Pages

Tuesday, 3 October 2017

இராமநாதபுரம் அருகே போகலூரில் புதியகற்காலத்தைச் சேர்ந்த கற்கோடரி கண்டுபிடிப்பு தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்ய கோரிக்கை - வே.இராஜகுரு



 

இராமநாதபுரம் அருகே போகலூரில் புதியகற்காலத்தைச் சேர்ந்த 5000 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் அருகே போகலூர் கண்மாயின் வடக்கில் முல்லைக்கோட்டை முனீஸ்வரர் கோயில் உள்ளது. இப்பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் பானை ஓடுகள் சிதறிக்கிடப்பதாக ஆசிரியர்கள் அரசநகரி காந்தி, முத்துவயல் பூமிநாதன் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு, செயலாளர் சோ.ஞானகாளிமுத்து, முனைவர்பட்ட ஆய்வாளர் ஹரிகோபாலகிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதியில் களஆய்வு செய்தனர்.
வைகை ஆற்றில் இருந்து 2கி.மீ. தூரத்தில் உள்ள இப்பகுதி காத்தான் ஓடை மூலம் ஆற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் கரையில் உள்ள முல்லைக்கோட்டை முனீஸ்வரர்  கோயில் சுற்றுப் பகுதியில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடரி, தானியங்களை அரைக்க பயன்பட்ட அரைப்புக்கற்கள், கவண்கல், குறியீடு உள்ள பானை ஓடுகள், மட்பாத்திரங்களை வைப்பதற்குரிய பானைத் தாங்கிகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கருப்பு நிற பானை ஓடுகள், நெசவுத்தொழிலுக்குப் பயன்படும் தக்களி, வட்டச்சில்லுகள், சுடுமண் கெண்டியின் உடைந்தபகுதி, கைப்பிடி, மான் கொம்பு, இரும்பு தாதுக்கள், இரும்புக்கழிவுகள், இரும்புக் கத்தியின் முனைப்பகுதி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
புதிய கற்காலம்
புதிய கற்காலம் கி.மு.3000 முதல் கி.மு.1000 வரையிலானது.  மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறிய இக்காலத்தில் வழுவழுப்பான கற்கருவிகள், கையாலும், சக்கரத்தாலும் செய்யப்பட்ட மட்பாண்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினான். 
கற்கோடரி
போகலூரில் கிடைத்த கற்கோடரி புதிய கற்காலத்தைச் சேர்ந்தது. இது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது. இதன் நீளம் 7 செ.மீ. அகலம் 5.5 செ.மீ. கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர். இதன் மேல்பகுதியில் சிறு சிறு துளைகள் உள்ளன. இது அதிகம் பயன்படுத்தியதால் ஏற்பட்டதாக இருக்கலாம். இதன் அகன்ற வெட்டும் பகுதி கூர்மையானதாகவும், குறுகிய பகுதி கூர்மை குறைந்தும் உள்ளது. மரத்தாலான தடியில் கட்டி இதை ஆயுதமாகவும், பிறவற்றுக்கும் பயன்படுத்தியுள்ளார்கள்.
இரும்புக்காலம்
 புதியகற்காலத்தை அடுத்த பெருங்கற்காலத்தை இரும்புக்காலம் எனவும் கூறுவார்கள். இங்கு இரும்பு சார்ந்த பல பொருள்கள் கிடைத்திருப்பதால் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறையை அறிந்திருந்தனர் என அறியமுடிகிறது.
