Pages

Sunday, 19 October 2025

பண்டைய துறைமுகங்களுக்கு ஆதாரமான உப்பங்கழிகள் தொல்லியல் பயிற்சியில் ஆச்சரியமடைந்த மாணவர்கள்

 

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, அரசு கலைக் கல்லூரி, வரலாற்றுத் துறை சார்பில் முதுகலை இரண்டாமாண்டு மாணவர்கள், வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் பாரதி தலைமையில், தொழில் சார் கல்விப் பயிற்சிக்காக திருப்புல்லாணி பகுதியில் உள்ள ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், அரண்மனை,  கோரைக்குட்டம் சமண தீர்த்தங்கரர் சிற்பம், உப்பங்கழி ஆகிய வரலாற்றுச் சின்னங்களை நேரில் பார்வையிட்டனர். திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலர் வே.இராஜகுரு அவ்விடங்களின் வரலாற்றுச் சிறப்புகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். அப்போது அவர் கூறியதாவது,


பண்டைக் காலத்தில் துறைமுகத்தின் ஆழமான பகுதியில் கப்பல்களை நிறுத்தி அதிலிருந்து பொருட்களை சிறிய படகுகளில் ஏற்றிக் கரையில் இறக்குவர். இதற்கு ஆறு கடலில் கலக்கும் உப்பங்கழிகளும் அவற்றின் முகத்துவாரங்களும் பெரிதும் உதவியாய் இருந்துள்ளன. திருப்புல்லாணி அருகிலுள்ள கோரைக்குட்டத்தில் கொட்டகுடி ஆறு சேதுக்கரை கடலில் கலக்கிறது. இதன் உப்பங்கழியில் அலையாத்திக் காடுகள் அழகாக வளர்ந்து வருகின்றன. இதன்மூலம் சேதுக்கரைப் பகுதியில் ஒரு பழமையான வணிக நகரம், துறைமுகம் இருந்திருக்கும் வாய்ப்பு உள்ளது.

டச்சுக்காரர்களின் ஆதிக்கம் கீழக்கரைப் பகுதியில் அதிகமான காரணத்தால், பாதுகாப்புக்காக திருப்புல்லாணியில் ஒரு கோட்டை கட்ட முடிவு செய்து, முத்துராமலிங்க சேதுபதி மன்னரான போது, அதை அரண்மனையாக கி.பி. 1759 இல் கட்டியுள்ளனர். பின் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை அகற்ற, வெளியுலகுக்குத் தெரியாத மறைவான காட்டுப் பகுதியில் இருந்த இந்த அரண்மனையை ஆயுதத் தொழிற்சாலையாகவும், ஆயுதக் கிடங்காகவும் அவர் பயன்படுத்தியுள்ளார். து நான்கு சதுரமாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 16 அறைகளும், நான்கு குளங்களும்  உள்ளன. ஒவ்வொரு பகுதியும் மற்றொரு பகுதியுடன் பெரிய மரங்களால் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. 


கோரைக்குட்டம் கொட்டகுடி ஆற்றின் கரையில் தலை இல்லாத 24ஆம் சமணத் தீர்ந்தங்கரர் மகாவீரரின் கி.பி.9-ம் நூற்றாண்டு சிற்பத்தில் அவர் மூன்று சிங்க உருவங்கள் உள்ள பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் உள்ளார். ஆதிஜெகநாத பெருமாள் கோயில் பாண்டியர் காலம் முதல் இஸ்லாமியருடன் கலாசாரத் தொடர்புடையதாக இருந்துள்ளது. இங்குள்ள கல்வெட்டுகள் அதை உறுதிப்படுத்துகின்றன. மாவட்டத்தில் அதிகமான கல்வெட்டுகள் உள்ள கோயில் இதுதான் என்றார். பின்னர் கோயிலின் கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றை மாணவர்கள் பார்த்து அறிந்து கொண்டனர்.


