Pages

Tuesday, 17 September 2019

தஞ்சாவூர் பெரிய கோயில் - வே.இராஜகுரு




  தமிழ் நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழும் தஞ்சாவூர், பாரம்பரியச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள் மற்றும் இசைக்கருவிகள் ஆகியவற்றுக்கு சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.

  இங்கு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது மிகப் பிரமாண்டமான தஞ்சை பெரிய கோயில். இது முழுவதும் கற்களால் கட்டப்பட்ட சிவனுக்கான கற்றளி ஆகும். இந்தியாவிலுள்ள பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று. மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தான். இக்கோயில் கி.பி.1003 முதல் கி.பி.1010 வரையில் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. 1000 ஆண்டுகள் பழம்பெருமை கொண்டு விளங்குகிறது. 

  இக்கோயில் 1987ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இது பெருவுடையார் கோயில், ஸ்ரீராஜராஜீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் தமிழர்களின் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை ஆகியவற்றிற்குச்  சான்றாக விளங்குகிறது. 

  இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், ஏறத்தாழ 50 கி.மீ. தூரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கருங்கற்களைக் கொண்டு, 240 மீட்டர் நீளமும், 120 மீட்டர் அகலமும் கொண்ட பெரும்பரப்பில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 

    இக்கோயில், கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், நுழைவு மண்டலம் ஆகிய அங்கங்களைக் கொண்டுள்ளது. இங்கு கேரளாந்தகன் திருவாயில், இராஜராஜன் திருவாயில், விக்கிரமசோழன் திருவாயில் ஆகிய கோபுர நுழைவு வாயில்கள் உள்ளன.

  இக்கோயிலின் விமானம் பெரியதாகவும், கோபுரம் சிறியதாகவும் உள்ளது இதன் சிறப்பு. இதன் விமானம் 15 தளங்களுடன் 216 அடி உயரத்தில் எகிப்து பிரமிடுகளைப் போல அமைந்துள்ளது. இதன் சிகரம் 80 டன் எடையுள்ளது. இது எட்டுத் துண்டுகளால் ஆனது. இக்கோயில் இரட்டைச் சுவர்கள் கொண்ட அடித்தளம் கொண்டுள்ளது.  கருவறையைச் சுற்றிவரும் வகையில் திருச்சுற்று அமைக்கப்பட்டு அதன் சுவர்களில் ஓவியங்களும், சிற்பங்களும் உள்ளன.

   காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில் போன்று இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் தலைமைச் சிற்பி வீரசோழன் குஞ்சர மல்லன் ராஜராஜப் பெருந்தச்சன் எனக் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

   இக்கோயில் கருவறையில் உள்ள லிங்கம் மிகப்பெரியது. ஆவுடையார், லிங்கம் ஆகியன தனித்தனி கற்களால் செதுக்கப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இதன் லிங்கமும் நந்தியும் ஒரே உயரமுடையன.  இங்குள்ள நந்தி ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இது இந்தியாவில் உள்ள நந்திகளில் இரண்டாவது பெரியதாகும். 

   விமானத்தில் எங்கும் செங்கலோ, மரமோ பயன்படுத்தப்படவில்லை. கற்களை  இணைப்பதற்கு சாந்து எதுவும் இல்லை. கற்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன. மேலுள்ள கற்களின் அழுத்தத்தில் கீழுள்ள கற்கள் நிற்கின்றன.

தாராசுரம் – வே.இராஜகுரு


   


  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தின் அருகில் உள்ளது தாராசுரம். இங்கு  கட்டிடக்கலை, சிற்பக்கலைக்குப் பெயர்பெற்ற ஐராவதேஸ்வரர் கோயில் உள்ளது. இதை 2004இல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது.  

  தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய இராஜராஜசோழனின் கொள்ளுப் பேரனான இரண்டாம் இராஜராஜனால் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டது. 

   இக்கோயில் விமானம் ஐந்து தளங்களுடன் 80 அடி உயரம் கொண்டது. தஞ்சை பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில்களை விடச் சிறியதாக இருப்பினும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளால் சிறந்து விளங்குகிறது. யானை, காளை ஆகிய இரண்டும் இணைந்த சிற்பம்,  நடன மாது ஒருவர் இரண்டு தாள வாத்தியக்காரர்களோடு இணைந்து 4 கால்களோடு ஆடும் சிற்பம் ஆகியவை புகழ்பெற்றவை. 

   இராஜகம்பீரன் மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் தூண்களில் நுணுக்கமான பல சிற்பங்கள் உள்ளன. உள்ளங்கை அகல நர்த்தன கணபதி, நாட்டிய முத்திரைகள் காட்டும் பெண்கள், வாத்தியக்காரர்களின் குழுக்கள், புராணக் கதைகள் ஆகிய சிறிய அளவிலான சிற்பங்கள் மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன. 

   நுழைவுவாயில் நந்தியருகே உள்ள பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்புகின்றன. இப்படிகள், தட்டும்போது சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன. 

  கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளின் அரசனான நாகராஜன், அன்னபூரணி என பிற கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு உள்ளன. 

  கோயிலின் வெளிச்சுவர்களில் மூன்று முகங்கள், எட்டுக்கைகளுடன் உள்ள அர்த்தநாரீஸ்வரர், குழலூதும் சிவன் ஆகியவை இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பங்கள். 