குறியீடு உள்ள பானை ஓடுகள்
பிராமி குறியீடு பானை ஓடு
            ஒரு கருப்பு சிவப்பு பானை ஓட்டில் ‘த’ என்னும் தமிழ் பிராமி எழுத்து போன்ற குறியீடும், மற்றொன்றில் திரிசூலக் குறியீடும் உள்ளன. இவை 2000 ஆண்டுகள் பழமையான சங்ககாலத்தைச் சேர்ந்தவை.
திரிசூலக்குறியீடு பானை ஓடு
 கவண்கல் 
வேட்டைக்கும், பாதுகாப்புக்கும் பயன்பட்ட ஒரு இன்ச் விட்டமுள்ள வட்டமான கவண்கல் இங்கு கிடைத்துள்ளது. இது புதிய கற்காலம் முதல் பயன்பாட்டில் இருந்திருக்கலாம். 
கவண்கல்
தொல்பொருள்கள்
இங்கு கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில், வழுவழுப்பானவை சொரசொரப்பானவை என இருவகைகள் உள்ளன. சிவப்பு நிற பானைகளின் வெளிப்பகுதியில் வண்ணம் பூசப்பட்டு மெருகூட்டப்பட்டுள்ளது. பானை ஓடுகளை தேய்த்து வட்டமாக்கி சிறுவர் சிறுமியர் விளையாடப் பயன்படுத்தும் சிறியதும் பெரியதுமான 8 சில்லுகள் கிடைத்துள்ளன. 
உகாய் மரம்
 வட்டச்சில்லின் நடுவில் துளையிட்டு பஞ்சை நூலாக்க நெசவுத்தொழிலுக்கு பயன்படுத்தும் ஒரு தக்களி  கிடைத்துள்ளது. சுடுமண் கைப்பிடி தேரிருவேலியில் கிடைத்தது போன்று பெரியதாக உள்ளது. இது பெரிய மட்பாத்திரங்களோடு இணைக்கப்பட்டு தூக்குவதற்கு பயன்பட்டிருக்கலாம். மட்பாத்திரங்களை வைப்பதற்குப் பயன்படுத்திய சிவப்பு, கருப்பு நிறங்களிலான பானைத்தாங்கியின் உடைந்த பகுதிகள் கிடைத்துள்ளன.
இங்கு புதிய கற்காலக் கருவியோடு இரும்புக்கால, சங்ககால பானை ஓடுகளும் கிடைப்பதன் மூலம் புதிய கற்காலம் முதல் சங்ககாலம் வரை பல ஆயிரம் ஆண்டுகள் மக்கள் குடியிருப்புப் பகுதியாக இது விளங்கியுள்ளதை அறியமுடிகிறது.  புதிய கற்காலக் கருவிகள் பிற்காலத்திலும் ஏதோ ஒருவகையில் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
உகாய் எனும் மிஸ்வாக் மரம்
மேலும் பானை ஓடுகள் சிதறிக்கிடக்கும் பகுதியில் சீமைக்கருவை மரங்களுடன்  50 க்கும் மேற்பட்ட உகாய் எனும் மிஸ்வாக் மரம் (Miswak) (Salvadora Persica) செழித்து வளர்ந்துள்ளது. ஐவகை நிலங்களில் பாலைத்திணைக்குரிய மரமான இது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இதன் இலைச்சாறு சிறுநீரகக் கல்லுக்கு சிறந்த மருந்தாகும். வேர்கள் பல்துலக்கப் பயன்படும். 
உகாய் மரம்
 அகழாய்வு செய்ய கோரிக்கை
புதிய கற்காலக் கருவிகள், வட தமிழ்நாட்டில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தென் தமிழ்நாட்டில் சமயநல்லூர், கீழடி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளன.
புதிய கற்காலக் கருவி தென்மாவட்டங்களில் மிகஅரிதாகவே கிடைப்பதால் இதன் பழமையை மேலும் தெரிந்துகொள்ள இப்பகுதியில் தொல்லியல் துறை அகழாய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.