Backwaters, the source of ancient ports, amazed students during archaeological training

            Ramanathapuram district, Paramakudi, Government Arts College, History Department, second year postgraduate students, led by Assistant Professor Bharathi, History Department, visited the historical monuments of Adi Jaganatha Perumal Temple, Palace, Koraikuttam Jain Tirthankara Sculpture, Estuary in the Thirupullani area for internship training. Thirupullani, Suresh Sudha Azhagan Memorial Government Higher Secondary School, Secretary of the Heritage Club, V. Rajaguru explained the historical significance of these places to the students. At that time, he said,

            In ancient times, ships would stop in the deep part of the port and load goods from it in small boats and unload them on the shore. The backwaters and their estuaries where rivers meet the sea have been of great help in this. In Koraikuttam near Thirupullani, the Kottakudi River meets the Sethukarai Sea. The mangrove forests are growing beautifully in its backwaters. This suggests that there may have been an ancient trading town and port in the Sethukarai area.

            Due to the increasing dominance of the Dutch in Kilakarai area, Chellamuthu Sethupathi decided to build a fort in Thirupullani for their security, and when Muthuramalinga Sethupathi became king, he built it as a palace in AD 1759. Later, to eliminate the British rule, he used this palace, which was located in a hidden forest area unknown to the outside world, as an arms factory and weapons depot. It is divided into four squares and has a total of 16 rooms and four ponds. Each part is connected to the other part at the top by a large log.

            In the 9th century AD sculpture of the headless 24th Jain Tirthankara Mahavira on the banks of the Kottakudi river in Koraikuttam, he is seated on a pedestal with three lion figures. The Adi Jaganatha Perumal Temple has been culturally associated with Islam since the Pandya period. The inscriptions here confirm this. He said that this is the temple with the most inscriptions in the district. Later, the students saw and learned about the architecture and sculptures of the temple.



நாளிதழ் செய்திகள்





Saturday, 11 October 2025

Thirumalai Sethupathi inscription found at Thiruvadanai

 

A 368-year-old Thirumalai Sethupathi inscription has been found at Kattukudi near Thiruvadanai in Ramanathapuram district.


On the information given by Dr.Palaniappan, the principal of the Government Arts and Science College, Thiruvadanai, that there was an inscription at Kattukudi, V. Rajaguru, the President of Ramanathapuram Archaeological Research Foundation with the help of former panchayat president Sasikumar, estampaged and studied the inscription on a stone pillar that had been broken into two pieces on the north-west of Kaikolar pond. V. Rajaguru said,

The stone pillar, which is 66 inches long and 14 inches wide, has a trident at the top and an inscription of 24 lines below it. It is mentioned that the king Regunatha Thirumalai Sethupathi as a virtue (punniyam) for him gave 50 kalam (measurement of capacity) Viraipadu to Thiruvadanai Adanai Nayakar temple garden, in the Saka Era 1579, in the Tamil year Yevilambi, in the month of Chithirai, during the auspicious period of Shukravaram, Punarpoosam, and Shuklapaksham Saptami.

The measurement of land required to sow a specific amount of grain is called Viraipadu. Out of this, 50 kalam Viraipadu  required land for sowing grains has been donated to the temple garden.

The king has ordered that this donation should be enjoyed as long as the Moon and the Sun are there. The inscription warns that the one who has destroyed this virtue would be considered to be committing the sin of killing a black cow on the bank of the Ganges. 


In this inscription, the kalam is mentioned by the symbol of ‘. 50 Kalam is first written as Tamil number and symbol, and then in writing. Its current Gregorian calendar year is 1657 AD. Thus, he said.

News paper Clippings 




திருவாடானை அருகே கட்டுகுடியில் திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுப்பு

 



இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கட்டுகுடியில் 368 ஆண்டுகள் பழமையான திருமலை சேதுபதி கல்வெட்டு  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கட்டுகுடியில் ஒரு கல்வெட்டு இருப்பதாக திருவாடானை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முதல்வர், பழனியப்பன் கொடுத்த தகவலின் பேரில், அவ்வூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சசிக்குமார் உதவியுடன்,  கைக்கோளர் ஊரணியின் வடமேற்கில் இரண்டாக உடைந்த ஒரு கல் தூணில் இருந்த கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு, படியெடுத்துப் படித்து ஆய்வு செய்தார். இதுபற்றி வே.இராஜகுரு கூறியதாவது,

