Pages

Monday, 10 September 2012

பிள்ளையார்பட்டி


·      குடைவரைகள் தமிழகத்தில் பல்லவ மன்னன் மகேந்திர பல்லவனால் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தான் முதன்முதலில் அமைக்கப்பட்டதாக முன்பு கருதப்பட்டது.
·      ஆனால் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பாண்டியர்கள் காலத்தில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலே தமிழகத்தில் இன்று காணப்படும் குடைவரைக் கோயில்களுள் பழமையானதாகும்.

·      பிள்ளையார்பட்டி குடைவரையில் மூன்று சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. வலதுபுறமாக மடிக்கப்பட்ட துதிக்கையுடன் விநாயகர், லிங்கோத்பவர்,சிவலிங்க  உருவ சிற்பங்கள் அழகு வாய்ந்தவை. 
·      கி.பி. ஆறாம் நூற்றாண்டு தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு இங்கு காணப்படுவதன் மூலம் இது கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனப் புலனாகும்.
·      இதேபோன்ற வலதுபுறமாக மடிக்கப்பட்ட துதிக்கையுடன் விநாயகர் சிற்பம் குடுமியான் மலையிலுள்ள குடைவரையிலும் காணப்படுகிறது.
·      கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது.

தூண்களில் போதிகை அமைப்பு



பத்மநாதபுரம் அரண்மனையில் பூமுனைப்போதிகை

கோயில்களில்  நீங்கள்  தூண்கள் பார்த்திருப்பீர்கள். அத்தூண்களின் மேல்  பகுதி தூணின்  உச்சியில் சென்று சேரும் இடத்தில் காணப்படும் பூ போன்ற சிற்பங்களை   போதிகை    என   அழைப்பார்கள் .    தூணின்   தலைப்பகுதியாக அமைவது போதிகை. பலகைக்கு மேலே வீரகண்டமும் அதற்குமேல் போதிகையும் அமைப்பது சிற்ப நூல் மரபாகும். தூண்களில் பூச்சரம் போல அமைக்கப்படும் சிற்ப வேலைப்பாட்டைக் காட்டிலும், மேற்கட்டடத்திற்கும் தூணின் தலைப்பகுதிக்கும் இடையே அமைந்திடும் போதிகை மிகச் சிறப்புடையது.
கோயில் கலைப்பாணியையும் காலத்தையும் கணக்கிடப் போதிகை பயன்படும் .
அழகர் கோயில், திருமெய்யம், திருக்குறுங்குடி, பெருங்குளம் ஆகிய கோயில்களில் போதிகை சிறுமொட்டு வடிவத்தில் காணப்படுகிறது.       இது பிற்காலப் பாண்டியரது பாணியாகும்.
மன்னார்கோயில், திருக்கோளூர், தாடிக்கொம்பு, கிருஷ்ணபுரம், நாங்குனேரி ஆகிய கோயில்களில் ஆப்புகள் நீட்டிய வெட்டுப் போதிகை இடம் பெற்றுள்ளது; இத்தகையவை சோழர்களுடைய அமைப்பாகும்......
ஆண்டாள் கோயில், வடபத்திர சாயிகோயில், அரவிந்த போசனன், ஸ்ரீநிவாசன், திருக்கோட்டியூர், திருப்புல்லாணி, கூடலழகர், திருமோகூர், தென்திருப்பேரை, ஸ்ரீவைகுண்டம் ஆகிய கோயில்களில் விசயநகர நாயக்கர் கலைப் பாணியைச் சேர்ந்த போதிகை அமைப்பான பூமுனைப் போதிகை இடம் பெற்றுள்ளது.
எனவே, போதிகை அமைப்பை வைத்துப் பார்க்கின்றபோது அடிக்கொம்பு, கிருஷ்ணாபுரம், திருமோகூர் போன்ற விசயநகர நாயக்கர் கலைப்பாணியைச் சேர்ந்த கோயில்களில் கூட முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்த வெட்டுப் போதிகைகள் இடம் பெற்றுள்ளன.

தஞ்சைப் பெரிய கோயில்



மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழனால் கி.பி. 1003 ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கப் பெற்று, கி.பி. 1010 ஆம் ஆண்டில் நிறைவு பெற்ற தஞ்சை பெரிய கோயில் இமயமலையின் அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ளது. 3.66 மீட்டர் உயரம் கொண்ட லிங்க வடிவிலான சிவன், மாமன்னன் இராஜராஜனின் பெயரால் இராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டார். ஏறத்தாழ 50 கி.மீ. தூரத்திற்கு வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட கருங்கற்களைக் கொண்டு, 240 மீட்டர் நீளமும், 120 மீட்டர் அகலமும் கொண்ட பெரும்பரப்பில் இக்கோயில் நிர்மாணிக்கப் பெற்றுள்ளது. எட்டுத் துண்டுகளான 81.284 டன் எடையுள்ள சிகரத்தைக் கொண்டதாய் விளங்கும் இத்திருக்கோயிலின் விமானம் (கருவறை மேலுள்ள கட்டடப்பகுதி)  60.96 மீட்டர் உயரம கொண்ட பிரமாண்டமான படைப்பு. சதுரவடிவிலான கருவரையைக் கொண்ட இக்கோயில் இரட்டைச் சுவர்கள் கொண்ட அடித்தளம் காரணமாக மேலுயர்ந்து நிற்பது சாத்தியமானது. கருவறையினைச் சுற்றிவரும் வகையில் திருச்சுற்று அமைக்கப்பட்டு திருச்சுற்று சுவர்களில் ஓவியங்களும் மேல் அடுக்கில் சிற்பங்களும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
     தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள், இக் கோயிலின் மீது இராஜராஜன் கொண்டிருந்த தனிப்பட்ட அன்பை விளக்குவதாக உள்ளது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டான் எனவும் தெரிகிறது. நிதித்தேவைகள், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்து வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
கேரளாந்தகன் நுழைவுவாயில்

விமானம்

விமானம்

விமானத்தின் பின்பகுதி

திருச்சுற்று மாளிகையுடன் விமானத்தின் தோற்றம்