Pages

Friday, 26 November 2021

இராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

    இராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைமேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் பொறுப்பாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 12.12.2017 அன்று மாலை 2 மணிக்கு நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் பேசுகிறார்

கூட்டத்திற்கு இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் திரு. முத்துசாமி தலைமை வகித்தார். வாலந்தரவை பள்ளி ஆசிரியர்  திரு. இரவீந்திரன் வரவேற்றார்.  மாவட்டக் கல்வி அலுவலர்   பேசும்போது,  தமிழகத்தின் வரலாறு,  கலை, பண்பாடு,  தொல்லியல்  போன்றவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள தொடங்கப்பட்டுள்ள இந்த மன்றம் மாணவர்களிடம் ஆர்வத்தை உருவாக்கி தேடல் பண்பை வளர்க்கும். வரலாறு தெரிந்தவர்களால் தான் வரலாற்றை பாதுகாக்க முடியும்.  இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்றுச் சிறப்புக் கொண்ட மாவட்டம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதி மக்கள் கல்வியில் சிறந்து விளங்கியதை அழகன்குளம், தேரிருவேலி  அகழாய்வு மூலம் நாம் நிரூபித்திருக்கிறோம்.  இம்மாவட்டத்தில்  கலைகள், பாரம்பரிய பாடல்கள், வரலாற்றுச் சுவடுகள் அதிகளவில் உள்ளன.  அவற்றை அடையாளம் கண்டு வெளிக்கொண்டுவர இந்த அமைப்பின் மாணவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
இராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்  திரு. வே.இராஜகுரு  பேசுகிறார்

          இராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்  திரு. வே.இராஜகுரு  பேசும்போது, இம்மன்றத்தின் நோக்கம்,  இதன் அமைப்பு,  மாணவர்களைக் கொண்டு மன்றக் கூட்டத்தை நடத்தும்விதம், மாணவர்களிடம் ஆய்வு மனப்பான்மையை வளர்க்க வேண்டியதன் அவசியம்,  தொன்மைச் சிறப்புவாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல்,  இந்த மன்றத்தின் சிறப்பான செயல்பாடுகள் மூலம் நமது பாரம்பரியச் சிறப்பை மாணவ சமுதாயத்தினரிடம் கொண்டு செல்வது ஆகியவை பற்றிப் பேசினார். 


வட்டானம் பள்ளி ஆசிரியர் திரு. இராபர்ட் புரோமியர் நன்றி கூறினார்.  இராமநாதபுரம் கல்வி மாவட்டத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைமேல்நிலைப்பள்ளியிலிருந்து  60    பொறுப்பாசிரியர்கள் கலந்துகொண்டனர்.


நாளிதழ் செய்திகள் 






 இணைய இதழ்

நக்கீரன்

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=203393

  

தொல்தமிழ் எழுத்துகள் பயிலரங்கம் மற்றும் தொல்பொருள்கள் கண்காட்சி



இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசுஅரசு உதவி பெறும்மெட்ரிக் உயர்நிலைமேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் பள்ளி அளவிலான பொறுப்பாசிரியர்களுக்கு தொல் தமிழ் எழுத்துகள் பயிலரங்கம் மற்றும் தொல்பொருள்கள் கண்காட்சி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முகம்மது சதக் தஸ்தகிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 26.10.2018 அன்று நடந்தது


தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் கல்வி  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  வே.இராஜகுரு அனைவரையும் வரவேற்றார்தொல்பொருள்கள் கண்காட்சியை மண்டபம் மாவட்டக் கல்வி  அலுவலர்  .பாலதண்டாயுதபாணி திறந்து வைத்து பேசும்போதுபள்ளி மாணவர்களிடம் இத்தொல்பொருள்கள் பற்றிய அறிவை ஆசிரியர்கள் வளர்த்தால் கீழடி போன்ற பல தொல்லியல் களங்களை அவர்கள் கண்டுபிடித்துத் தருவார்கள்இக்காலத்து பல பிரச்சினைகளுக்கு நம் முன்னோர்கள் பின்பற்றிய இயற்கை சார்ந்த பாரம்பரிய முறைகளில் தீர்வு இருக்கிறதுஅவற்றை இம்மன்றம் மூலம் நாம் மாணவர்களிடம் எடுத்துச் செல்லவேண்டும் என்றார்.