66 இஞ்ச் நீளமும், 14 இஞ்ச் அகலமும் கொண்ட கல் தூணின் மேற்பகுதியில் திரிசூலமும், அதன் கீழே 24 வரிகள் கொண்ட கல்வெட்டும் உள்ளன. இதில், சக ஆண்டு 1579, தமிழ் ஆண்டு யேவிளம்பி, சித்திரை மாதத்தில் சுக்கிரவாரமும், புணர்பூசமும், சுக்லபட்சத்து சத்தமியும் பெற்ற புண்ணிய காலத்தில், ரெகுநாதத் திருமலைச் சேதுபதி காத்த தேவருக்குப் புண்ணியமாக, திருவாடானை, ஆடானை நாயகர் கோயில் திருநந்தவனத்துக்காக, கட்டுகுடியில் விரைப்பாடாக 50 கலம் மன்னரால் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அளவு தானியங்களை விதைப்பதற்குத் தேவைப்படும் நில அளவை விரைப்பாடு என்பர். இதில் 50 கலம் தானியங்களை விதைப்பதற்குத் தேவைப்படும் நில அளவு நந்தவனத்துக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

தானத்தை சந்திர சூரியன் இருக்கும் வரைக்கும் அனுபவித்துக் கொள்ள மன்னர்  கட்டளையிட்டுள்ளார். இந்தப் புண்ணியத்துக்கு அழிவு பண்ணியவன் கெங்கைக் கரையிலே, காராம் பசுவைக் கொன்ன பாவத்திலே போவானாகவும் என கல்வெட்டு எச்சரிக்கிறது. இதில் கலம் என்பது ‘ள’ என்ற குறியீடாக உள்ளது. 50 கலம் முதலில் தமிழ் எண் மற்றும் குறியீடாகவும், பின்னர் எழுத்தாலும் எழுதப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஆங்கில ஆண்டு கி.பி.1657 ஆகும். கல்லில் சில இடங்களில் எழுத்துகள் தேய்ந்து அழிந்துள்ளன.

திருவாடானை அருகில் மாஞ்சூரில் உள்ள மாறவர்மன் குலசேகரப்பாண்டியனின் 15ஆம் ஆட்சியாண்டு கி.பி.1283இல் அவ்வூர் சிவன் கோயிலுக்குக் கொடுத்த தானம் பற்றிய கல்வெட்டில், கட்டிகுடியில் இருந்த அப்பி வெட்டி நிலம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. கட்டிகுடி - மாஞ்சூர் 1 கி.மீ தூரம். கட்டிகுடி, இப்பொழுது கட்டுகுடி எனப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


நாளிதழ் செய்திகள்











Sunday, 5 October 2025

உயிர் கொடுத்து ஊர் காத்த ‘மடைச்சி’ சாத்தாயி - வே.இராஜகுரு

 


இராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை கண்மாய்க்குள் இருக்கும் பழமையான சாத்தாயி கோயிலைப் பாதுகாக்க இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இராஜசூரியமடை அருகில் சக்கரக்கோட்டை கண்மாயின் தெற்கில் பாழடைந்த நிலையில் சாத்தாயி கோயில் உள்ளது. இதுகுறித்து இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு கூறியதாவது,

நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். நீர்தான் அனைத்திற்கும் ஆதாரமானது. நீர் நிலைகளை உருவாக்குவது ஒரு மன்னனின் தலையாயக் கடமையாக கருதப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டத்தில் சங்கிலித் தொடர் போன்ற கண்மாய்களை எட்டாம் நாள் பிறை வடிவில் பாண்டியரும், சேதுபதிகளும் அமைத்து விவசாயத்தைப் பெருக்கினர்.



