Pages

Saturday, 18 August 2018

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தன் தலையை தானே அரிந்து காணிக்கையாகக் கொடுத்த வீரனின் நவகண்ட சிற்பம் கண்டுபிடிப்பு




இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் சூரம்புலி அருகே  செம்பிலான்குடியில் தன் தலையை தானே அரிந்து காணிக்கையாகக் கொடுத்த வீரனின் நவகண்ட சிற்பம் மாவட்டத்தில் முதன்முறையாக  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு,  ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ் ஆகியோர் திருவாடானை பகுதியில் மேற்கொண்டிருந்த களஆய்வின் போது, செம்பிலான்குடி சிவன் கோயில் அருகில்  நவகண்ட சிற்பத்தைக்   கண்டுபிடித்தனர். 

இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு கூறியதாவது,

வீரர்கள், போரில் தன் அரசனுக்கு வெற்றி கிடைக்கவும்,  தன் தலைவன் உடல் நலம் பெறவும், ஊரின் நன்மைக்காகவும் காளி, கொற்றவை போன்ற தெய்வங்களை வேண்டிக்கொண்டு,  அக்கோயில் முன்பு வாளால் தங்கள் தலையை தாங்களே அரிந்து அத்தெய்வங்களுக்கு காணிக்கையாகக் கொடுப்பர். இதனை கல்வெட்டுகள் ‘தூங்குதலை குடுத்தல்’ என்கின்றன. இந்த முரட்டு வழிபாடு தலைப்பலி, நவகண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. 


அன்பின் மிகுதியால் தனக்கென வாழாது ஊரின், நாட்டின் நலனுக்காக தன் தலையையோ உடல் உறுப்புகளையோ காணிக்கையாகத் தரும் வழக்கம் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. அவ்வாறு உயிர்நீத்த வீரர்களின் வம்சாவழியினருக்கு நிலம் தானமாக வழங்குவார்கள். இதை உதிரப்பட்டி என்பர். இவ்வாறு இறந்தவர்களை சாவான்சாமி என தெய்வமாக வணங்குகிறார்கள். 

அமர்ந்த, நின்ற அல்லது முழங்காலிட்ட நிலையில் இருக்கும் வீரன், தனது ஒரு கையால் தலைமுடியை பற்றிக்கொண்டு, மறுகையிலுள்ள வாளால் தன் தலையை வெட்டுவது போன்ற அமைப்பில் தான் பெரும்பாலான  நவகண்ட சிற்பங்கள் இருக்கும். சிலவற்றில் வீரனின் ஒரு கையிலுள்ள வாள் கழுத்திலும், மற்றொரு கையிலுள்ள வாள் நிலத்தில் குத்தி இருப்பது போன்றும் இருக்கும்.  வாளை வளைத்து பின்கழுத்தில் இரு கைகளாலும் வெட்டுவது போன்ற சிற்பங்களும் கிடைத்துள்ளன.

நாட்டுக்காக உயிர் துறத்தலை அவிபலி என தொல்காப்பியம் கூறுகிறது. நவகண்டம் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி போன்ற நூல்களில் காணப்படுகின்றன. 

பாண்டிய நாட்டில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மல்லல், குன்றக்குடி,  விருதுநகர் மாவட்டம் மன்னார்கோட்டை, மதுரை மாவட்டம் தென்கரை, திண்டுக்கல் மாவட்டம் பழநி, அம்மையநாயக்கனூர் ஆகிய இடங்களில் ஏற்கனவே நவகண்ட சிற்பங்கள் கிடைத்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக தற்போது செம்பிலான்குடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செம்பிலான்குடியில் உள்ள நவகண்ட சிற்பத்தில் மேலே கல்வெட்டும், கீழே பீடமும், நடுவில் வீரனின் புடைப்புச்சிற்பமும் உள்ளன. வீரனின் வலது கையில் உள்ள வாள் கழுத்தை அறுப்பது போலவும், இடதுகையில் உள்ள குறுவாள் வயிற்றுப் பகுதியில் இருப்பது போலவும் சிற்பம் அமைந்துள்ளது. 

