Pages

Tuesday, 19 July 2016

திருப்புல்லாணி பள்ளியில் ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

மாணவி அபினாவுக்கு ரூபாய் இரண்டாயிரம் ரொக்கப்பரிசும் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியும் பரிசளிக்கப்படுகிறது


இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா, காமராஜர் பிறந்தநாள் விழா, பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு பரிசளிப்பு விழா 15.07.2016 அன்று நடைபெற்றது. தலைமையாசிரியர் பிரேமா தலைமை வகித்தார். ஓவிய ஆசிரியர் அன்பழகன் வரவேற்றுப் பேசினார். காமராஜர் கல்விக்காக ஆற்றிய தொண்டுகளை தமிழாசிரியர் கிருஷ்ணவேணி எடுத்துரைத்தார். 
மாணவி சரண்யா சார்பில் அவளது தம்பி ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை பெறுகிறான்

     மார்ச் 2016 இல் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளி அளவில் ஆங்கிலப்பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி அபினாவுக்கு ரூபாய் இரண்டாயிரம் ரொக்கப்பரிசும், ஆங்கிலத்தில் 85  மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற அபினா, அல்ஸொய்மா, சரண்யா, ஜோதிகா ஆகியோருக்கு ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியும் பரிசளிக்கப்பட்டது. பரிசுகளை தலைமையாசிரியர் பிரேமா வழங்கினார். 
 
மாணவி அல்ஸொய்மா சார்பில் அவளது தாத்தா ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை பெறுகிறார்

மாணவ மாணவிகளுக்கு பள்ளி பழைய மாணவர் சங்க தலைவர் மலைக்கண்ணன் நோட்டுகள் வழங்கினார். சென்ற ஆண்டு அனைத்து நாட்களும் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர் ஆர்தர் சாமுவேல் நன்றி கூறினார். அறிவியல் ஆசிரியர் இராமு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆங்கில ஆசிரியர் இராஜகுரு, நவராஜ், ஜீவா ஆகியோர் செய்திருந்தனர்.
 
மாணவி ஜோதிகா ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை பெறுகிறார்



நாளிதழ் செய்தி



Monday, 11 July 2016

வட்டானம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் துவக்கவிழா




தொல்பொருள்கள் கண்காட்சியில்  தொல்லியல் ஆய்வாளர் இராஜகுரு பழமையான பானை ஓடுகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கமளிக்கிறார்.
வட்டானம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் துவக்கவிழா மற்றும் தொல்பொருள்கள் கண்காட்சி 06.07.2016 அன்று நடைபெற்றது. விழாவுக்கு  பட்டதாரி ஆசிரியர் மிக்கேல்ராஜ் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் இராபர்ட் புரோமியர் வரவேற்றுப் பேசினார்.


நமது பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அதில் மாணவர்களின் பங்கு  பற்றியும் மன்றப் பொறுப்பாசிரியர் சேவியர் பேசினார். திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான இராஜகுரு சங்ககாலம் முதல் சிறப்புற்றிருந்த தொண்டி பகுதியின் வரலாற்றுச் சிறப்புகள் பற்றிக் கூறினார்.
அதன் பின்பு நடைபெற்ற தொல்பொருள்கள் கண்காட்சியில் பழமையான கருப்பு சிவப்பு பானை ஓடுகள், ரோமானிய, சீன நாட்டு பானை ஓடுகள், சுடுமண் பொம்மைகள், குறியீடு உள்ள பானை ஓடுகள், நெசவுத்தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட தக்களி, பாண்டி ஆட்டத்துக்குரிய சில்லுகள், இரும்புத்தாதுக்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் அவற்றைப் பார்வையிட்டனர்.
பட்டதாரி  ஆசிரியர் கிருபாகரன் நன்றி கூறினார். கண்காட்சிக்கு உரிய ஏற்பாடுகளை  சுஜிதா, ஆனந்த், அய்யனார், ஹெப்சி மேத்யூ, அப்துல் அஜிஸ், மணிகண்டன், முகம்மது அர்சத் ஆகிய மாணவர்கள் செய்திருந்தனர்.

பட்டதாரி ஆசிரியர் மிக்கேல்ராஜ், பட்டதாரி ஆசிரியர் இராபர்ட் புரோமியர் தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் சேவியர் ஆகியோர்

நாளிதழ் செய்திகள்