கண்மாய்களிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் வெளியேற மடை அமைப்பர்.  வைரம் பாய்ந்த பனை மரங்களின் உள் தண்டை நீக்கி அதை கண்மாய் கரையில் பதித்து, கோரை, நாணல், களிமண் கொண்டு அதை அடைத்து ஆரம்பகால மடைகள் உருவாக்கப்பட்டன. அதன் பிறகு பாறை, மரம், சுண்ணாம்பு, செங்கல் போன்றவை பயன்படுத்தி கட்டப்பட்ட மடைகள் வந்தன.

பாசனத்துக்காகவும், வெள்ளம் ஏற்படும்போதும் ஏரி, கண்மாய், குளம் ஆகியவற்றின் மடையைத் திறந்து மூடும் பணி செய்தவர்களை மடையர் எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. வெள்ளம் ஏற்படும்போது கண்மாயில் நீர் நிரம்பி கரை உடைந்து ஊர் அழிந்துவிடும் அபாயம் ஏற்படும். அச்சமயங்களில் இவர்களின் பணி மகத்தானது. இப்பணியை எல்லோராலும் செய் முடியாது. இதில் பயிற்சி பெற்றவர்களே இதைச் செய்ய முடியும். சில சமயங்களில் இப்பணி அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்துவிடும்.

அவர், வெள்ளக்காலத்தில் நிரம்பியுள்ள கண்மாய் நீரில் மூழ்கி மூச்சடக்கி, நீருக்கடியில் இருக்கும் மடையின் அடைப்பைத் திறந்துவிடுவார். அச்சமயம் வேகமாக வெளியேறும் நீர் அவரை உள் இழுக்கும். அதில் தப்பிப் பிழைத்தால் அவர் வீடு திரும்புவார். இல்லையேல் ஊருக்காக தன் இன்னுயிர் கொடுத்து உள்ளூர் மக்கள் மற்றும் மன்னர்களால் போற்றப்படுவார். தெய்வமாக வணங்கப்படுவார். விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகில் முதுகுடியில் குளத்தை திறக்கும் பணி செய்த போது ஊரின் நலனுக்காகத் இன்னுயிர் நீத்த பெருந்தேவப்பள்ளனின் பிள்ளைகளுக்கு, அவ்வூரார் கி.பி.1302-ல் உதிரப்பட்டியாக நிலம் வழங்கியுள்ளனர்.

சங்க காலத்திலேயே மடை அடைக்கும் பணியை பெண்களும் செய்துள்ளதை கீழடியில் கிடைத்த பானை ஓட்டில் எழுதப்பட்ட ‘மடைச்சி’ என்ற சொல் உணர்த்துகிறது.

இராமநாதபுரம் அருகே, வட்டவடிவமான சக்கரக்கோட்டை கண்மாயின் தெற்கிலுள்ள இராஜசூரியமடை, தனுக்காத்தமடை, பால்கரை ஆகிய ஊர்களின் விவசாயத்துக்காக சேதுபதி மன்னர்கள் புதிய மடைகளை அமைத்துள்ளனர்.  இதில் ராஜசூரியமடை, கி.பி.1676-ல் ராமநாதபுரத்தை ஆண்ட இராஜசூரிய சேதுபதி பெயராலும், அதன் அருகில் தனுக்காத்தமடை தளவாய் சேதுபதியின் தங்கை மகன் தனுக்காத்ததேவர் பெயராலும் உருவாக்கப்பட்டுள்ளது. மடைகளின் அருகில் உருவான ஊர்களும் அதன் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.

இராஜசூரியமடை அருகில், சக்கரக்கோட்டை கண்மாய்க்குள், மடைத்தூண்களைக் கொண்டு அமைத்த பழமையான ஒரு சிறிய கோயில் உள்ளது. சிற்பம் ஏதுமில்லாத இக்கோயில், மடையைத் திறந்து மூடும் பணியைச் செய்தபோது, இறந்துபோன சாத்தாயி என்ற இளம் பெண்ணுக்கானது ஆகும்.

