Pages

Showing posts with label தேடித்திரிவோம் வா. Show all posts
Showing posts with label தேடித்திரிவோம் வா. Show all posts

Saturday, 18 August 2018

அரசுப் பள்ளி மாணவர்கள் எழுதிய தொல்லியல் கட்டுரைகள் நூல் அறிமுக விழா



இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் அரசுப் பள்ளி மாணவர்கள் தொல்லியல் சார்ந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து “தேடித்திரிவோம் வா” என்ற பெயரில் நூலாக வெளியிடும் அறிமுக விழா நடந்தது.

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கள் ஊர்களின் பெயர்க் காரணங்கள், கிராமக்கோயில்கள் வரலாறு, வழிபாட்டு முறைகள், கிராமத்துப் பாடல்கள், புதிய வரலாற்றுத் தடயங்கள் பற்றி களஆய்வின் மூலம் சேகரித்த தகவல்களைத் திரட்டி கட்டுரைகளாக எழுதி உள்ளார்கள். இதில் 12 மாணவ, மாணவிகளின் 14  கட்டுரைகளையும், இம்மன்றப் பொறுப்பாசிரியர் வே.ராஜகுரு எழுதிய 1 கட்டுரையையும் தொகுத்து “தேடித்திரிவோம் வா” எனும் பெயரில் நூலாக உருவாக்கி உள்ளனர். இதை இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் சார்பில் அறிமுகம் செய்யும் விழா நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு தலைமை வகித்தார். பத்தாம் வகுப்பு மாணவி பா.அபர்ணா வரவேற்றார். மதுரை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர், தொல்லியல் அறிஞர் முனைவர் சொ.சாந்தலிங்கம் மாணவர்களின் படைப்புகளை அறிமுகம் செய்து வெளியிட்டார். முதல் படைப்பை  இராமநாதபுரம் இராமலிங்கவிலாசம் அரண்மனை காப்பாட்சியர்  பா.ஆசைத்தம்பி பெற்றுக்கொண்டார். இந்நூலில் கட்டுரை எழுதிய 12 மாணவ, மாணவியருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவிகள் மு.விசாலி, மு.அபிநயா ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர். இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் செயலாளர் சோ.ஞானகாளிமுத்து நன்றி கூறினார். 


திருப்புல்லாணி பள்ளியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் மலைக்கண்ணன் 50 மாணவர்களுக்கும், பள்ளியின் முன்னாள் மாணவி ஜெயகெளரி 20 மாணவர்களுக்கும் இந்த நூலை தங்கள் செலவில் இலவசமாக வழங்கினர். நரசிங்கக்கூட்டம் பள்ளித் தலைமையாசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். 


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளானூர் பள்ளி ஆசிரியர் முனியசாமி, இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் விமல்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர். இராமநாதபுரம் அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவகுமார், அருப்புக்கோட்டை அரசு கல்லூரி பேராசிரியர் அழகுபாரதி, தாதனேந்தல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் புல்லாணி, கீழக்கரை தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு, மின்வாரியப் பொறியாளர் கென்னடி, ஆசிரியர் சுதர்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் திருப்புல்லாணி, பள்ளபச்சேரி, பொக்கனாரேந்தல், பால்கரை, உத்தரவை, தாதனேந்தல், கீழப்புதுக்குடி, கோரைக்குட்டம், பஞ்சந்தாங்கி, முத்துவீரப்பன்வலசை உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

நாளிதழ் செய்திகள்









தினமலர்.காம்