  பிரகாரங்களின் மற்றொரு அழகான அம்சம் அங்கு அமைக்கப்பட்டுள்ள காற்றோட்டமிக்க மண்டபங்களாகும். இம்மண்டபங்களில் சதுரம், செவ்வகம், நீள்சதுரம், வட்டம், பூக்கள் வடிவிலான ஒரே கல்லால் அமைக்கப்பட்ட சாளரங்கள் உள்ளன.

Saturday, 14 September 2019

முற்காலப் பாண்டியர்களின் வரலாற்று அடையாளமான கழுகுமலையை உலகப் பாரம்பரியச் சின்னமாக்க கோரிக்கை




தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையிலுள்ள, முற்காலப் பாண்டியர்களால் கட்டப்பட்ட மிகச் சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட வெட்டுவான்கோயில் மற்றும் சமணச் சின்னங்களை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் ஒவ்வொரு மாதமும் பாரம்பரியச் சிறப்பு வாய்ந்த இடங்களை பொதுமக்கள், மாணவர்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் மரபுநடை நிகழ்வை நடத்தி வருகிறது.  12வது மரபுநடை நிகழ்வு தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் 30.06.2019 அன்று நடந்தது. மரபுநடை ஒருங்கிணைப்பாளர் நிவாஸ்சங்கர் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த தொல்லியல் ஆய்வாளரும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவருமான வே.இராஜகுரு கூறியதாவது,
கழுகுமலையின்  வரலாற்று சிறப்புமிக்க இடங்களான வெட்டுவான் கோயில், முருகன் கோயில், சமணப்பள்ளி ஆகியன முற்காலப் பாண்டியரின் கலைப்பாணிக்கு ஆதாரமாக உள்ளன. கடினமான பாறை அடுக்குகளால் ஆன ஒரு பெரிய மலைப்பாறையில் 7.50 மீட்டர் ஆழத்திற்குச் சதுரமாக வெட்டியெடுத்து அதன் நடுப்பகுதி பாறையை கோயிலாகச் செதுக்கியுள்ளனர். இது எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயில் போன்றது. இத்தகைய கோயில், தமிழகத்திலேயே இது ஒன்றுதான் என்பது இதன் சிறப்பு. 

            இக்கோயில் சிற்ப வேலைப்பாடு நிறைந்த  ஒற்றைக் கற்கோயிலாகும்‍‌. இதில் கருவறையும் அர்த்தமண்டபமும் உள்ளன. கோயில்பணி முற்றுப்பெறவில்லை. இக்கோயில் இரண்டு தளங்கள் உள்ள துவிதள விமானமாக உள்ளது. இதன் முதல் தளத்தில் தட்சிணாமூர்த்தி, திருமால், விசாபகரணர்,  அக்கமாலை கையில் ஏந்தி சன்னவீரம் தரித்த முருகன், சந்திரன், சூரியன் ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. கிரீவத்தில் உமா மகேஸ்வரர், மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி, நரசிம்மர், பிரம்மா உள்ளனர். இந்தியக் கோயில்களில் இந்தக் கோயிலில்தான் மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. 

இங்குள்ள சிற்பங்கள் அனைத்தும் புன்னகை தவழும் முகத்துடன் காட்சியளிக்கின்றன. திராவிடவகை விமானத்துக்கு, மிகப்பெரிய நாசிக்கூடுகளும், கொடிக்கருக்குகளும், மகரதோரணங்களும் அழகு சேர்க்கின்றன. கற்றளிக் கோயில்கள் கீழிருந்து திட்டமிட்டுக் கட்டி மேல் எழுப்பப்படுபவை. ஆனால் இந்த ஒற்றைக் கற்றளி, தனி ஒரு பாறையை மேலிருந்து கீழ்நோக்கி  செதுக்கி அமைக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் இறந்த குரவர், சீடர், தந்தை, தாய், மகன், மகள் முதலிய பலரின் நினைவாக, மலையின் கிழக்குச் சரிவில் 100க்கும் மேற்பட்ட சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர்.  இவை பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் செதுக்கப்பட்டவை. இவற்றின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் விவரங்கள் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு சமண சித்தாந்தம் போதிக்கப்பட்ட சமணப்பள்ளியும் செயல்பட்டு வந்துள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து இங்கு வந்து, இவ்வுருவங்களைச் செய்திருக்கிறார்கள். இவை அழகு வாய்ந்தவை.
தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், மாமல்லபுரம் ஆகிய கோயில்கள் யுனொஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவை சோழர், பல்லவர்களின் கலைப் படைப்புகளாக உள்ளன.  இதனால் இவை உலக அளவில் கவனம் பெறுகின்றன. ஆனால் முற்காலப் பாண்டியர்களின் கலைப்பாணியில் அமைந்த மரபுச் சின்னங்களிலே மிகச் சிறந்து விளங்கும் கழுகுமலை வெட்டுவான்கோயில் மற்றும் சமணச் சிற்பங்களை  உலக அளவில் பிரபலப்படுத்த இவற்றை உலகப் பாரம்பரியச் சின்னங்களாக்க  உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதாகக் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மரபுநடை அமைப்பாளர்கள் ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன், முனியசாமி, சந்தியா, ரோகிணி ஆகியோர் செய்தனர். திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி, தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் உள்ளிட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், பொதுமக்கள் கலந்துகொண்டனர். கழுகுமலையில் உள்ள வெட்டுவான்கோயில், சமணப்பள்ளி, முருகன் கோயில் ஆகியவற்றை அனைவரும் பார்வையிட்டனர். 

நாளிதழ் செய்திகள்