கிழவன் சேதுபதி காலத்தில், ஒரு மழைநாளில், உடையும் நிலையில் இருந்த சக்கரக்கோட்டைக் கண்மாயின் தெற்கு மடைக்குப் பொறுப்பாளரான சாத்தாயி, மடையைத் திறந்து நீரை வெளியேற்றியபோது, நீரில் மூழ்கி, உயிரிழந்துள்ளார். அதை நினைவு கூறும் விதத்தில், அவர் இறந்த இடத்தில், மடை போன்ற அமைப்பில் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. வழிபாட்டில் இருந்த இக்கோயில் தற்போது பழுதடைந்தநிலையில் உள்ளது. சாத்தாயி போன்ற ஒரு ‘மடைச்சி’ பெண் இல்லாததால் இராஜசூரியமடை அருகில் இருந்த தனுக்காத்தமடை என்ற ஊர், சக்கரக்கோட்டைக் கண்மாய் உடைந்ததால் 1980-ல் அழிந்து போனது குறிப்பிடத்தக்கது.

இதுபோல மடையைத் திறக்கும்போது இறந்துபோய் ஊரைக் காத்தவர்களை மடைக்கரையான் என்ற பெயரிலும் தெய்வமாக மக்கள் பல ஊர்களில் வழிபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்




Thursday, 25 September 2025

Villages named after deer and antelope across Tamil Nadu, researcher V.SIVARANJANI informs

 


Palkarai V.Sivaranjani, a researcher at the Ramanathapuram Archaeological Research Foundation, has found that villages named after the name of deer and antelope told in Tamil literature are widespread across Tamil Nadu. Regarding this, V. Sivaranjani said,


There are more than 100 villages under the common name of deer, such as Manur, Manupatti, Mankanur, Mankarattupalayam, Mankulam, Mancheri, Mankadu, and Mankundu. There are also villages named after the names of deer and antelope species.


Based on the antlers of deer mentioned in Tamil literature, they are divided into two species: Iralai (Antelope) and Kalai (Deer). Antelope Possess horns, which are a permanent, unbranched structure. Deer have antlers, which are shed annually and regrow. In the Antelope species, Iralai (blackbuck), Navvi (Chinkara), Maraiyan (Nilgai), in the Deer species, Uzhai (Chital) and Kadaman (sambar) are mentioned in Tamil literature. There are villages all over Tamil Nadu with their names.




Antelope

Tevaram calls the male blackbuck with horns and dark body ‘Karuman’. There are many villages with this name like Karmangudi, Karumangadu, Karumangkulam, Karumapalayam, Karumanjirai, Karumapuram, Karumanthurai, Karumanur. Because of its twisted horns, it was called Murukkuman, and because it lives in grasslands, it was called Pulvai. There are villages with names like Murukkodai, Murukkampattu, Murukkambadi, Murukkankuttai, Murukkanparai, Pulvaikkulam, Pulvaikkarai, Pulvaipatti. It is called Maraiyan (Nilgai) because it resembles a cow, and there are villages named after it like Maraikulam, Maraiyur, and Marainadu.

Deer

Chital, a Deer species, the spotted deer with antlers is also called Uzai, Kalaiman. There are places with this name like Kalaikurichivayal, Kalaikudipatti, Kalaiyanvilakam, Kalaiyanur, Kalaiyur, Kalaikulam, Uzhayur, Uzhakudi, Pulliman Kombai, Pulimankulam.

The deer with antlers without spots is called kadaman (sambar). There are many places with this name like Kadamankulam, Kadamakuttai, Kadamanur. The fact that villages across Tamil Nadu are named after deer and antelope species mentioned in Sangam literature, which is over 2000 years old, is evidence of the continuity of culture.

NEWS







மான் பெயரில் தமிழ்நாடு, கேரளா, இலங்கையிலும் ஊர்கள் - ஆய்வாளர் தகவல்

 

மான் பெயரில் தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்ல, கேரளாவில் மறையூர், இலங்கையில் மாங்குளம் உள்ளிட்ட ஊர்கள் உள்ளன.

இயற்கையின் கரம்கோர்த்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள். மக்கள் தாம் வாழும் இடம், வாரிசு, நீர்நிலை, மலை, வயல்வெளி என அனைத்திற்கும் தம்மைச் சுற்றியுள்ள மரம், செடி, கொடி, பூ, பறவை, விலங்கு, மண், காலம், ஐம்பூதம், முதலியவை சார்ந்த பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தார்கள்.

