Pages

Monday, 19 July 2021

இணையவழி கல்வெட்டு பயிற்சி

    

    ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகமும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனமும்  இணைந்து இணையவழியில் டெலிகிராம் செயலி மூலம் 27.10.2020 முதல் 31.10.2020 வரை 5 நாட்கள் கல்வெட்டு பயிற்சி நடத்தின. இப்பயிற்சியில் கி.பி.13 முதல் 18-ம் நூற்றாண்டு வரையிலான தமிழ் கல்வெட்டுகளின் அமைப்பு, எழுத்து, எண், குறியீடுகள் பற்றி படங்கள் மூலம் பயிற்சியளிக்கப்பட்டது. மெய்க்கீர்த்தி, கோனேரின்மை கொண்டான், ஆசிரியம், கல்லறைக் கல்வெட்டுகள் குறித்தும் விளக்கப்பட்டது. ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் 31 பேர்  இப்பயிற்சியில் கலந்து கொண்டு கல்வெட்டுகளை எழுதவும், படிக்கவும் பயிற்சி பெற்றனர்.  பயிற்சியை நடத்திய ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்கு ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் காப்பாட்சியர் வி.சிவகுமார் நினைவுப்பரிசு வழங்கினார். பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.


நாளிதழ் செய்திகள்












களப்பிரர் வரலாற்று ஆவணமான பூலாங்குறிச்சி கல்வெட்டுகளை பாதுகாக்க கோரிக்கை

 

தமிழக வரலாற்றில் இருண்ட காலமாகக் கருதப்படும் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த பூலாங்குறிச்சி கல்வெட்டுகளை தொல்லியல் சின்னமாக பாதுகாக்க தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது பூலாங்குறிச்சி. இங்குள்ள குன்றின் சரிவில் உள்ள பாறையில் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த 3 புதிய கல்வெட்டுகளை 1979-ல் மேலப்பனையூர் ஆசிரியர் கரு.ராஜேந்திரன் கண்டுபிடித்தார். இயற்கையிலேயே உரிந்து சிதையும் தன்மை கொண்ட பாறையில் அதைச் செதுக்கி சமப்படுத்தாமலே கல்வெட்டை  பொறித்துள்ளார்கள். இதனால் மழை, வெயில் போன்றவற்றால் கல்வெட்டு தொடர்ந்து அழிந்து வருகிறது. கல்வெட்டைக் கண்டுபிடித்த கல்வெட்டு ஆய்வாளர் கரு.ராஜேந்திரன், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, புதுக்கோட்டை தொல்லியல் கழகத்தின் நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் ஆகியோர் இக்கல்வெட்டைப் பார்வையிட்ட பின் இதுபற்றி கூறியதாவது,

தமிழி எழுத்து வட்டெழுத்தாக மாறி வரும் இக்கல்வெட்டில் சில எழுத்துகள் தமிழியாகவும், சில எழுத்துகள்  வட்டெழுத்தாகவும் உள்ளன. இக்கல்வெட்டுகளின் காலம் கி.பி.5-ம் நூற்றாண்டு. இதிலுள்ள ஒரு கல்வெட்டு சேந்தன் கூற்றன் என்ற மன்னனின் ஆட்சிக்காலத்தில் வேள் மருகண் மகனும் கடலகப் பெரும் படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவனுமான எங்குமான் என்பவன், பச்செறிச்சில் மலை (பூலாங்குறிச்சி), திருவாடானை அருகே விளமர் ஆகிய ஊர்களில் தேவகுலத்தையும், மதுரை உலவியத்தான் குளம் அருகே தாபதப்பள்ளியைச் சேர்ந்த வாசிதேவனார் கோட்டத்தையும் அமைத்ததாகக் கூறுகிறது. இவற்றிற்கு வேண்டியதைச் செய்வதாக அத்திகோயத்தார், உள்மனையார், நான்கு வகைத் திணைகள் ஆகிய மூன்று பிரிவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மன்னர்களால் பிராமணர்களுக்கு வழங்கப்படும் நிலதானம், ஊர் ஆகியவற்றை பிரம்மதாயம், மங்கலம் ஆகிய சொற்களால் குறிப்பர். இச்சொற்கள் காணப்படும் மிகப்பழமையான கல்வெட்டு இங்குதான் உள்ளது. கல்வெட்டில் வரும் மன்னர்கள் களப்பிரர் மன்னர்களாக இருக்கலாம் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். கி.பி. 6-ம் நூற்றாண்டு வரை 6 வரிக்கும் குறைவான சிறிய கல்வெட்டுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு 22 வரிகள் கொண்ட பெரிய கல்வெட்டு காணப்படுவது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. இது வட இந்திய மன்னன் அசோகனின் பாறைக் கல்வெட்டுக்கு இணையான சிறப்புக் கொண்டது.

