Pages

Friday, 10 July 2020

பரமக்குடி அருகே கலையூரில் கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிப்பு - வே.இராஜகுரு


இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கலையூர் வில்லார் உடையார் ஐயனார் கோயிலில் கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உடைந்த நிலையிலான  சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு,   திருவாடானை துணை வட்டாட்சியர் சி.ஆண்டி ஆகியோர் கலையூரில் கள மேற்பரப்பாய்வு செய்தபோது, அவ்வூர் வில்லார் உடையார் ஐயனார் கோயிலில் உடைந்த நிலையில் இருந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தைக் கண்டுபிடித்தனர்.

இது பற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு கூறியதாவது,

இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், கமுதி, பொக்கனாரேந்தல், மேலஅரும்பூர், அருங்குளம், திருப்புல்லாணி, புல்லக்கடம்பன், புல்லுகுடி, புல்லூர், புல்லங்குடி   உள்ளிட்ட இடங்களில் சமண மதம் பரவி இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கலையூரில் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பம் 2 அடி உயரமும், 1½ அடி அகலமும் உள்ளது.  முழுவதும் கருங்கல்லால் ஆனது. இச்சிற்பத்தில் அசோகமரத்தின் வளைந்த கிளைகளின் கீழ் பிரபாவளி என்னும் ஒளிவட்டம் உள்ளது. அசோகமரத்தின் கிளைகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. பிரபாவளியின் உள்ளே அமர்ந்தநிலையில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் இருந்திருக்கவேண்டும். தீர்த்தங்கரர் உருவம் இருந்த பகுதி முழுவதும் உடைத்து சிதைக்கப்பட்டுள்ளது.

தீர்த்தங்கரரின் இரு பக்கமும் சாமரம் வீசும் இரு இயக்கர்களின்  சிற்பங்கள் இருக்கும். இதில் பிரபாவளியின் வலப்பக்கத்தில் இயக்கனின் தலை மட்டும் உள்ளது. இடதுபக்கம் இருந்த இயக்கன் சிற்பமும் தீர்த்தங்கரரின் கீழ்ப்பகுதியும் உடைத்து தனியாக்கப்பட்டுள்ளது. பிரபாவளியின் மேல்பகுதியில் சந்திராதித்தம், நித்தியவிநோதம். சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை என்ற அமைப்பு உள்ளது. முக்குடை என்பது சமண சமயச் சின்னம் ஆகும். இச்சிற்பத்தின் அமைப்பைக் கொண்டு இது சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரரின் சிற்பமாக இருக்கும் என ஊகிக்கலாம். மேலும் இதன் காலம் கி.பி.10ஆம் நூற்றாண்டாக கருதலாம்.

இக்கோயில் வளாகத்தில் மணற்பாறையில் செதுக்கப்பட்ட பூரணி, பொற்கலையுடன் காட்சி தரும் சிறிய அளவிலான ஐயனார் சிற்பம் ஒன்று மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது. இது சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்.


சைவ, வைணவ சமயங்களின் மறுமலர்ச்சிக் காலத்தில், சமண மதம் வலுவிழந்து, அதைப் பின்பற்றுவோர் இல்லாத நிலையில் பிற மதத்தினரால் தீர்த்தங்கரரின் சிற்பம் உடைக்கப்பட்டிருக்கலாம்.

திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம், பொக்கனாரேந்தல் ஆகிய பகுதிகளிலும் இது போன்ற சமணத் தீர்த்தங்கரர்களின் உடைந்த சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் தலை இல்லாதவை. இதில்  பொக்கனாரேந்தலில் உள்ள சிற்பம் மலைமேல் சாத்துடையார் என்ற  ஐயனார் கோயில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.


நாளிதழ் செய்திகள்









சிவகங்கை அருகே யானைச் சின்னம் உள்ள சூலக்கல் கண்டுபிடிப்பு - வே.இராஜகுரு


சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே பாப்பாகுடியில் 1000 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்தைச் சேர்ந்த யானைச் சின்னம் உள்ள சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரியும் மூவேந்தன் என்பவர் தனது ஊரான பாப்பாகுடி சமயன் கோயிலில் யானை சின்னம் உள்ள சூலக்கல் இருப்பதாக கொடுத்த தகவலின் பேரில், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர் கொல்லங்குடி  புலவர் காளிராசா ஆகியோர் அவ்வூரைச் சேர்ந்த இராமக்கண்ணன் உதவியுடன் ஆய்வு செய்தனர்.


இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு கூறியதாவது,

சூலக்கல்

மன்னர்கள் காலத்தில் கோயில்களின் தினசரி வழிபாட்டுக்காக, விளைநிலங்கள் மீது விதிக்கப்படும் வரியை நீக்கி அவற்றை கோயில்களுக்குத் தானமாக வழங்குவார்கள். இந்நிலங்களின் விளைச்சல் மூலம் கோயில் வழிபாடு தொடர்ந்து நடைபெறும்.  அவ்வகையில் சிவன் கோயிலுக்கு வழங்கும் நிலதானம் தேவதானம் என்றும், திருமால் கோயில்களுக்கு வழங்குவது திருவிடையாட்டம் என்றும், சமண, பௌத்தப் பள்ளிகளுக்கு வழங்குவது பள்ளிச்சந்தம் என்றும் அழைக்கப்படுகிறது.


இவ்வாறு சிவன் கோயிலுக்குத் தானமாக வழங்கும் நிலங்களின் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறிக்கப்பட்ட சூலக்கற்கள் நடப்பட்டு அவை பாதுகாக்கப்படும். இதுவே திருமால் கோயில் எனில் சங்கு, சக்கரமும்,  சமணப் பள்ளி எனில் முக்குடையும், பௌத்தப் பள்ளி எனில் தர்மசக்கரமும் எல்லைக்கற்களில் பொறிக்கப்பட்டிருக்கும்.

பாப்பாகுடி சமயன் கோயிலில் ஒரு சூலக்கல்லும், சக்கரம் பொறிக்கப்பட்ட ஒரு திருவாழிக்கல்லும் மக்கள் வழிபாட்டில் உள்ளன.

சூலக்கல் அமைப்பு

சமயன் கோயிலில் உள்ள சூலக்கல் 3 அடி உயரம், 1½ அடி அகலம் உள்ள  கருங்கல்லால் ஆனது. இதன் நான்கு பக்கங்களிலும் புடைப்புச் சிற்பமாக திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பக்கத்தில் திரிசூலத்தை தன் முதுகில் தாங்கிச் செல்லும் யானையின் சிற்பம் உள்ளது. அதன் மறுபக்கத்தில் சூலத்தின் மேல்பகுதியில் சந்திரனைக் குறிக்கும் பிறை வடிவம் உள்ளது. இக்கல்லில் யானைச் சின்னம் இருப்பதன் மூலம் அத்திகோசத்தார் எனும் யானைப்படை வீரர்கள் வழங்கிய தேவதான நிலத்தில் நட்டுவைக்கப்பட்டதாக இதைக் கருதலாம்.

அத்திகோசத்தார்

வணிகர்கள் தங்களின் பாதுகாப்புக்காக வைத்திருந்த யானைப்படையினர் அத்திகோசத்தார் எனப்பட்டனர். பெருவழிகளில் வணிகர்களை பாதுகாப்பதற்காக இவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். மன்னர்கள் கோயில்களுக்கு கொடையளிக்கும்போது உடன் இருந்து, அக்கொடையை பாதுகாக்கும் பணிகளையும் இவர்கள் செய்துள்ளனர். இவர்களைப் பற்றி முதன்முதலில் பூலாங்குறிச்சி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பாப்பாகுடியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள காளையார்கோயில், மதுரை தொண்டி வணிகப்பெருவழியில் இருந்துள்ளது. இங்கு தங்கியிருந்த அத்திகோசத்தார் எனும் யானைப்படையினர், அவ்வூர் சிவன்கோயிலுக்கு பாப்பாகுடியை தானமாக வழங்கி இருக்கலாம். தானமாக  வழங்கிய நிலத்தில் அவர்களின் யானைச் சின்னத்துடன் கூடிய சூலக்கல்லை  நட்டு வைத்திருக்கலாம். சோழர்கால கலைப்பாணியில் உள்ளதால் இது கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். இதேபோல் சோழர்காலத்தைச் சேர்ந்த காளைச் சின்னம் உள்ள நான்முக சூலக்கல்லை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் புதுக்கோட்டை அருகே வாழமங்கலத்தில் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.