மான் எனும் பொதுப்பெயரிலும், இலக்கியங்கள் குறிப்பிடும் பெயரிலும் தமிழ்நாடெங்கும் பரவலாக ஊர்கள் உள்ளதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் பால்கரை வே.சிவரஞ்சனி கண்டறிந்துள்ளார். இதுபற்றி வே.சிவரஞ்சனி கூறியதாவது,

மான் எனும் பொதுப்பெயரில் மானூர், மானுப்பட்டி, மான்கானூர், மன்கரட்டுப்பாளையம், மாங்குளம், மாஞ்சேரி, மாங்காடு, மான்குண்டு போன்ற 100க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளதுபோல், மான் இனத்தின் பெயரிலும் உள்ளன.



தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மானின் கொம்புகளைக் கொண்டு அவற்றை இரலை, கலை என இரு இனமாகப் பகுப்பர். இரலை இனத்தின் கொம்புகள் உள்துளை, கிளைகள் இன்றிக் கெட்டியாக இருக்கும். கீழே விழுந்து புதிய கொம்பு முளைக்காது. உள்துளையுடன் கிளைகள் கொண்ட கலை இனத்தின் கொம்பு, குறிப்பிட்ட கால வெளியில் கீழே விழுந்து புதிதாக முளைக்கும்.



இரலை இனத்தில், இரலை, நவ்வி, மரையான், கலை இனத்தில் உழை, கடமான் ஆகிய வகைகள் உள்ளன. இதன் பெயர்களில் தமிழ்நாடெங்கும் ஊர்கள் உள்ளன.

கொம்புடன், கருமையான உடல் கொண்ட இரலையின் ஆண்மானை தேவாரம் ‘கருமான்’ என்கிறது. இப்பெயரில் கார்மாங்குடி, கருமங்காடு, கருமாங்குளம், கருமாபாளையம், கருமஞ்சிறை, கருமாபுரம், கருமாந்துறை, கருமனூர் போன்ற பல ஊர்கள் உள்ளன.

முறுக்கிய கொம்புகளால் இதை முறுக்குமான் எனவும், புல்வெளிகளில் வாழுவதால் புல்வாய் எனவும் அழைத்தனர். முறுக்கோடை, முருக்கம்பட்டு, முருக்கம்பாடி, முருக்கன்குட்டை, முருக்கன்பாறை, புல்வாய்க்குளம், புல்வாய்க்கரை, புல்வாய்பட்டி போன்ற பெயர்களில் ஊர்கள் உள்ளன. நவ்வி மான் பெயரில் ஊர் இல்லை. பசுவைப் போல் இருப்பதால் மரையான் எனப்படும் இதன் பெயரில் மரைக்குளம், மரையூர், மறைநாடு போன்ற ஊர்கள் உள்ளன.

கலை இனத்தில், கிளையுள்ள கொம்புகளுடன் இருக்கும் உழைமானின், உடலில் புள்ளிகள் காணப்படுவதால் இதை கலைமான், புள்ளிமான் எனவும் அழைப்பர். கலைக்குறிச்சிவயல், கலைகுடிபட்டி, கலையன்விளாகம், கலையனூர், கலையூர், கலைக்குளம், உழையூர், உழக்குடி, புள்ளிமான் கோம்பை, புலிமான்குளம் என ஊர்கள் உள்ளன.

கிளையுள்ள கொம்புடன், உடலில் புள்ளி இல்லாத கடமான் பெயரில் கடமான்குளம், கடமாகுட்டை, கடமனூர், கடமான் கொல்லை, கடமாங்குடி, கடமஞ்சேரி, கடத்திக்குட்டை போன்ற பல ஊர்கள் உள்ளன.

          2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மான் இனங்களின் பெயரில் தமிழ்நாடு முழுவதும் ஊர்கள் அமைந்திருப்பது தமிழர் பண்பாட்டின் தொடர்ச்சிக்குச் சான்றாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்