தமிழக வரலாற்றின் மிக முக்கிய ஆதாரமான இக்கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறை அல்லது தமிழ்நாடு தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்து மழை, வெயில் போன்றவற்றால் கல்வெட்டு பாதிக்காத வகையில் கூரை அமைத்துப் பாதுகாக்கவேண்டும் என கேட்டுக்கொள்வதாக அவர்கள்  தெரிவித்தனர்.

நாளிதழ் செய்திகள்






அழகிய தமிழ்ப் பெயர்களுடன் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு சாயல்குடியில் கண்டுபிடிப்பு

 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அழகிய தமிழ்ப் பெயர்கள் கொண்ட 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை மாணவி வே.சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மு.விசாலி, ரா.கோகிலா, து.மனோஜ் ஆகியோர், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ஜமீந்தார் அரண்மனை எதிரில் பழமையான மண்டபம் போன்ற அமைப்பில் இருந்த அங்காள ஈஸ்வரி கோயில் விதானத்தில் 6 அடி நீளமுள்ள இரு கல்லில் கல்வெட்டுகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். புதுக்கோயில் கட்ட அம்மண்டபத்தை பிரித்தபோது 3 அடி உயரமுள்ள மேலும் ஒரு கல்லில் கல்வெட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டை படி எடுத்து ஆய்வு செய்தபோது இது கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கண்டறியப்பட்டது.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது,

மூன்று கற்களில் இருந்ததும், ஒன்றுக்கொன்று தொடர்புடைய 55 வரிகள் கொண்ட ஒரே கல்வெட்டு ஆகும். நிச்சி நாயகனான மேல்கீரை நாடாள்வான், மாணிக்கன் உய்யவந்தானான குளதையாதயன் ஆகிய இருவரும் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை சாயல்குடி சொக்கனார் கோயிலுக்கு விற்று, அதை சிவன் கோயில்களின் பொறுப்பாளராகக் கருதப்படும் சண்டேஸ்வரதேவர் பெயருக்கு மாற்றிக் கொடுத்து அதற்கு ஈடாக பணம் பெற்றுள்ளதையும், இதற்கு சாட்சியாக பலர் கையொப்பம் இட்டுள்ளதையும் இக்கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.

தற்போது நிலம் விற்பனை செய்யும்போது வாங்குபவர், விற்பவர், சாட்சிகள் ஆகியோர் பத்திரத்தில் கையொப்பம் இடுவது போல அக்காலத்தில் ஓலைச் சுவடியில் அவர்களின் கையொப்பம் பெற்று அதை கல்வெட்டில் வெட்டி வைப்பார்கள். கையொப்பம் இடத் தெரியாதவர்களை தற்குறி எனவும், அவர்களுக்கு மற்றவர்கள் சான்று இடுதலை தற்குறி மாட்டெறிதல் எனவும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இதில் தற்குறியான மூவருக்கு பிள்ளையார் அழகிய விடங்கர் கோயிலில் இருக்கும் முத்தன் சிவலங்கனான இமையே தருவான்,  சாத்தனிரட்டையான் அஞ்சாத காடத்தட்டான், தச்சன் சீராமன் மூவானான இளமை ஆசாரியன் ஆகியோர் சான்று இட்டுள்ளனர்.