பின்னர் நடந்த தொல் தமிழ் எழுத்துகள் பயிலரங்கத்தில் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி மு.விசாலி தமிழ் பிராமி எழுத்துகளையும்9 ஆம் வகுப்பு மாணவி இரா.கோகிலா வட்டெழுத்துகளையும் அவை தோன்றியவிதம்காலம்எழுத்துகளின் அமைப்புஎழுதும் விதம் பற்றியும் ஆசியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.  வாலாந்தரவை அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் செ.இரவீந்திரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்பனைக்குளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் குமார் நன்றி கூறினார்முன்னதாக 2000, 1000, 800, 300 ஆண்டுகள் பழமையான செங்கற்கள் உள்ளிட்ட தொல்பொருள்களை அனைவரும் பார்வையிட்டனர்.




நாளிதழ் செய்திகள்





Friday, 19 November 2021

நவம்பர் 19-25 - உலகப் பாரம்பரிய வாரம் - தமிழரின் பாரம்பரிய கட்டடக்கலையில் கட்டப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள்

 


    பாரம்பரியப் பெருமை கொண்ட கோயில்களும், பள்ளிவாசல்களும் அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த கட்டடக்கலையை பின்பற்றியே கட்டப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

    நம் முன்னோர்களின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினர் அறிந்து பயன்படுத்தவும், பாரம்பரியச் சின்னங்களை போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையை உருவாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலகப் பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது. 

    தமிழர்களின் பாரம்பரிய கட்டடக்கலையை பின்பற்றிக் கட்டப்பட்டுள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் பற்றி ஆய்வு செய்துவரும் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இதுபற்றிக் கூறியதாவது,


    ராமநாதபுரத்தின் அநேக கடற்கரை கிராமங்களில் இஸ்லாமியர் பெருமளவில் வாழ்கிறார்கள். கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் இப்பகுதிகளில் இஸ்லாம் பரவி உள்ளது. திருப்புல்லாணி கோயிலில் உள்ள கி.பி.1247-ம் ஆண்டைச் சேர்ந்த, இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு, கீழ்ச்செம்பி நாட்டு பவித்திரமாணிக்கப்பட்டினத்திலுள்ள பிழார் என்ற முஸ்லிம் பள்ளிவாசலுக்கு ஆம்பத்தூர், மருதூர் ஆகிய ஊர்கள் தானமாக வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. 

    தீர்த்தாண்டதானம் சிவன் கோயில் எதிரில் சிதைந்த நிலையில் இருந்த மண்டபத்தை கி.பி.1269-ல் அங்கு தங்கி இருந்த அஞ்சுவண்ணம் எனும் இஸ்லாமியர் உள்ளிட்ட வணிகக்குழுவினர் பழுதுபார்க்க ஒப்புக்கொண்டுள்ளனர். 

    கீழக்கரை பள்ளிவாசலில் உள்ள ஒரு இஸ்லாமியப் பெண்மணியின் கி.பி.1300-ம் ஆண்டைச் சேர்ந்த கல்லறைக் கல்வெட்டு மூலம் இவ்வூரில் கி.பி.12-ம் நூற்றாண்டுகளிலேயே முஸ்லிம்கள் குடியிருந்ததையும் இஸ்லாமியப் பள்ளி இருந்ததையும் அறியமுடிகிறது. வட்டானம் மற்றும் வாலிநோக்கத்தில் கி.பி.15-ம் நூற்றாண்டுகளில் இஸ்லாமியப் பள்ளி இருந்ததை அங்குள்ள கல்லறைக் கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.


