Pages

Showing posts with label ஆனந்தூர். Show all posts
Showing posts with label ஆனந்தூர். Show all posts

Tuesday, 20 July 2021

இராமநாதபுரம் அருகே ஆனந்தூரில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

 



இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகிலுள்ள ஆனந்தூரில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரரின் சிற்பத்தை இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் சிவன் கோயிலில் புதியதாக மகாமண்டபம் கட்டும்பணி நடந்து வருகிறது. சேதமடைந்த பழைய மகாமண்டபத்தில் இருந்த கற்கள், தூண்கள் கோயில் பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றன. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு நேற்று அப்பகுதியை ஆய்வு செய்தபோது, அங்கு கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மகாவீரர் சிற்பம் இருந்ததைக் கண்டுபிடித்தார்.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது,

இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், கமுதி, பொக்கனாரேந்தல், மேலஅரும்பூர், அருங்குளம், திருப்புல்லாணி, புல்லக்கடம்பன், புல்லுகுடி, புல்லூர், புல்லங்குடி, சூடியூர், மஞ்சூர், செழுவனூர், மாறந்தை உள்ளிட்ட இடங்களில் சமண மதம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆனந்தூர் சிவன் கோயிலுக்குத் தெற்கிலுள்ள குளத்தின் கரையில், சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரரின் சிற்பம், கோயில் தூண்கள் கிடந்த பகுதியில் இருந்தது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கருங்கல்லால் ஆன இச்சிற்பம் 3 அடி உயரம், 1½ அடி அகலம் உள்ளது. கீழே பீடமும், அதன் மேல் மகாவீரரும் இருப்பது போன்று சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. பீடத்தில் மூன்று சிங்கங்கள் உள்ளன. அதன் மேல் உள்ள சிம்மாசனத்தில் அர்த்த பரியங்க ஆசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவர் முகம் சிதைந்துள்ளது. அவருக்குப் பின்புறம் பிரபாவளி என்னும் ஒளிவட்டம் உள்ளது. தலைக்கு மேல் இருந்த முக்குடை, அசோகமரம் உடைந்து சேதமாகியுள்ளன. மகாவீரரின் இருபுறமும் உள்ள இயக்கர்களின் சிற்பங்கள் உடைந்துள்ளன. சிங்கம் மகாவீரரின் வாகனம் ஆகும். இதன் காலம் கி.பி.10-ம் நூற்றாண்டாகக் கருதலாம். பல ஆண்டுகளாக வெளியில் கிடந்துள்ளதால், வெயில், மழையால் சிற்பம் சேதமடைந்துள்ளது. இச்சிற்பம் கிடைத்திருப்பதன் மூலம் கி.பி.10-ம் நூற்றாண்டளவில் இவ்வூரில் ஒரு சமணப்பள்ளி இருந்திருக்கும் எனக் கருதலாம். இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்










YOUTUBE VIDEO



இராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரில் சாலையோரம் கிடக்கும் கல்வெட்டுகள், சிற்பங்களை பாதுகாக்க கோரிக்கை

 

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகிலுள்ள ஆனந்தூரில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயிலில் இருந்த பிற்காலப் பாண்டியர் காலக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட கற்கள் மற்றும் சிற்பங்கள் சாலையோரம் சிதறிக் கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனந்தூரிலுள்ள  சிவன் கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்பில் இருந்துள்ளது. சிங்கம்புணரியைச் சேர்ந்த லட்சுமணன் என்ற ஆசிரியர் இக்கோயில் மகாமண்டபத்தில் இருந்த இரு கல்வெட்டுகளை பதிவு செய்திருக்கிறார். இதில் ஒன்று கி.பி.1321-ஐச் சேர்ந்த பராக்கிரம பாண்டியன் கல்வெட்டு. இதில் ஆவிப் பெரியான், ஆலிம்மன் சின்னர் ஆகிய இருவரை இக்கோயிலுக்கு திருப்பணி செய்ய விற்றுள்ள தகவல் உள்ளது. மற்றொரு கல்வெட்டில் கி.பி.1521-ல் அளகாபுரியான செழிய நாராயணபுரத்தைச் சேர்ந்த ஏகப்பெருமாள் என்ற வியாபாரி இக்கோயிலில் அழகிய பிள்ளையாரை பிரதிஷ்டை செய்த விவரம் உள்ளது.

கல்வெட்டுகள் இருந்த சேதமடைந்த பழமையான மகாமண்டபத்தை முழுவதும் அகற்றிவிட்டு புதியதாகக் கட்டி வருகிறார்கள். அகற்றப்பட்ட மகாமண்டபத்தில் இருந்த கற்கள், தூண்கள் மற்றும் சிற்பங்கள் கோயிலின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள சாலைகளின் ஓரத்தில் சிதறிக் கிடக்கின்றன. இதில் கல்வெட்டுகள் இருந்த கற்களும் உள்ளன.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது,

 சாலையோரம் கிடந்த கல்வெட்டுகளை படியெடுத்துப் படித்தபோது அது மகாமண்டபத்தில் இருந்த பராக்கிரம பாண்டியன் கல்வெட்டு என்பது தெரிந்தது. அவை தற்போது அங்கு இல்லை. அதே பகுதியில் ஒரு சிலை மண்ணில் பாதி புதைந்த நிலையில் இருந்தது. அதை சுத்தம் செய்து பார்த்ததில் அது முருகன் சிலை எனத் தெரிந்தது. இதில் முருகன் நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் காணப்படுகிறார். அவரின் பின்னுள்ள இரண்டு கைகளில் சக்தி ஆயுதமும், இருதலைச் சூலமும் உள்ளன. முன்புற இரு கைகளில் அபய, வரத கரங்களுடன், மார்பில் சன்னவீரம் அணிந்து காட்சியளிக்கிறார். வெளியில் கிடந்ததால் அவரது முகம், கைகள் சேதமடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணியின்போது இவை சேதம் அடைந்து மண்ணில் புதைந்து இருக்கலாம். சுண்ணாம்பு, செங்கல், கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மன்னர் காலத்துக் கோயில்கள் பல நூறு ஆண்டுகள் நிலைத்து நின்றவை. இக்காலத்தில் சிமெண்டால் கட்டப்படும் கட்டடங்கள் நூறு ஆண்டுகள் கூட நிலைத்திருப்பதில்லை. எனவே அரசு நிதி உதவி வழங்கி தொல்லியல் துறை மூலம் இக்கோயிலை அதன் பழமை மாறாமல் ஏற்கனவே உள்ள கற்களைக் கொண்டே புதுப்பித்துப் பாதுகாக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளிதழ் செய்திகள்