விற்கப்பட்ட நிலத்தில் இருந்த குளமும், அக்குளத்தைப் பராமரிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட குளப்பட்டி எனும் நிலமும் சேர்த்து கோயிலுக்கு விற்கப்பட்டுள்ளதும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கூத்தன் சோழனான செம்பிலராயன், கொற்றன் முத்தனான செம்பில் வளநாடன், சொல் நாணலையான் வழுதி சிங்கராயன், சிறுமுத்தனாளுடையானான வீரபாண்டியராயன், மங்கல வனப்பனாலன் கங்காராயன், சிறந்தான் தொண்டையன், பேரருங்கோவேளான் உடையான் பாலன், வதுலங்கன் கெங்கையான் விரதமிட்ட ராயன் ஆகியோரும் இதில்  கையொப்பம் இட்டுள்ளனர். இக்கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ள அனைவரின் பெயர்களும் அழகிய தமிழ்ப் பெயர்களாக உள்ளன. இதன் மூலம் 800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் பெயர் வைக்கும் வழக்கத்தை அறிந்து கொள்ளமுடிகிறது.

கல்வெட்டின் சில பகுதிகள் அழிந்துவிட்டதால் கோயிலுக்கு விற்கப்பட்ட நிலம் பற்றி முழுமையாக அறிய இயலவில்லை. அதன் எல்லைகளாக இரு பெருவழிகள், போளம், சிறுகுளம் ஆகியவை கூறப்பட்டுள்ளன. இதில் சொல்லப்படும் பெருவழிகள் (நெடுஞ்சாலைகள்) பெரியபட்டணம், கன்னியாகுமரி செல்லும் பெருவழிகளாக இருக்கலாம். போளம் என்பது பிசின் போன்ற நறுமணப்பண்டங்கள் ஆகும். வணிகர்களின் விற்பனைப் பண்டமான போளம் வைக்கப்பட்டிருந்த இடமும் கல்வெட்டில் ஒரு எல்லையாக கூறப்பட்டுள்ளது.

சாயல்குடி அருகிலுள்ள திருமாலுகந்தான்கோட்டை சிவன்கோயில் கல்வெட்டில் இடைவழியான எறிவீரப்பட்டினம் என குறிப்பிடப்படுவது சாயல்குடியில் உள்ள இருவேலியாக இருக்கலாம். இருவேலி கண்மாய்ப் பகுதியில் இடைக்காலப் பானை ஓடுகளும், நந்தி சிற்பமும் இருப்பது அங்கு ஒரு சிவன் கோயிலும், ஊரும் இருந்து அழிந்து போயிருப்பதை உறுதியாக்குகிறது.  வணிகர்களின் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கி இருந்த ஊர் எறிவீரப்பட்டினம் என அழைக்கப்படும். இதன்மூலம் சாயல்குடி இரு வணிகப் பெருவழிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்த ஒரு முக்கிய வணிக நகரமாக பழங்காலம் முதல் இருந்திருப்பதை அறியமுடிகிறது.

கல்வெட்டுள்ள இடம் தற்போது அங்காள ஈஸ்வரி கோயில் என அழைக்கப்பட்டாலும், கல்வெட்டில் பிடாரி கோயில் எனப்படுகிறது. நிலம் விற்கப்பட்டது அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு என்றாலும், அதன் கல்வெட்டை பிடாரி கோயிலின் கிழக்குப் பகுதியில் வைத்துள்ளதாக கல்வெட்டில் சொல்லப்படுகிறது. சாயல்குடி சிவன் கோயில் முற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்திலேயே கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டு இங்கு தான் உள்ளது. உலகு சிந்தாமணி வளநாட்டு சாகியில்குடி என அக்கல்வெட்டில் இவ்வூர் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


நாளிதழ் செய்திகள்











திருச்சுழி அருகே குதிரை படத்துடன் காரணவர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

 


கோட்டுருவமாக வரையப்பட்ட குதிரையின் படத்துடன் காரணவர் பெயர் குறிப்பிடும் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவைச் சேர்ந்த புரசலூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவைச் சேர்ந்த புரசலூர் கண்மாயில் சிதறிக் கிடக்கும் கற்களில் பழமையான கல்வெட்டுகள் இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள் செ.ரமேஷ், த.ஸ்ரீபால் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு செய்தார்.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது,