நாளிதழ் செய்திகள்






அம்பாசமுத்திரம் அருகே 400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டுபிடிப்பு - வே.இராஜகுரு

            திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கௌதமபுரியில் 400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு, செயலாளர் ஞானகாளிமுத்து ஆகியோர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து பிரம்மதேசம் செல்லும் வழியில் கௌதமபுரி வண்டன் குளத்தின் கரையில் ஒரு சதிக்கல் இருப்பதை கள ஆய்வின் போது கண்டுபிடித்தனர்.


இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு கூறியதாவது,

சதி வழக்கம்

இறந்துபோன கணவனுடன் அவன் மனைவியும் உடன்கட்டை ஏறி உயிர் துறந்த பின்பு அவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுச் சின்னம் சதிக்கல் எனப்படுகிறது.

சதிக்கல் சிற்பத்தில் கணவனுடன் மனைவி இருப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கும். இப்பெண் சுமங்கலியாக இறந்தவள் என்பதைக் காட்ட  கையை உயர்த்தி இருப்பது போன்றும், அதில் வளையல் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்தவளாகவும் அவள் காணப்படுவாள். தீயில் பாய்ந்து உயிர் விடுவது போன்று சிற்பம் செதுக்கும் வழக்கம் இல்லை. இத்தகைய சதிக்கல் கோயில்களை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைப்பர். மாலை, சதி ஆகிய சொற்களுக்கு பெண் என்றும் பொருளுண்டு.

நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கைம்பெண்களுக்கு பல இன்னல்கள் நேர்ந்தன. ஆனால் கணவனுடன் உடன்கட்டை ஏறி இறந்துபோன பெண்களை தெய்வமாக போற்றி வணங்கினர். எனவே கணவன் மீது கொண்ட அன்பினாலோ, கட்டாயத்தினாலோ பெண்கள் உடன்கட்டை ஏறியுள்ளனர். ராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி இறந்தபின்  அவரின் 47 மனைவியரும் அவருடன் உடன்கட்டை ஏறியுள்ளனர். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை பகுதி மன்னர்களின் அடக்கஸ்தலம் மாலையீடு எனப்படுகிறது. 

அமைப்பு

            கௌதமபுரி வண்டன் குளக்கரையில் உள்ள சதிக்கல் 2½ அடி உயரம் 1 அடி அகலம் உள்ளது. இதில் ஆண், பெண் இருவரின் அமர்ந்த நிலையிலான சிற்பங்கள்  உள்ளன. ஆண் இடது கையையும், பெண் வலது கையையும் உயர்த்திக் கையில் எதையோ ஏந்திய நிலையில் உள்ளனர். இருவரும் மற்றொரு கையை தொடையில் வைத்துள்ளனர். கை மற்றும் மார்பில் அணிகலங்கள் அணிந்துள்ளனர். இருவரின் ஆடைகளும் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. தலையில் ஆணுக்கு உச்சியிலும், பெண்ணுக்கு இடது புறம் சரிந்த நிலையிலும் கொண்டை உள்ளது. பெண் கையில் வளையல் அணிந்துள்ளார். சிற்பம் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஆண் பெண் இருவரும் நீண்ட காதுகளுடன் காணப்படுகின்றனர். சிற்பத்தின் மேல் தோரணம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. திறந்த வெளியில் இருந்ததன் காரணமாக முகம் தேய்ந்துள்ளது.

