, திருமயம் ஒன்றியத்திலுள்ள மலையடிப்பட்டி கிராமத்திலுள்ள குருந்தடி அய்யனார் பாதுகாக்கப்பட்ட‌ வனப்பகுதி, மல்லாங்குடி பிடாரி அய்யனார் கோவில் காடு, திருவரங்குளம் ஒன்றியம் நெமக்கோட்டை கோவில் காடு என இம்மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான கோவில் காடுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு குருந்தமரம், வெப்பாலை, உசிலை, வீரமரம், நெய்க்கொட்டான், வெள்வேலம், காட்டத்தி, கிளுவை உள்ளிட்ட பல்வேறு மர வகைகள் இக்காடுகள் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை கதிர்காமம் முருகன் கோயில் அருகிலுள்ள யாளக்காட்டில் ஆயிரக்கணக்கான உகாய் மரங்கள் வளர்ந்துள்ளதாகத் தெரிவித்த இலங்கை வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் மேலும் கூறியதாவது,



மட்டக்களப்பு மாவட்டத்தில் மாமங்க ஈஸ்வரம், மண்டூர் கந்தசுவாமி கோயில், செட்டிபாளையம் கண்ணகி அம்மன் கோயில், களுதாவளை பிள்ளையார் கோயில், கோராவெளி அம்மன் கோயில் ஆகியவையும், அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோயில்,  மடத்தடி மீனாட்சி அம்மன் கோயில், உகந்தை முருகன் கோயில், தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில் ஆகியவையும், திருகோணமலை மாவட்டத்தில் சேனையூர் நாகதம்பிரான் கோயில், கட்டைபறிச்சான் அம்மச்சி அம்மன் கோயில், பறையான்குளம் எல்லைக்காளி அம்மன் கோயில் ஆகியவையும் வடமாகாணத்தில் நகுலேஸ்வரம், செல்வச் சந்நிதி முருகன் கோயில் ஆகியவையும், கேகாலை மாவட்டத்தில் அம்பன்பிட்டிய கந்தசுவாமி கோயில் ஆகியவையும் சோலைகளின் மத்தியில் அமைந்துள்ள முக்கியக் கோயில்களாகும். இங்கு மருதமரம், மாமரம், தென்னைமரம், வேப்பமரம், பனைமரம் ஆகிய மரங்கள் வளர்ந்துள்ளன.

இத்தகைய கோவில் காப்புக்காடுகளை மக்கள் அனைத்துக் கோவில்களிலும் வளர்த்து இயற்கையை பாதுகாத்து மழைவளம் பெறலாமே!

நாளிதழ் செய்திகள்





மக்கள் வழிபாட்டில் பிரமாண்டமான பொந்தன் புளி மரங்கள்

 


வெளிநாட்டிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்த பிரமாண்டமான பொந்தன் புளி மரங்களை மக்கள் புனிதமாகக் கருதி வழிபட்டுவருவதால் அவை அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளன. இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது,

தமிழ்நாட்டின் மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில், இயற்கையாக அமைந்த உப்பங்கழிகள் மூலம் பல இயற்கைத் துறைமுகங்கள் உருவாகியுள்ளன. இதனால் வெளிநாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் பலர் பழங்காலம் முதல் இங்கு வந்து தங்கிச் சென்றுள்ளனர்.

அவ்வாறு வந்த அரேபிய நாட்டு வணிகர்களால் ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, அரேபியா ஆகிய நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட பொந்தன் புளி மரங்கள் ராமநாதபுரம் பகுதிக்கு வந்துள்ளன. அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகளுக்கு தீவனமாக பொந்தன்புளி மரத்தின் இலைகள், கனிகள், காய்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக இம்மரத்தின் விதைகள் பாலைவனப் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு பாண்டிய நாட்டின் பல பகுதிகளில் நடப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், ராமநாதபுரம், தேவிபட்டினம், சேந்தனேந்தல், அழகன்குளம், ஏர்வாடி தர்கா, புல்லந்தை, மும்முடிச்சாத்தான், தேரிருவேலி, அருங்குளம், பனைக்குளம், சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தல், மதுரை அமெரிக்கன் கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் இம்மரங்கள் வளர்ந்து வருகின்றன. இலங்கையிலும் மன்னார் உள்ளிட்ட பல இடங்களில் இம்மரங்கள் காணப்படுகின்றன.

25 மீட்டர் வரையிலும் உயரமாக வளரக்கூடிய இதன் அடிமரத்தின் சுற்றளவு சுமார் 14 மீட்டர் வரை இருக்கும்.  அத்துடன் நேராக உருளை வடிவில் வளர்ந்து உச்சியில் கிளைகளைப் பரப்புகிறது. ஐவிரல் அமைப்புடைய இலைகள், இயற்கையாக உருவாகக் கூடிய பெரிய அளவிலான பொந்துகள், யானை போன்ற மிகப் பிரமாண்டமான அடிமரம், பயன்தரும் கனிகள், பட்டைகள் ஆகியவை இம்மரத்தின் சிறப்புகள். ஓராண்டில் ஆறு ஏழு மாதங்கள் வரை இதில் இலைகள் உதிர்ந்து காணப்படும். நீண்ட காம்புகளில் பழுப்பு நிறத்தில் உருவாகும் இதன் காய், பழங்கள் நீண்ட நாட்களுக்கு மரத்திலேயே தொங்கிக் கொண்டிருக்கும். இம்மரங்கள் சாதாரணமாக 2000 ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழ்பவை.

இதன் பிரமாண்டம், பொந்து போன்ற அமைப்பு, இலைகளின் புளிப்பு சுவை ஆகியவற்றால் இந்த மரத்தை தமிழர்கள் பொந்தன்புளி, யானைமரம், ஆனைப்புளி, பெருக்கமரம், பப்பரப்புளி என பல பெயர்களில் அழைக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் போபாப் என்கிறார்கள்.

ராமநாதபுரம் பெரியார் நகர், ஏர்வாடி ஏரான்துறை, அழகன்குளம்,  தங்கச்சிமடம், தேவிபட்டினம் உள்ளிட்ட இடங்களில் இம்மரத்தை மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். ஏர்வாடியில் இருந்த இரண்டு மரங்களில் ஒன்று பட்டுப்போய் விட்டது. அம்மரம் இருந்த இடத்தில் தற்போது முனீஸ்வரர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பெரியார் நகரில் வெட்டிச் சாய்க்கப்பட்ட மரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதில் 10 பேர் அமரக்கூடிய அளவிலான பெரிய பொந்து உள்ளது. தேவிபட்டினத்தில் உள்ள உலகம்மன் கோவில் வளாகத்தில் இம்மரம் புனிதமாக பாதுகாக்கப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டதாக இருந்தாலும் பிரமாண்டமான இம்மரங்களை பல இடங்களில் மக்கள் புனிதமாகக் கருதி வழிபட்டு பாதுகாத்து வருகிறார்கள். இதனால் இம்மரம் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டு வருகிறது.


நாளிதழ் செய்திகள்