போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர் நம்மை
ஆண்டபோது அவர்களின் நாணயங்கள் தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்தன. பணம், துட்டு, காசு, தம்பிடி,
சல்லி ஆகியவை நாணயத்துக்கான வேறு பெயர்கள். இவை சிறு நாணயங்கள்
என்பதால் அதிகளவில் சாதாரண மக்களால் பயன்படுத்தப்பட்டன. அந்த நாணயங்களின் பெயர்கள்
இப்போதும் பணத்தைக் குறிக்கும் சொல்லாக மக்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ்
சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த
சுதர்ஸன் என்ற எட்டாம் வகுப்பு மாணவன் தனது ஊரான பால்கரையில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டச்சுக்காரர்களின்
பணமான 3 துட்டைக் (Duit) கண்டெடுத்துள்ளான்.
மூன்றுவித துட்டுகள்
|
டச்சுக்காரர்கள்
கி.பி.1602
இல் தொடங்கப்பட்ட டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி அல்லது ‘விரிங்கெ ஊஸ்ட்டிண்டிஸ் கம்பனி’ (Vereenigde Oost-Indische Compagnie) (சுருக்கமாக வி.ஓ.சி.) தான் உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகும். டச்சு என அழைக்கப்படும்
நெதர்லாந்து அப்போது ஸ்பெயின்
ஆட்சியின் கீழ் இருந்தது.
சேதுநாட்டில்
டச்சுக்காரர்கள்
தமிழகக் கடற்கரைப்பகுதியிலும், இலங்கையிலும் வாணிகம் செய்து வந்த டச்சுக்காரர்கள்,
கி.பி.1759இல், கீழக்கரையில் ஒரு நெசவுத்
தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதியிடம் (கி.பி.1749 -
1761) அனுமதி பெற்றனர். நாளடைவில் அதை ஒரு கோட்டையாக அவர்கள் மாற்ற முயற்சி
செய்தபோது மன்னர் அதை இடித்துத் தள்ள உத்தரவிட்டார். இதனால் ஏற்பட்ட போர்ப்பதற்றம்
கீழக்கரை சின்னத்தம்பி மரைக்காயர் உதவியால் பேசி சரி செய்யப்பட்டது.
அதன்பின்பு முத்துராமலிங்கசேதுபதி
ஆட்சிக்காலத்தில் அவருடைய தளவாய் தாமோதரம்பிள்ளை டச்சுக்காரர்களுடன் கி.பி.1767இல்
செய்துகொண்ட உடன்பாட்டின்படி, கீழக்கரையில் கட்டிய கோட்டையை பழுதுபார்க்கவும்,
பாம்பன் கால்வாயை அவர்கள் ஆட்சியில் வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. டச்சுக்காரர்கள் உதவியுடன்
முத்துராமலிங்கசேதுபதி ஒரு பீரங்கி தொழிற்சாலையை இராமநாதபுரம் பகுதியில் நிறுவினார்.
சேதுபதிகள் டச்சுக்காரர்களுடன் இணக்கமான உறவு கொண்டிருந்தார்கள்.
நாணயங்கள்
அமைப்பு
மாணவன் சுதர்ஸன் கண்டெடுத்த மூன்றும் வட்டமான செப்பு
நாணயங்கள். இவற்றில் இரண்டு கி.பி.1735 ஆம் ஆண்டையும், ஒன்று கி.பி.1791 ஆம் ஆண்டையும் சேர்ந்தவை. மூன்று
நாணயங்களிலும் ஒரு பக்கத்தில் டச்சுக் கம்பெனியைக் குறிக்கும் VOC எனும் குறியீடு உள்ளது.
மற்றொரு பக்கத்தில் இரண்டு துட்டில் ஒரு சிங்கமும் ஒன்றில் இரண்டு சிங்கங்களும் உள்ளன.
கி.பி.1791 ஆம் ஆண்டையும் சேர்ந்த துட்டில் சிங்கம் உள்ள பக்கத்தில் INDEO EST
SPES NOSTRA என அந்த கம்பனியின் பெயர் உள்ளது.
டச்சு துட்டில் மொத்தம் ஐந்து வகையான நாணயங்கள் உள்ளன. இங்கு கிடைத்ததில் இரண்டு
ஹாலந்து வகையையும், ஒன்று கெல்டர்லாந்து வகையையும்
சேர்ந்தவை.
இந்த நாணயங்கள் ஜாவா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்காக
தயாரிக்கப்பட்டவை. பின்னர் இந்தியாவிலும் புழக்கத்தில் விடப்பட்டன. இந்தியாவில்
நாணயம் அச்சடிக்கும் அக்கசாலைகள் கொச்சி, நாகப்பட்டணம், புலிகாட், தூத்துக்குடி
ஆகிய இடங்களில் இருந்தன.
துட்டு
பால்கரையில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள்
வெளியிடப்பட்ட ஆண்டான கி.பி. 1735 இல் கட்டையத்தேவர் என்ற குமாரமுத்து விஜயரகுநாத
சேதுபதியும், கி.பி.1791 இல் முத்துராமலிங்க சேதுபதியும் ஆட்சியில்
இருந்துள்ளனர்.
அச்சுறுத்தலாக இருந்த ஆங்கிலேயரை
எதிர்க்க சேதுபதி மன்னர்கள் டச்சுக்காரர்களுடன் நல்ல நட்பு கொண்டிருந்தார்கள். அதன்
அடையாளமாக சேதுபதிகள் நாணயத்துடன்
டச்சுக்காரர்களின் நாணயமும் சேதுநாட்டில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இதை திருப்புல்லாணி,
சேதுக்கரை, பால்கரை ஆகிய இடங்களில் கிடைத்த
டச்சுக்காரர்களின் நாணயங்கள் மூலம் அறிய முடிகிறது.
பணத்தை துட்டு என சொல்லும் வழக்கு
தமிழ்நாடு முழுவதும் இருந்தாலும் தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் இந்த
வழக்கு அதிக அளவில் மக்கள் பயன்பாட்டில் இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாணயங்களை
குறிக்கும் பல சொற்கள் இழிவான சொல்லாகவும் பயன்பாட்டில் உள்ளன.
நாளிதழ் செய்திகள்
No comments:
Post a Comment