வழிபாடு

            தற்போதும் வழிபாட்டில் உள்ள இச்சதிக்கல்லை இப்பகுதி மக்கள் தீப்பாஞ்சம்மன் என அழைக்கிறார்கள். பிரம்மதேசத்தில் உள்ள வாணியர் சமுதாயத்தினர் இதை வழிபடுகிறார்கள். எண்ணெய் செக்கு இருந்த காலத்தில் தினமும் எண்ணெய்யால் அபிசேகம் செய்துள்ளனர். கௌதமபுரியிலுள்ள மக்கள் கரையடி முனீஸ்வரர் கோயில் வழிபாட்டின் போது இதையும் வழிபடுகிறார்கள். இதன் அமைப்பைக்கொண்டு இது சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்






சோழர் காலத்தில் வணிக மையமாகத் திகழ்ந்த எஸ்.பி.பட்டினம் - வே.இராஜகுரு


இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் உள்ள எஸ்.பி.பட்டினம் சோழர் காலத்தில் ஒரு வணிக மையமாக இருந்ததாக மரபு நடை நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் ஒவ்வொரு மாதமும் பாரம்பரியச் சிறப்பு வாய்ந்த இடங்களை பொதுமக்கள், மாணவர்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் மரபு நடை நிகழ்வை நடத்தி வருகிறது. 13வது மரபு நடை நிகழ்வு இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் 28.07.2019 நடைபெற்றது. ஆய்வு நிறுவனத்தின் செயலாளர் சோ.ஞானகாளிமுத்து அனைவரையும் வரவேற்றார்.


இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு பேசியதாவது, “முத்தூற்றுக் கூற்றத்து கீழ்கூற்று சுத்தவல்லியான சுந்தரபாண்டியபுரம் என கல்வெட்டுகளில் இவ்வூர்  குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இப்பகுதியைக் கைப்பற்றிய பின்னர், சுத்தவல்லி என்ற இவ்வூர் பெயர் சுந்தரபாண்டியபுரம் என மாற்றப்பட்டிருக்கிறது. புரம்,பேட்டை ஆகியவை வணிக நகரங்களைக் குறிக்கும் சொற்கள் ஆகும்.  எனவே சுந்தரபாண்டியன்பட்டினமும், சோழகன்பேட்டையும் இரட்டை வணிக நகரங்களாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. இவ்வூர் மலைமண்டலமான சேர (கேரள) நாட்டுடன்  தொடர்புடையதாக இருந்துள்ளது. மலைமண்டலத்துக் காந்தளூரான எறிவீரபட்டினத்து இராமன் திருவிக்கிரமனான தேவேந்திர வல்லபப் பதினெண்பூமிச் சமையச் சக்கரவத்திகள் என்பவர் இக்கோயிலுக்கு நிலதானம்  வழங்கியுள்ளார்.


கி.பி.13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில் சொக்ககூத்தர், தம்பிராட்டி என  இறைவன், இறைவி பெயர் சொல்லப்பட்டுள்ளது. இதே கல்வெட்டில் ஆட்டை எனும் சோழர்கள் பயன்படுத்திய ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது.

இவ்வூரில் பாண்டியர் காலத்திலேயே ஒரு மடம் இருந்துள்ளதை கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. தற்போதும் சிவன்கோயிலின் தெற்கே ஒரு மடம் உள்ளது. இதன் அமைப்பைக் கொண்டு இம்மடம் கி.பி.8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதலாம். இந்த மடத்துக்கு நிலதானம் வழங்கப்பட்டதாக கல்வெட்டுகள் சொல்கின்றன. இம்மடம் பௌத்தமடமாக இருந்து பின் சைவ மடமாக மாற்றப்பட்டிருக்கலாம். அங்குள்ள ஒரு நாசிக்கூட்டில் புத்தரின் புடைப்புச் சிற்பம் உள்ளது இதை உறுதிப்படுத்துகிறது. 


இவ்வூரின் தெற்கே பாம்பாற்றின் கழிமுகப்பகுதியில்  ஒரு பாதக்கோயில், ஒரு மடம் உள்ளது. இங்கு சமண மதத்தின் 23வது தீர்த்தங்கரரான பார்சுவநாதரின் சிறிய புடைப்புச் சிற்பம் உள்ளது. இது ஒரு சமணப்பள்ளி என சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இங்கு 4 துண்டுக்கல்வெட்டுக்கள் உள்ளன. இவை திரிபுவனச் சக்கரவத்திகள் விக்கிரமபாண்டியனின் 5ஆம் ஆட்சியாண்டில்  வெளியிடப்பட்டுள்ளன.  இதில் வெட்டுடையார் உய்யவனதார முதலி என்பவர் பெயர் காணப்படுகிறது. இவர் அரசு அதிகாரியாக இருக்கலாம்.  இதில் ‘இத்தேசிநா’ என வரும் சொல் மூலம் வணிகர்கள் இக்கோயிலுக்கு நிலதானம் வழங்கியிருப்பதை அறிய முடிகிறது.