    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரைப் பாறைகளையே அதிக அளவில் கோயில்கள், பள்ளிவாசல்கள், தர்காக்கள் கட்டப் பயன்படுத்தியுள்ளனர். கீழக்கரை, வேதாளை, வாலிநோக்கம், நரிப்பையூர் உள்ளிட்ட பள்ளிவாசல்களும் கடற்கரைப் பகுதியில் வெட்டியெடுக்கப்பட்ட மணற்பாறைகளைக் கொண்டே கட்டப்பட்டுள்ளன. கோயில்கள் கட்ட பயன்படுத்திய  பாரம்பரிய கட்டடக்கலையையே பள்ளிவாசல்கள் கட்டவும் பயன்படுத்தியுள்ளனர். 

    பெரும்பாலான பழமையான பள்ளிவாசல்கள் தொழும் மாடம், மகாமண்டபம், முன்மண்டபம், தாழ்வாரம் என்ற அமைப்பில் காணப்படுகின்றன. இவற்றின் வெளிப்புறத்தில் அதிஷ்டானம், பாதசுவர், பிரஸ்தரம் ஆகிய அமைப்பு காணப்படுகிறது. தூண்களிலும், மேற்கூரையிலும் பலவிதமான பூக்களின் உருவங்கள் கோட்டுருவங்களாகவும் புடைப்புச் சிற்பங்களாகவும் வெட்டப்பட்டிருக்கும். கீழக்கரை, வேதாளை, நரிப்பையூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பழமையான பள்ளிவாசல்கள் தமிழர்களின் பாரம்பரிய  கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளன.


    கீழக்கரையின் சில பள்ளிவாசல்களில் உள்ள தூண்கள் வெட்டுப் போதிகை, தாமரைப்பூ, வாழைப்பூ போதிகைகளோடு கூட்டுத்தூண்களாக கலை அழகுடன் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பிற்காலப் பாண்டியர், சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கல்லுப்பள்ளிகளும் உள்ளன. அவற்றின் தூண்கள், போதிகைகள், கொடுங்கைகள் மூலம் அவற்றின் கலைப்பாணியை அறிய முடிகிறது. அதே காலகட்டத்தில் கட்டப்பட்ட திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை கோயில் தூண்களும் இதுபோலவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, 9 November 2021

திருப்புல்லாணி அரசுப்பள்ளி வளாகத்தில் சீனநாட்டு பானை ஓடுகள் கண்டெடுப்பு

 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கி.பி.12-13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன நாட்டுப் பானை ஓடுகளை மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

தமிழகத்தின் வரலாறு, கலை, பண்பாடு, தொல்லியல் ஆகியவற்றை மாணவர்கள் அறிந்து அவற்றைப் பாதுகாக்க, 2010 முதல் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் மூலம் பழமையான நாணயங்கள், பானை ஓடுகள், வரலாற்றுச் சின்னங்களை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் மாணவர்கள் அறிந்துள்ளனர்.

இந்நிலையில் பள்ளியில் குடிநீர் தொட்டி கட்ட பள்ளம் தோண்டிய இடத்தில் கிடந்த சீனநாட்டுப் பானை ஓடுகள், கருப்பு பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகள், மான் கொம்புகளின் உடைந்த பகுதிகள் ஆகியவற்றை பத்தாம் வகுப்பு மாணவர்கள் து.மனோஜ், மு.பிரவினா, வி.டோனிகா, சீ.பாத்திமா ஷிபா ஆகியோர் கண்டெடுத்து மன்றச் செயலாளரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுருவிடம் கொடுத்தனர். இதை  ஆய்வு செய்தபின் இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது,

போர்சலைன், செலடன் ஆகிய இருவகை சீனநாட்டுப் பானை ஓடுகளும் இங்கு கிடைத்துள்ளன. இதில் போர்சலின் ஓடுகளில் வெள்ளையில் சிவப்பு, கரும்பச்சை நிறத்தில் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. பாசிநிற களிமண்ணால் செய்யப்படும் செலடன் வகை மட்பாண்டங்களில் இளம்பச்சை நிறத்தில் ஒரு ஓடு கிடைத்துள்ளது. கருப்பு பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகளில் கைவிரல் நகத்தால் உருவாக்கப்பட்ட அழகிய வடிவங்கள் அதன் வாய்ப்பகுதியில் உள்ளன. மேலும் இங்கு கிடைத்த உள்துளையுடன் உள்ள மானின் உடைந்த கொம்புகள் கிளையுள்ள உழை மானின் கொம்புகள் ஆகும். இவை வரலாற்றின் இடைக்காலமான கி.பி.12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும்.

திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலுக்கும், பள்ளிக்கும் இடையில் உள்ள மேடான பகுதியில் இரும்பு உருக்காலை இருந்த தடயத்தை 2014-ல் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கோயில் மேற்குச்சுவர், பள்ளிவளாகம், பொன்னங்கழிக்கானல் ஓடை ஆகியவற்றிற்கு இடையிலான 20 ஏக்கர் பரப்பளவுள்ள பகுதியில் பானை ஓடுகள் காணப்படுகின்றன.

எஸ்.பி.பட்டினம் முதல் பெரியபட்டினம் வரையிலான பெரும்பாலான ராமநாதபுரம் மாவட்டக் கடற்கரை ஊர்களில் சீன மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சீனநாட்டு வணிகர்களின் வருகைக்கு ஆதாரமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்









ஜெயா டிவி




செங்கமடை ஆறுமுகக் கோட்டை - ஆர்.எஸ்.மங்கலம்


 

மேலக்கிடாரம் - தொல்லியல் அட்டை


 

கமுதி திருவுடையத்தேவர் வட்டக்கோட்டை - தொல்லியல் அட்டை


 

திருப்பாலைக்குடி


 

Monday, 9 August 2021

மிகப்பெரிய எழுத்துகள் கொண்ட மறுகால்தலை தமிழிக் கல்வெட்டு - வே.சிவரஞ்சனி

கட்டுரையாளர்: 
*வே.சிவரஞ்சனி*, 
ஒருங்கிணைப்பாளர், 
இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்.

அறிமுகம் 

தமிழகத்தில் பழந்தமிழ் எழுத்துப் பொறிப்புகள் கொண்ட கல்வெட்டுகள் நூற்றுக்கும் மேல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பல கல்வெட்டுகள் தன்னகத்தே சிறப்புக் கொண்டவை. அவற்றில் ஒன்று மறுகால்தலையில் உள்ள தமிழிக் கல்வெட்டு. 

அமைவிடம்

திருநெல்வேலியிலிருந்து சீவலப்பேரி வழியாக 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது மறுகால்தலை. முன்பு ஒரு காலத்தில் இந்த ஊருக்குச் செல்லும் சாலை தான் திருநெல்வேலியில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் பெருவழியாக விளங்கியது. இவ்வூரின் அருகில் தான் தாமிரபரணி, கடனாநதி, சிற்றாறு ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கின்றன. குன்றுகள் நிறைந்த இவ்வூரில் பூவிலுடையார் மலை என்று அழைக்கப்படும் குன்றின் மேற்குப் பக்கத்து தரையில் குகை ஒன்று உள்ளது. படுக்கைகளுடன் காணப்படும் இக்குகை பஞ்ச பாண்டவர் படுக்கை என மக்களால் கூறப்படுகிறது. இந்த குகையின் நெற்றியில் அமைந்துள்ள காடியின் கீழ் ஒரு தமிழிக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
தமிழிக் கல்வெட்டு 

இக்கல்வெட்டு முதன்முதலாக 1906 இல் அப்போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஹெமைடு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு ஒரே வரியில் ஆழமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 

கல்வெட்டின் வாசகம்

"வெண்காஸிபன் கொடுபித கல்கஞ்சனம் "(தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை). இதனை,

"வேண் கோஸிபன் குடுபிதகல காஞ்சணன்" என்று கிருஷ்ண சாஸ்திரி அவர்களும்,
  
"வேண் கோஸிபன் குடுபித கல் காஞ்சனம்" என்று சுப்பிரமணிய அய்யர், நாராயணராவ், டி.வி.மகாலிங்கம் ஆகியோரும்,

"வெண் காஸிபன் கொடுபித கல் கஞ்சணம்" என்று இரா.நாகசாமி மற்றும் மயிலை.சீனி அவர்களும்,

"வெண் காஸிபன் குடுபித கல் கஞ்சணம்" என்று ஐ.மகாதேவன் அவர்களும் வாசித்து உள்ளதாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2006 இல் வெளியிட்ட தமிழ் - பிராமி கல்வெட்டுகள் என்னும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நான் இக்கல்வெட்டை நேரில் சென்று காணுகையில்,

"வேண கோஸிபான குடுபிதா கால காஞசாணம" (கல்வெட்டில் உள்ளபடி)

"வெண் கோஸிபன் குடு(ப்)பி(த்)த கல் கஞ்சணம்" என வாசிக்க முடிந்தது.

