Pages

Saturday, 11 July 2020

தமிழகத்தில் முதன்முறையாக தொல்லியல் பயிற்றுவிக்க இராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரியில் தொல்லியல் மன்றம் துவக்கம்

கீழடி அகழாய்வுக்குப்பின் கல்லூரி மாணவர்களிடையே தொல்லியல், பண்பாடு, தமிழர் நாகரிகம் ஆகியவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. மாணவர்களின் ஆர்வத்தை நிறைவேற்றவும், தமிழகத்தின் வரலாறு, கலை, பண்பாடு போன்றவற்றை அவர்கள் தெரிந்து கொள்ளவும் தமிழகத்தில் முதன்முறையாக இராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரியில் தொல்லியல் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் நடந்த மன்றத் தொடக்கவிழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் க.மகுதம்மாள் தலைமை வகித்துப் பேசும்போது, “இராமநாதபுரம் மாவட்டம் பாரம்பரிய சிறப்புமிக்கது. இம்மாவட்டத்தில் பல தொல்லியல் தடயங்கள் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிதைந்து வருகின்றன. மேலும் 2600 ஆண்டுகள் பழமையான கீழடியை விட அகழாய்வில் அதிக பொருட்கள் கிடைத்த அழகன்குளம், தேரிருவேலி ஆகியவை ரோமானியருடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்த  சர்வதேச நகரங்கள் ஆகும். தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு மாணவர்கள் நேரில் சென்று அவற்றின் சிறப்புகளைத் தெரிந்துகொண்டால் தான் அவற்றை பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் ஏற்படும்.

மாவட்டத்தில் சிறப்பாக வழங்கிவரும் கலைகள், நாட்டுப்புறப்பாடல்கள், வாய்மொழி வரலாறு ஆகியவற்றை இம்மன்றம் மூலம் மாணவர்கள் தேடித் தொகுக்கவேண்டும். தங்கள் பகுதிகளில் உள்ள ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள், தொல்லியல் தடயங்கள் ஆகியவற்றை தேடிக் கண்டறியவேண்டும் என மாணவர்களை கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டிலேயே ஒரு முன்மாதிரியாக இம்மன்றத்தை இக்கல்லூரியில் முதன்முதலில் தொடங்குவதாகத் தெரிவித்தார்.

உடற்கல்வி இயக்குநர் சோ.மணிமுத்து அனைவரையும் வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் மெ.செந்தாமரை முன்னிலை வகித்தார். இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும் தொல்லியல் ஆய்வாளருமான  வே.இராஜகுரு தொல்லியல் மன்றமும் ராமநாதபுரம் மாவட்டச் சிறப்புகளும் என்ற தலைப்பிலும், இராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை மாணவி வே.சிவரஞ்சனி சங்ககாலக் கல்வெட்டுகள் என்ற தலைப்பிலும் பேசினர். தொல்லியல் மன்றச் செயலாளர் முனைவர் இர.அதிசயம் நன்றி கூறினார்.



நாளிதழ் செய்திகள்









Friday, 10 July 2020

தினைக்குளம் அரசுப்பள்ளியில் தொல்பொருள்கள் கண்காட்சி

இராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் “தொல்பொருள்கள் காட்டும் வரலாறு” என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெற்றது. மன்றத்தின் செயலாளர்  கு.தமயந்தி  தலைமை வகித்தார். வரலாற்று மன்றச் செயலர் சு.பிரேமா அனைவரையும் வரவேற்றார்.

உதவி தலைமை ஆசிரியர் சி.ராமச்சந்திரன் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். மண்டபம், இராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.இராஜகுரு, வரலாற்றுக்கு ஆதாரத்தைத் தரும் தொல்பொருள்கள் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள எவ்வாறு உதவுகின்றன என்பதை அப்பொருள்கள் மூலம் விளக்கினார்.