மேலும் சுந்தரபாண்டியன்பட்டினம், தீர்த்தாண்டதானம், வட்டானம், தொண்டி உள்ளிட்ட ஊர்களில் கப்பல், படகு கட்டும் தொழில் நடந்திருக்கலாம். எஸ்.பி.பட்டினம் மற்றும் தொண்டியில் உள்ள ஓடாவி தெரு இதை உறுதிப்படுத்துகிறது. ஓடாவி என்பது மரக்கலம் செய்யும் தச்சர்களைக் குறிக்கும் சொல் ஆகும். இவ்வூர் அருகில் உள்ள எட்டிசேரி வணிகர்களான எட்டி – செட்டிகளின் குடியிருப்பாக இருந்துள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

            ஒருங்கிணைப்பாளர் நிவாஸ்சங்கர் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொறியாளர் அரியநாயகம், ஓய்வுபெற்ற நேவி கமாண்டர் நடராஜன், வே.சிவரஞ்சனி ஆகியோர் செய்திருந்தனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சிவன் கோயில், சமணப்பள்ளி ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.

நாளிதழ் செய்திகள்






Thursday, 9 July 2020

திருப்புல்லாணி அரசுப்பள்ளியில் பாரம்பரிய தமிழர் கலைகளும் வணிகமும் கருத்தரங்கம்


இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் ‘பாரம்பரிய தமிழர் கலைகளும் வணிகமும்’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்கம் 14.11.2019 அன்று நடைபெற்றது. 7 ஆம் வகுப்பு மாணவன் மு.சண்முகராஜ் அனைவரையும் வரவேற்றார். மன்றத்தின் செயலாளர்  வே.இராஜகுரு முன்னிலை  வகித்தார்.

கருத்தரங்கத்துக்கு பள்ளியின் உதவி தலைமையாசிரியர் இ.சண்முகநாதன்  தலைமை வகித்துப் பேசுகையில் “உலகளவில் நமது கலைகள் தனித்துவம் பெற்று விளங்குகின்றன. இவற்றின் சிறப்பை அறிந்து மாணவர்கள் அவற்றை பாதுகாக்கவேண்டும்” என்றார்.
கருத்தரங்கத்தில் ஓவியக்கலை குறித்து ஜீ.ஹரிதா ஜீவா, சிற்பக்கலை குறித்து க.அபிராமி, நிகழ்கலை குறித்து வி.டோனிகா, மண்பாண்டக்கலை குறித்து மு.பிரவீணா, கப்பற்கலை குறித்து சே.ஆனந்தி, தமிழர் வணிகம் குறித்து ஜெ.யோகஸ்ரீ ஆகியோர் பேசினர். 8-ம் வகுப்பு மாணவன் மு.மகேஸ்வரன் நன்றி கூறினார். 8-ம் வகுப்பு மாணவிகள் சு.முத்துமாரி, ஜெ.சுஜிதாஸ்ரீ ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எட்டாம் வகுப்பு மாணவர்கள் து.மனோஜ், பாலாஜி, அஸ்வின்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


நாளிதழ் செய்திகள்








மாணவியர் பேசியதன் காணொளிகள்

'தமிழர் வணிகம்' ஆறாம் வகுப்பு மாணவி திருப்புல்லாணி ஜெ.யோகஸ்ரீ



'ஓவியக்கலை பற்றி 7-ஆம் வகுப்பு மாணவி ஆணைகுடி ஜீ.ஹரிதா ஜீவா



'நிகழ்கலை' எட்டாம் வகுப்பு மாணவி பள்ளபச்சேரி வி.டோனிகா


'கப்பற்கலை' - 7ஆம் வகுப்பு மாணவி திருப்புல்லாணி சே.ஆனந்தி



'சிற்பக்கலை' - 8ஆம் வகுப்பு மாணவி பொக்கனாரேந்தல் க.அபிராமி



'மண்பாண்டக்கலை' குறித்து எட்டாம் வகுப்பு மாணவி திருப்புல்லாணி மு.பிரவீணா