வீரனின் சிற்பம் 2.5 அடி உயரம் உள்ளது. அவர் காலில் செருப்பு அணிந்துள்ளார். அழகிய ஆடை, ஆபரணங்களுடன் சிற்பம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முகம் சேதமடைந்துள்ளது.

தூங்குதலை குடுத்தல் பெரும்பாலும் காளி கோயில் முன்பு தான் நடக்கும் என்பதால் சிலையையும் கோயில் முன்பு அமைப்பது வழக்கம். இவ்வூரில் ஏற்கனவே காளி கோயில் இருந்து அழிந்து போனபின் இச்சிலையை சிவன்கோயில் பகுதிக்கு கொண்டு வந்திருக்கலாம்.

இவ்வூர் சிவன்கோயில் சோழர்கால கலை அமைப்பில் உள்ளது. செம்பிலான்குடி, சூரம்புலி ஆகிய ஊர் பெயர்களும் சோழர்களை நினைவுபடுத்துகின்றன. சிற்பத்தின் மேலுள்ள கல்வெட்டு  தேய்ந்து அழிந்துள்ளது. இதில் உள்ள சில எழுத்துகளை மட்டும் படிக்கமுடிகிறது. இதன் எழுத்தமைதி கொண்டு பாண்டியநாடு சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்த கி.பி.11 ஆம் நூற்றாண்டில் இச்சிற்பம் அமைக்கப்பட்டிருக்கலாம். நவகண்டம் கொடுக்கும் வழக்கம் சோழ நாட்டுப்பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. பாண்டிய நாட்டுப்பகுதிகளில் இவ்வழக்கம் பெரியஅளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.


நாளிதழ் செய்திகள்
 











மரபுச் சின்னங்களைப் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் பயிற்சி




இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றமும், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனமும் இணைந்து திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் மரபுச் சின்னங்களைப் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் பயிற்சி முகாமை நடத்தின. 
  
இதில் திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் 46 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.  

மாணவ மாணவிகள் கோயில் தூண்களில் இருந்த சிலைகள், கல்வெட்டுகளை சுத்தம் செய்தும், ஒட்டடை, குப்பைகள், கோயில் சுவர், விமானங்களில் முளைத்திருந்த செடிகள் ஆகியவற்றை அகற்றியும் நமது பண்பாட்டைக் காத்து வரும் மரபுச் சின்னங்களை பாதுகாத்துப் பராமரிக்கும் முறைகள் பற்றிய செயல்விளக்கப் பயிற்சி பெற்றனர்.


கோயில் சுவர்கள் மற்றும் சிலைகள் மீது திருநீறு, குங்குமம் தூவுதல், கல்வெட்டுகளில் பெயர் எழுதுதல், கோயில் குளங்களை மாசுபடுத்துதல், சிறுநீர் கழித்தல் ஆகியவை பாரம்பரியச் சின்னங்களை அழியச் செய்யும் செயல்கள். இவற்றிலிருந்து அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்பதை வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்களை மாணவர்கள் கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் வழங்கினர்.

பயிற்சி பெற்ற மாணவ மாணவியரை கோயில் விசாரணைதார் கண்ணன் பாராட்டினார். பயிற்சிக்கு உரிய ஏற்பாடுகளை தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் இராமநாதபுரம் கல்வி மாவட்ட ஒருங்கிணப்பாளர் வே.இராஜகுரு, இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் செயலாளர் சோ.ஞானகாளிமுத்து, வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் முனியசாமி, திருப்புல்லாணி பள்ளி சத்துணவு அமைப்பாளர் ஜெயபால் ஆகியோர் செய்திருந்தனர். இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், சிற்றுண்டி  வழங்கப்பட்டன.


நாளிதழ் செய்திகள்