இதில் பழைய, புதிய, நுண்கற்காலக் கருவிகள், இரும்புக்கால கருப்பு சிவப்பு மண் குவளைகள், பானை ஓடுகள், ரோமானிய, சீன நாட்டு பானை ஓடுகள், குறியீடு உள்ள பானை ஓடுகள், தக்களி, வட்டச்சில்லுகள், இரும்புத்தாதுக்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் அவற்றைப் பார்த்து அறிந்துகொண்டனர். பட்டதாரி தமிழாசிரியர் நா.விஜயலட்சுமி நன்றி கூறினார். கண்காட்சிக்கு உரிய ஏற்பாடுகளை  மாணவர்கள் முகம்மது சகுபர் சாதிக், ஷிபான் அலி, பிரதிபா, சோபனா, அப்சல்கான், தாரிக் அலி, ஹரிணி ஆகியோர் செய்திருந்தனர்.

நாளிதழ் செய்திகள்






கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் இளந்தளிர் விழிப்புணர்வு முகாம்

தேசிய ஆயுஷ் குழுமத்தின் வழிகாட்டுதலின் படி, பனைக்குளம் அரசு மருத்துவமனையும், கிருஷ்ணா தொன்மைப் பாதுகாப்பு மன்றமும், ரோட்டரி கிளப் ஆப் ஈஸ்ட் கோஸ்ட்டும் இணைந்து இளந்தளிர் விழிப்புணர்வு முகாம் மற்றும் மூலிகைக் கண்காட்சியை தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 31.01.2020 அன்று நடத்தின.

ரோட்டரி கிளப் தலைவர் கணேசக்கண்ணன், செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளிச் செயலாளர் ஜீவலதா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற இந்திய மருத்துவ முறைகள் பற்றி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இயற்கையான இம்மூலிகைகளை வளர்த்துப் பயன்பெறவும் மூலிகைக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் நரம்பியல் நிபுணர் டாக்டர் மலையரசு மூலிகைக் கண்காட்சியைத் திறந்துவைத்துப் பேசும்போது கூறினார்.

பின்னர் நடந்த இளந்தளிர் விழிப்புணர்வு முகாமில் மாவட்ட சித்தமருத்துவ அலுவலர் டாக்டர் கோ.புகழேந்தி இளந்தளிர் விழிப்புணர்வு பிரசுரத்தை வெளியிட்டு மாணவர்களுக்கு வழங்கினார்.

மூலிகைத் தாவரங்களைக் கண்டறிதல், மூலிகைத் தோட்டம் அமைத்தல், கண்காட்சி, நோய்த்தடுப்பு முகாம், ஊர்வலம் நடத்துதல் போன்ற செயல்பாடுகள் மூலம் இளந்தளிர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக பனைக்குளம் அரசு மருத்துவமனை உதவி சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் பா.ஸ்ரீமுகநாகலிங்கம் கூறினார். இயற்கையாக வளர்ந்துவரும் அரியவகை மூலிகைகள் பற்றியும் அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் இராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.இராஜகுரு புகைப்படங்கள் மூலம் விளக்கினார்.

இந்திய மருத்துவ முறைகள் பற்றி மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஜெயஸ்ரீ முதலிடமும், சபிபா பானு இரண்டாமிடமும், அஃப்ரா பானு மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலர் சந்தியா நன்றி கூறினார்.


நாளிதழ் செய்திகள்




தமிழ்நாடு முழுவதும் பாரம்பரிய நெல்லின் பெயரில் ஊர்கள் – வே.இராஜகுரு


தமிழ்நாடு முழுவதும் பாரம்பரிய நெல்லின் பெயரால் ஊர்கள் அமைந்துள்ளதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு கண்டறிந்துள்ளார்.

ஒவ்வொரு ஊரிலும்  அந்தந்தப் பகுதிகளில் சிறப்பாக இருக்கும் தாவரங்கள், பறவைகள்,  விலங்குகள்,  நில அமைப்புகள்,  நீர் அமைப்புகளைக் கொண்டு அவ்வூருக்கு பெயரிடுவது சங்ககாலம் முதல் தமிழர் வழக்கம். வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை  மாவட்டங்களில் மழைநீர், ஆற்றுநீரைச் சேமித்து வைக்கும் கண்மாய்கள், ஏந்தல்கள், குளங்கள், குட்டைகள், ஊருணிகளின் பெயரில் பல ஊர்கள் உருவாகி உள்ளன.