இக்கல்வெட்டு, ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் சவாலாக அமைந்திருந்தது. அதற்கு இக்கல்வெட்டு குறிப்பிடும் "கல் கஞ்சணம்" என்ற சொல்லே காரண‌ம். தோராயமாக வெண் காஸிபனால் இந்த குகையில் ஒரு கட்டட அமைப்பு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்று பொருள் கொள்ளப்பட்டதே தவிர கல் கஞ்சணத்திற்கான உரிய பொருளை ஆய்வாளர்களால் அறிய இயலவில்லை. இந்நிலை ஒரு நூற்றாண்டுக்கும் மேல் நீடித்தது. 

2017 இல் ஐ.மகாதேவன் அவர்கள் இச்சொல்லின் பொருள் முடிச்சை அவிழ்த்தார். அதாவது, தமிழில் கசணை என்ற பெயர்ச்சொல்லுக்கு "ஈரம், ஈரப்பதம்" என்றும் கசி என்ற வினைச்சொல்லுக்கு "ஈரம் கசிந்து வழிதல்" என்றும் பொருள். மேலும் கஸி என்ற கன்னடச் சொல்லுக்கு "வழிந்து ஓடுதல்" என்று பொருள். இவற்றோடு கஞ்சணம் சொல்லை ஒப்பிட்டு நோக்கினால் "நீர்க் கசிவு வழிந்து ஓடும் தடம்" எனும் பொருள் நேரடியாக கிடைக்கிறது. ஆதலால் இக்கல்வெட்டில் உள்ள கல் கஞ்சணம் என்ற சொல் குறிப்பது குகையின் நெற்றியில் வெட்டப்பட்டுள்ள சல தாரையையே ஆகும். கஞ்சணம் என்ற சொல்லின் முன் கல் என்ற அடைமொழி இட்டதற்கு காரணம் உண்டு. பெய்யும் மழைநீர் வீட்டின் உள் கசியாதவாறு மேற்கூரையில் சலதாரை ஓடுகளை அமைப்பதுண்டு. வீட்டுக் கழிவுநீரை சுடுமண் கலங்கள், குழாய்கள் கொண்டு பழங்காலத்தில் வெளியேற்றப்பட்டதை அகழாய்வு உணர்த்துகிறது. இந்த கஞ்சணங்களில் இருந்து இது வேறுபட்டது என்பதை உணர்த்தத்தான் கல்வெட்டில் கல் என்ற அடைமொழி கொண்டு கஞ்சணம் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இப்போது கல்வெட்டின் பொருளைப் பாருங்கள், "வெண் காஸிபன் என்பவரால் அமைத்துக் கொடுக்கப்பட்ட நீர்வடி விளிம்பு" என்பதே இக்கல்வெட்டு கூறும் செய்தி.

கல் கஞ்சணம் பற்றி இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு அவர்கள் என்னிடம் கூறியதாவது, கஞ்சம் என்ற சொல்லுக்கு நீர் எனவும் பொருள் உண்டு. வாயின் வளைந்த மேற்பகுதி அண்ணம், அணம் எனப்படுகிறது. அவ்வகையில் குகையின் வளைந்த மேற்பகுதியையும் காரணப் பெயராக அணம் என்ற சொல் குறிப்பதாகக் கொள்ளலாம். எனவே குகையின் வளைந்த மேற்பகுதியில் நீர் வடியாமல் தடுக்க வெட்டப்பட்ட காடியை, கஞ்சணம் என்ற சொல் குறிப்பதாகக் கொள்ளலாம். இது கல்லில் அமைக்கப்பட்டதால் கல் கஞ்சணம் எனப்பட்டுள்ளது.