புரசலூர் கண்மாய் பகுதியில் பழமையான ஒரு கோயில் இருந்து அழிந்து போயிருக்கிறது. அக்கோயில் கற்கள் கண்மாயில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இக்கற்களை பல ஆண்டுகளுக்கு முன் இவ்வூர் கண்மாய் மடைகள் கட்டப் பயன்படுத்தியுள்ளனர். சமீபத்தில் புதிதாக மடை கட்டுவதற்காக பழைய கற்களை அகற்றியபோது அதில் கல்வெட்டுகள் இருந்ததை அவ்வூரைச் சேர்ந்த ரமேஷ், ஸ்ரீபால் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.

கண்மாயில் சிதறிக் கிடப்பவை, கோயில் கருவறையின் வெளிப்பகுதியில் உள்ள ஜகதி, குமுதம், யாளிவரி ஆகியவற்றின் உடைந்த பகுதிகள் ஆகும். இதில் ஜகதியில் இரண்டும், குமுதத்தில் ஒன்றுமாக மூன்று கல்வெட்டுகள் உள்ளன. முழுமையாக இல்லாமல் துண்டுகளாக உள்ள இக்கல்வெட்டுகள் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும்.

          குமுதத்தின் உடைந்த கல்லில் உள்ள 4 வரி கல்வெட்டில் நிலத்தின் எல்லை குறிப்பிடப்படுகிறது. எனவே இவ்வூர் கோயிலுக்கு நிலதானம் வழங்கி இருப்பதை அறியமுடிகிறது. இதில் வருள்வாசகநல்லூர் எனும் ஊர் குறிப்பிடப்படுகிறது. இது திருவருள்வாசகநல்லூராக இருக்கலாம்.

ஜகதியில் இருந்த இரு துண்டுக் கல்வெட்டுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. இதில் ஒன்றில் இத்திகுளத்தராயன் என்பவர் பெயரும், அஞ்சு நிலையூர்க்கு சமைந்த காரணவர் பெயரும், அடுத்ததில் வெண்கலம் பறித்து மண்கலம், சுபமஸ்து ஆகிய சொற்களும் காணப்படுகின்றன. இதில் காரணவர் பெயருக்குக் கீழே குதிரையின் படம் கோட்டுருவமாக  வரையப்பட்டுள்ளது.

காரணவர், படைக்காரணவர் எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுபவர்கள் படை வீரர்கள் ஆவர். இக்கல்வெட்டில் குதிரை படம் வரையப்பட்டிருப்பதன் மூலம் அவர்களை குதிரைப்படை வீரர்களாகக் கருதலாம். அஞ்சு நிலையூர் காரணவர்கள் இவ்வூர் கோயிலுக்கு தானம் வழங்கி இருக்கலாம். அருப்புக்கோட்டை, இலுப்பைக்குடி, பள்ளிக்குறிச்சி, திருமோகூர் ஆகிய ஊர்களில் இருந்த காரணவர் பற்றி கி.பி.13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் சொல்லப்படுகிறது. படைவீரர்களுக்குத் தானமாக மன்னர்கள் வழங்கிய பள்ளிக்குறிச்சி என்ற ஊரை காரணவர்கள் நிர்வகித்து வந்துள்ளனர்.

கல்வெட்டில் சொல்லப்படும் அஞ்சு நிலையூர் மதுரை அருகிலுள்ள நிலையூராக இருக்கலாம். ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கிடாரம், நரிப்பையூர் உள்ளிட்ட சாயல்குடியின் கடற்கரைப் பகுதியிலும், அருப்புக்கோட்டை, மதுரையிலும் காரணமறவர்கள் என்பவர்கள் தற்போதும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வூர் தொடக்கப்பள்ளி அருகில், கி.பி.18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, கணவன் இறந்தபின் உடன்கட்டை ஏறிய பெண்களுக்கான இரு சதிக்கற்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.