          நெல் பாண்டிய நாட்டின் முக்கிய விளைபொருளாக இருந்துள்ளது. பல ஊர்கள் நெல் விளையும் கோட்டைகளாக இருந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 72 ஊர்கள் கோட்டை என பெயர் பெற்றுள்ளன. கற்கோட்டைகளால் அவ்வூர்களுக்கு இப்பெயர் ஏற்படவில்லை. நெல் விளையும் கோட்டைகள் என்பதால் அப்பெயர் பெற்றுள்ளன.

ஊர்ப்பெயர்கள் பற்றி ஆய்வு செய்து வரும் இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு, சூரன்குறுவை, வாலான், அரியான், கூரன், நரியன், புழுதிக்கார், புழுதிவிரட்டி ஆகிய பாரம்பரிய நெல்லின் பெயரால் தமிழ்நாடு முழுதும் ஊர்கள் அமைந்துள்ளதைக் கண்டறிந்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது,

சூரன்குறுவை

சூரன்குறுவை அல்லது சூரக்குறுவை நெல் 130 நாட்களில் வளரும் தன்மையுடையது. கரும்பழுப்பு நிறமுடைய இதன் அரிசி இட்லி, தோசைக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்நெல் பல கோட்டைகள் விளைந்ததால் இராமநாதபுரம், தர்மபுரி மாவட்டங்களில் சூரன்கோட்டை என்ற பெயரில் ஊர் உருவாகியுள்ளது. இதேபோல் சூரங்காடு, சூரங்குளம், சூரங்குடி, சூரக்கோட்டை என தமிழ்நாடு முழுதும் பல ஊர்கள் உள்ளன.


வாலான்

நெல் முனையில் வால் போன்று காணப்படுவதால் ‘வாலான்’ எனப்படும் இந்நெல் 160 நாட்களில் வளரக்கூடியது. அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்றது. இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட இதில் நோய் எதிர்ப்புசக்தி அதிகம் உள்ளது. இந்த அரிசியைத் தொடர்ந்து சாப்பிடுவதால், பித்தம், வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்குகின்றன. இராமநாதபுரம் அருகில் வாலான்தரவை, சாயல்குடி அருகில் வாலம்பட்டி, பரமக்குடி அருகில் வாலான்குடி என இந்நெல்லின் பெயரில் பல ஊர்கள் உருவாகியுள்ளன.


அரியான்

அரியான் நெல், 120 நாட்களில் வறட்சியைத் தாங்கி 6½ அடி உயரம் வரை வளரக்கூடியது. இது கடலோரப்பகுதி, ஆற்றுப்படுகைகளிலுள்ள மணற்பாங்கான நிலங்களில் நன்கு வளரும். அரியான்கோட்டை, அரியான்வயல், அரியனேந்தல், அரியானூர் என தமிழ்நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்ட ஊர்கள் அரியான் எனும் நெல் பெயரில் உள்ளன. இராமேஸ்வரத்தில் உள்ள அரியான்குண்டு சிங்கத்தை சின்னமாகக் கொண்ட கடல்வணிகர்களின் பெயரால் உருவாகியிருக்கலாம். இவ்வூரில் ஒரு பௌத்தப்பள்ளி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கூரன்

கூரன் என்னும் பாரம்பரிய நெல்வகை குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை. இந்நெல் தற்போது புழக்கத்தில் இல்லை எனத் தெரிகிறது. சாயல்குடி அருகில் உள்ள கூரன்கோட்டை எனும் ஊர், கூரன் நெல்லின் பெயரால் அமைந்துள்ளதை அறியமுடிகிறது.

நரியன்

இது இராமநாதபுரம் மாவட்டத்தில் பாரம்பரியமாக பயிரிடப்படுகின்ற பெருநெல்வகையாகும். இதன் பெயரில் நரியனேந்தல், கீழநரியன், நரியம்பட்டி, நரியன்கொல்லை, நரியனேரி, நரியன்கோட்டை, நரியனூர் என 30க்கும் மேற்பட்ட ஊர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளன.