வெண் காஸிபன் - வெண் காசிபன் இப்பெயர் ஆசிவகத்துடன் தொடர்புடையதாக பேராசிரியர் நெடுஞ்செழியன் கருதுகிறார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, காயன் > காயிபன் > காசிபன் அதாவது காயன் என்ற பெயச்சொல்லில் இருந்து காயிபனும் பிறகு காசிபனும் தோன்றியதாகக் கூறுகிறது. இம்மூன்று பெயர்சொற்களும் ஒரே பொருள் கொண்டவை. காய் என்ற வினைச்சொல்லுக்கு ஒளிர்தல், பிரகாசித்தல் என்று பொருள் உண்டு.

எனவேதான், நாம் நிலா ஒளிர்தலை நிலா காய்கிறது என்கிறோம். அப்படியென்றால் நிலா ஒளி வீசுகிறது, பிரகாசிக்கிறது என்று அர்த்தம். இது பெயர்ச்சொல்லாக வரும்போது ஒளியன், ஒளி உடையவன், பிரகாசன், பிரகாசிப்பவன் என வரும். ஆகவே வெண் காசிபன் என்ற சொல்லுக்கு வெண்மையான ஒளியை உடையவன் (அ) பிரகாசத்தை உடையவன் என்று பொருள் கூறலாம். 

இதுபோல் வெண் என்ற முன்னொட்டு கொண்ட சங்ககாலப் புலவர் பெயர்கள் வெண்கண்ணனார், வெண்கொற்றன், வெண்பூதன் போன்று சில உள்ளன. சங்ககாலப் புலவர்களுள் ஒருவர் பெயர் காசிபன் கீரன். அத்தியிடம் தேவர்களையும் திரியிடம் அசுரர்களையும் பெற்ற ஒரு முனிவரின் பெயர் காசிபனார். மேலும் தமிழிக் கல்வெட்டுகளில், அழகர்மலை கல்வெட்டில் உள்ள கஸபன், ஆனைமலை கல்வெட்டில் உள்ள அரட்டகாயிபன், புகளூர் கல்வெட்டில் உள்ள செங்காயபன், தொண்டூர் கல்வெட்டில் உள்ள இளங்காயிபன் ஆகிய பெயர்கள் இங்கு ஒப்புநோக்கத்தக்கன.

கல்வெட்டின் தனிச்சிறப்பு 

1. ஒரு அடிக்கும் மேல் உயரம் கொண்ட எழுத்துகள். தமிழி கல்வெட்டுகளிலேயே இந்த கல்வெட்டு எழுத்துகள் தான் அளவில் பெரியவை. 

2. இங்கு அசோகன் பிராமி எழுத்தான "ஸி" பொறிக்கப்பட்டு உள்ளது.

3. தமிழ்நாட்டில், ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழி குகைக் கல்வெட்டுகள் ஏதோ ஒரு பழங்கால எழுத்துகளால் வெட்டப்பட்டுள்ளன என்றே ஆய்வாளர்கள் கருதினர். இந்த கல்வெட்டைக் கண்டறிந்த பின்பு தான் பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளதென முதன் முதலாக தெரிய வந்தது. 

முடிவுரை 

இக்கல்வெட்டு எழுத்துகள் சீராக இல்லாமல் பெரிதும் சிறிதுமாக ஒழுங்கற்று அமைந்துள்ளன. தரைப்பகுதிக்கும் கல்வெட்டுக்கும் இடையில் ஏறக்குறைய 40 அடி உயரம். ஆதலால் படிப்பதற்கு ஏதுவாக பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கருதலாம். இப்போது தரைப்பகுதி உயர்த்தப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு அமைந்துள்ள பகுதி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கட்டுரையாளர்:
வே.சிவரஞ்சனி, முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு, சேதுபதி அரசு கலைக்கல்லூரி, இராமநாதபுரம்.
ஒருங்கிணைப்பாளர், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்.

உதவியவை
1. தொல்லியல் துறை தகவல் பலகை
2. ஆவணம் இதழ் 28, தொல்லியல் கழகம், 2017
3. தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 2006.