Pages

Monday, 20 August 2018

திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்கள் தெய்வங்களின் கதை சொல்லும் மன்றம்



இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் ‘மக்கள் தெய்வங்கள்’ என்ற தலைப்பில் வரலாற்றுக்கதை சொல்லும் மன்றம் நடைபெற்றது. ஒன்பதாம் வகுப்பு மாணவி து.நிஷா கோபிகா வரவேற்றார். ஓவிய ஆசிரியர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார்.


இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளித் தலைமையாசிரியர் கூ.செல்வராஜ் பேசியபோது, பல நூறு ஆண்டுகளுக்கு முன் நம் பகுதியில் வாழ்ந்து மறைந்தவர்கள் மக்களால் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறார்கள். இத்தெய்வங்களைப் பற்றிய வாய்மொழி வரலாறை மாணவர்கள் தெரிந்துகொண்டு அவற்றைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றார். 

மன்னர்களுக்கு மட்டுமல்ல சாதாரண மக்களுக்கும் வரலாறு உண்டு. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஊருக்காகவும், நாட்டுக்காகவும் தங்கள் உயிரை இழந்த பலபேர் மக்களால் போற்றப்படுகிறார்கள். கிராமக் கோயில்களின் வழிபாடுகளில் பல வரலாறுகள் உள்ளன. அவற்றை மாணவர்கள் ஆவணப்படுத்தவேண்டும்  என மன்றப் பொறுப்பாசிரியர் வே.இராஜகுரு அறிமுக உரையின் போது கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் 9ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேரும், 7ஆம் வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவனும் கலந்துகொண்டு வரலாற்றுக் கதைகளை சொன்னார்கள். உடன்கட்டை ஏறி இறந்த பெண்களுக்கு கட்டப்பட்ட மாலைக்கோயில்கள் குறித்து ச.சந்திராஸ்ரீயும், ஆர்.எஸ்.மடையில் உள்ள வண்ணமிளகு, களஞ்சியம் ஆகிய இரு தெய்வப்பெண்கள் குறித்து து.மனோஜும், அம்மன்கோயில் கிராமத்தில் உள்ள பாப்பாத்தி அம்மன் குறித்து ச.ஜனனியும், ராமநாதபுரத்தில் ஆர்தர் ஹீபர் தாமஸ் நினைவாகக் கட்டப்பட்ட கப்பல் வடிவ தேவாலயம் குறித்து அ.முகமது லபிப்பும், கழுமர வழிபாடு குறித்து ச.ஜாஸ்மினும் கதை சொன்னார்கள். 

ஆறாம் வகுப்பு மாணவன் மு.சண்முகராஜ் நன்றி கூறினார். எட்டாம் வகுப்பு மாணவி ச.சாஜிஹா பானு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் விசாலி, சுதர்ஸன், முகம்மது நஜிப் ஆகியோர் செய்தனர்.


நாளிதழ் செய்திகள்
 



 

VIDEOS

 



                                        

 

 

 

 

திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாட்டின் தொல்பழங்காலம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி




இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் ‘தமிழ்நாட்டின் தொல்பழங்காலம்’ என்ற தலைப்பில்  கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. எட்டாம்வகுப்பு மாணவி தி.திவின்பிரியா வரவேற்றார். ஓவிய ஆசிரியர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார்.

இக்கருத்தரங்கத்துக்கு தலைமை வகித்து கண்காட்சியைத் தொடங்கி  வைத்த பள்ளித் தலைமையாசிரியர் கூ.செல்வராஜ் பேசியபோது, ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளுக்கு புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மற்றும் சமூகஅறிவியல்  பாடங்களில் நமது பண்பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  இதை வெறுமனே படித்து தேர்வுக்குத் தயாராவது என்பது இந்த பாடங்களின் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யும். இத்தகைய கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிகள் பாடங்களை எளிதாக்கி மாணவர்கள் புரிந்துகொள்ள உதவுகின்றன. இதன்மூலம்  பழமையை அறிந்து அதை பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வை  மாணவர்களிடம் ஏற்படுத்தமுடிகிறது என்று கூறினார். 


சமீபத்திய தொல்லியல் ஆய்வுகள் மூலம், மனித இனம் முதன் முதலில் தமிழ்நாட்டில் தான் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. பழமையான தமிழ் நூல்கள் கூறும் ஊர்கள், துறைமுகங்கள் போன்றவை அகழாய்வுகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் கண்டறியப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் நுண்கற்கால, புதிய கற்கால, பெருங்கற்கால, சங்ககாலத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சி மூலம் மாணவர்கள் நமது பண்பாட்டை அறிந்து, அதைப் பாதுகாப்பார்கள் என மன்றப் பொறுப்பாசிரியர் வே.இராஜகுரு கருத்தரங்கம் பற்றிய அறிமுக உரையின் போது தெரிவித்தார்.

கருத்தரங்கத்தில் பழைய கற்காலம் குறித்து ச.சந்திராஸ்ரீ, இடைக்கற்காலம் குறித்து மு.அனிஷா, புதிய கற்காலம் குறித்து ச.ஜமுனா, இரும்புக்காலம் குறித்து இரா.கோகிலா, சங்ககாலம் குறித்து ச.ஜாஸ்மின் ஆகிய ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் ஐந்துபேர் பேசினர். ஏழாம் வகுப்பு மாணவன் து.மனோஜ் நன்றி கூறினார். எட்டாம் வகுப்பு மாணவி கோ.பிரியா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

      பின்பு நடந்த கண்காட்சியில் ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட பழைய, இடைக்கற்கால, புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்கால, சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் காட்சிக்கு  வைக்கப்பட்டிருந்தன. இவை எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்பதை மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் முகம்மது லபிப், முகம்மது நஜிப், அபுரார் அகமது ஆகியோர் செய்தனர்.


நாளிதழ் செய்திகள்
 





வீடியோ