புழுதிக்கார், புழுதிவிரட்டி

100 நாளில் விளையும் புழுதிவிரட்டி எனும் மட்டநெல் ரகம், கடும் வறட்சியிலும் காற்றிலிருக்கும் ஈரப்பதத்தைக் கொண்டு வளரக்கூடியது. அதேபோல், புழுதிக்கார் எனும் ரகம் மானாவாரி, இறவைப் பகுதிகளில் செழித்து வளரக்கூடிய, நேரடி நெல் விதைப்பு முறைக்கு ஏற்றது. சராசரியாக 130 செ.மீ. வளரக்கூடிய, சிவப்பு நிறமுடைய தடித்த நெல் ரகமாகும். இவற்றின் பெயரால் புழுதிக்குளம், புழுதிக்குட்டை, புழுதிப்பட்டி, புழுதியூர், புழுதிக்குடி என பல ஊர்கள் உருவாகியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்

Times of India News







தேசிய சித்தமருத்துவ தினத்தை முன்னிட்டு திருப்புல்லாணியில் மூலிகைக் கண்காட்சி


தேசிய சித்த மருத்துவ தினம் ஒவ்வொரு ஆண்டும் அகத்தியர் பிறந்த மார்கழி மாதத்தில் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஜனவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது.

சித்தமருத்துவ தினத்தை முன்னிட்டு மத்திய சித்த ஆராய்ச்சிக் குழுமத்தின் அறிவுரையின்பேரில், மாவட்ட சித்தமருத்துவ அலுவலகத்தின் வழிகாட்டுதலில்,   பனைக்குளம் அரசு மருத்துவமனையும், திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றமும் இணைந்து மூலிகை கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு  மேல்நிலைப்பள்ளியில் 08.01.2020 அன்று நடத்தின.


            பள்ளித் தலைமையாசிரியர் கூ.செல்வராஜ் தலைமை வகித்துப் பேசும்போது, பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் மூலிகைத் தாவரங்களை வளர்த்துப் பயன்பெறவேண்டும் என கேட்டுக் கொண்டார். உத்தரகோசமங்கை சித்தமருத்துவ அலுவலர் க.முத்துராமன் அனைவரையும் வரவேற்றார்.


பள்ளி மாணவர்களிடையே சித்தமருத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இம்மருத்துவத்தை தொடர்ந்து பின்பற்றச் செய்யவும், நமது பாரம்பரிய மூலிகைகள் பற்றி அறிந்து கொள்ளவும் மூலிகைக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சித்தமருத்துவ அலுவலர் டாக்டர் கோ.புகழேந்தி கண்காட்சியைத் திறந்துவைத்துப் பேசும்போது கூறினார். இளந்தளிர் விழிப்புணர்வு பிரசுரத்தை மாணவர்களிடம் வழங்கினார்.

பின்னர் நடந்த கருத்தரங்கில் சித்தமருத்துவம் தோன்றிய வரலாறு, சித்தர்கள் எழுதிய மருத்துவ நூல்கள், இந்திய மருத்துவமுறைகள் பற்றி பனைக்குளம் அரசு மருத்துவமனை உதவி சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் பா.ஸ்ரீமுகநாகலிங்கம்  கூறினார். நமது மாவட்டத்தில் உள்ள அரியவகை மூலிகைகள் பற்றி தொன்மைப் பாதுகாப்பு மன்ற செயலர் வே.இராஜகுரு ஒளி ஒலிக் காட்சி மூலம் விளக்கினார்.


சித்தமருத்துவம் பற்றி மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் முகம்மது பாசில் முதலிடமும், ஜெ.சுஜிதாஸ்ரீ இரண்டாமிடமும், அபிநயஸ்ரீ மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 8-ம் வகுப்பு மாணவி வி.டோனிகா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் செய்தனர்.

நாளிதழ் செய்திகள்








தினமலர் அக்கம்பக்கம் பகுதியில்... எட்டாம் வகுப்பு மாணவி டோனிகாவின் செய்தி


திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு  மாணவி டோனிகா கோவில் கட்டடக்கலையின் அடிப்படையை கற்றுள்ளார். அது பற்றி தினமலர் அக்கம்பக்கம் பகுதியில் வந்த செய்தி.