நாளிதழ் செய்திகள்










நியூஸ்7 தொலைக்காட்சி


தினமலர் 




Thursday, 21 September 2017

அரசு பள்ளி மாணவன் கண்டெடுத்த ‘துட்டு’ - வே.இராஜகுரு



மாணவன் சுதர்ஸன்
போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோது அவர்களின் நாணயங்கள் தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்தன. பணம், துட்டு, காசு, தம்பிடி, சல்லி ஆகியவை நாணயத்துக்கான வேறு பெயர்கள். இவை சிறு நாணயங்கள் என்பதால் அதிகளவில் சாதாரண மக்களால் பயன்படுத்தப்பட்டன. அந்த நாணயங்களின் பெயர்கள் இப்போதும் பணத்தைக் குறிக்கும் சொல்லாக மக்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த சுதர்ஸன் என்ற எட்டாம் வகுப்பு மாணவன் தனது ஊரான பால்கரையில்  18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டச்சுக்காரர்களின் பணமான 3 துட்டைக் (Duit) கண்டெடுத்துள்ளான். 

மூன்றுவித துட்டுகள்

டச்சுக்காரர்கள்
கி.பி.1602 இல் தொடங்கப்பட்ட டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி அல்லது விரிங்கெ ஊஸ்ட்டிண்டிஸ் கம்பனி (Vereenigde Oost-Indische Compagnie) (சுருக்கமாக வி.ஓ.சி.) தான் உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகும். டச்சு என அழைக்கப்படும் நெதர்லாந்து அப்போது ஸ்பெயின் ஆட்சியின் கீழ் இருந்தது.
சேதுநாட்டில் டச்சுக்காரர்கள்
தமிழகக் கடற்கரைப்பகுதியிலும், இலங்கையிலும் வாணிகம் செய்து வந்த டச்சுக்காரர்கள், கி.பி.1759இல், கீழக்கரையில்  ஒரு நெசவுத் தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதியிடம் (கி.பி.1749 - 1761) அனுமதி பெற்றனர். நாளடைவில் அதை ஒரு கோட்டையாக அவர்கள் மாற்ற முயற்சி செய்தபோது மன்னர் அதை இடித்துத் தள்ள உத்தரவிட்டார். இதனால் ஏற்பட்ட போர்ப்பதற்றம் கீழக்கரை சின்னத்தம்பி மரைக்காயர் உதவியால் பேசி சரி செய்யப்பட்டது.
          அதன்பின்பு முத்துராமலிங்கசேதுபதி ஆட்சிக்காலத்தில் அவருடைய தளவாய் தாமோதரம்பிள்ளை டச்சுக்காரர்களுடன் கி.பி.1767இல் செய்துகொண்ட உடன்பாட்டின்படி, கீழக்கரையில் கட்டிய கோட்டையை பழுதுபார்க்கவும், பாம்பன் கால்வாயை அவர்கள் ஆட்சியில் வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது.  டச்சுக்காரர்கள் உதவியுடன் முத்துராமலிங்கசேதுபதி ஒரு பீரங்கி தொழிற்சாலையை இராமநாதபுரம் பகுதியில் நிறுவினார். சேதுபதிகள் டச்சுக்காரர்களுடன் இணக்கமான உறவு கொண்டிருந்தார்கள்.
நாணயங்கள் அமைப்பு
          மாணவன் சுதர்ஸன் கண்டெடுத்த மூன்றும் வட்டமான செப்பு நாணயங்கள். இவற்றில் இரண்டு கி.பி.1735 ஆம் ஆண்டையும், ஒன்று  கி.பி.1791 ஆம் ஆண்டையும் சேர்ந்தவை. மூன்று நாணயங்களிலும் ஒரு பக்கத்தில் டச்சுக் கம்பெனியைக் குறிக்கும் VOC எனும் குறியீடு உள்ளது. மற்றொரு பக்கத்தில் இரண்டு துட்டில் ஒரு சிங்கமும் ஒன்றில் இரண்டு சிங்கங்களும் உள்ளன. கி.பி.1791 ஆம் ஆண்டையும் சேர்ந்த துட்டில் சிங்கம் உள்ள பக்கத்தில் INDEO EST SPES NOSTRA என அந்த கம்பனியின் பெயர் உள்ளது.
டச்சு துட்டில் மொத்தம் ஐந்து வகையான நாணயங்கள் உள்ளன. இங்கு கிடைத்ததில் இரண்டு ஹாலந்து வகையையும், ஒன்று  கெல்டர்லாந்து வகையையும் சேர்ந்தவை.
இந்த நாணயங்கள் ஜாவா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்காக தயாரிக்கப்பட்டவை. பின்னர் இந்தியாவிலும் புழக்கத்தில் விடப்பட்டன. இந்தியாவில் நாணயம் அச்சடிக்கும் அக்கசாலைகள் கொச்சி, நாகப்பட்டணம், புலிகாட், தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்தன.
துட்டு
          பால்கரையில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் வெளியிடப்பட்ட ஆண்டான கி.பி. 1735 இல் கட்டையத்தேவர் என்ற குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதியும்,  கி.பி.1791 இல்  முத்துராமலிங்க சேதுபதியும் ஆட்சியில் இருந்துள்ளனர்.
          அச்சுறுத்தலாக இருந்த ஆங்கிலேயரை எதிர்க்க சேதுபதி மன்னர்கள் டச்சுக்காரர்களுடன் நல்ல நட்பு கொண்டிருந்தார்கள். அதன் அடையாளமாக  சேதுபதிகள் நாணயத்துடன் டச்சுக்காரர்களின் நாணயமும் சேதுநாட்டில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இதை திருப்புல்லாணி, சேதுக்கரை, பால்கரை ஆகிய இடங்களில் கிடைத்த  டச்சுக்காரர்களின் நாணயங்கள் மூலம் அறிய முடிகிறது.
          பணத்தை துட்டு என சொல்லும் வழக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்தாலும் தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் இந்த வழக்கு அதிக அளவில் மக்கள் பயன்பாட்டில் இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாணயங்களை குறிக்கும் பல சொற்கள் இழிவான சொல்லாகவும் பயன்பாட்டில் உள்ளன. 
              நாளிதழ் செய்திகள்